ஜெர்மனியிடம் 3000 கோடி டாலர் இழப்பீடு கேட்கிறது, நமீபியா

பதிவு செய்த நாள் : 18 மார்ச் 2017 21:04

நபீபிய இனப்படுகொலை: எஸ். பெக்ரேர் வரைந்த வண்ண ஓவியம்

விண்டோக்:

ஜெர்மனியின் காலனி ஆதிக்கத்தில் இருந்தபோது கொல்லப்பட்ட மக்களுக்காக, நமீபியா இப்பொழுது ஜெர்மனியிடம் 3000 கோடி டாலர் இழப்பீடு கோரியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான நமீபியா 19ம் நூற்றாண்டில் ஜெர்மனியின் காலனி நாடாக இருந்தது. 1884ல் இருந்து 1915 வரை ஜெர்மனி நமீபியாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அப்போது நமீபியா தெற்கு ஆப்பிரிக்க ஜெர்மனி என்று அழைக்கப்பட்டது. அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவின் கட்டுப்பாட்டில் நமீபியா சென்றது. சுமார் 75 ஆண்டுகளுக்குப் பின் 1966ல் அந்த நாடு சுதந்திரம் பெற்றது.

ஜெர்மனியின் ஆதிகத்தில் இருந்த 1904 ஆண்டு முதல் 1908 ஆண்டு வரை நமீபிய பழங்குடி மக்களான ஹெரேரோ, நாமா இனங்களைச் சேர்ந்தவர்களை ஜெர்மனியின் அரசுப் படைகள் கொன்று குவித்தன. 65,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டு ள்ளது.

இதற்கு இழப்பீடாக ஜெர்மனி தங்களுக்கு 3,000 கோடி டாலர் தர வேண்டும் என்று நியூயார்க்கில் உள்ள நீதிமன்றத்தில் ஹெரேரோ, நாமா இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்கு நமீபியா அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி சர்வதேச நீதிமன்றத்தை நாடவும் நமீபிய அரசு தீர்மானித்துள்ளது. அதற்காக லண்டனில் உள்ள புகழ்பெற்ற வழக்கறிஞர்களிடம் நமீபியா பேச்சு நடத்தி வருகிறது.

முந்தைய காலங்களில் ஜெர்மனியிடம் இழப்பீடு தொகை கோருவதை நமீபியா அரசு தவிர்த்து வந்தது.

ஜெர்மனியின் ஆதிக்கத்தில் நமீபியா இருந்த காலத்தில் இனப்படுகொலை நடந்ததை சில ஜெர்மனி அதிகாரிகளும் ஒத்துக் கொண்டுள்ளனர். ஆனால், இழப்பீடு தர முடியாது என்று ஜெர்மனி அரசு மறுத்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான டாலர் தொகையை நமீபிய மக்களின் நலனுக்காக தாங்கள் செலவிட்டதாகவும் ஜெர்மனி கூறி வருகிறது.