நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: மசோதாவை உடனே நிறைவேற்றக் கோரி மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

பதிவு செய்த நாள் : 17 மார்ச் 2017 19:55


சென்னை

நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டுக்கு மசோதாவை உடனே நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மிக முக்கியமான மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைநிறைவேற்றுவதற்கு பயன்தரக்கூடிய ஆரம்பகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உங்களை வலியுறுத்தும்பொருட்டு இக்கடிதத்தை நான் எழுதுகிறேன். இது உண்மையில் கவலையளிக்கிறது. “மாறிவரும் உலகில் பெண்களின் பணி: 2030-ல் உலகம் 50-50” என்ற உன்னதமான கருப்பொருள் கொண்டு “சர்வதேச மகளிர் தினம்-2017”த்தை ஐக்கிய நாடுகள் சபை கொண்டாடுகிறது. அதோடு, சர்வதேச ரீதியாக எல்லா பெண்களுக்கும் பொருளாதார, சமூக மற்றும் பாலின நீதியை பெற்றிட கடினமான முயற்சியில் ஐக்கியநாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது.

பெண்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை கோரி தொடர்ச்சியாக பணியாற்றுவதிலே திமுக முன்னணியில் நிற்கிறது. அதுமட்டுமல்லாமல், பெண் விடுதலைக்காக உளப்பூர்வமாக திமுக தொடர்ச்சியாக போராடிவருகிறது. பெண்களின் உரிமைகளே மனித உரிமைகள் என்பதை திமுக நேர்மையுடனும், தீவிரமாகவும் கருதி வருகின்ற காரணத்தாலேயே தமிழகத்தில் பெண்கள் மேம்பாட்டுக்காகவும், நன்மதிப்புக்காகவும் சட்டங்களை கொண்டுவந்தது. ஹிந்து வாரிசுரிமை சட்டம் (தமிழ்நாடு சட்டதிருத்தம்) 1989-ன் மூலம் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது, உள்ளாட்சித் தேர்தலில் 33 சதவிகித இடஒதுக்கீடு அளித்தது, அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 சதவிகித ஒதுக்கீடு தந்தது மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலமாக பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை பெற்றுத்தந்தது உள்ளிட்டவை தமிழகத்தில் திமுக ஆட்சி காலத்தில் சட்டமாக்கி நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான பெண்கள் நலன் சார்ந்தமேம்பாட்டு நடவடிக்கைகள் ஆகும்.

மகளிர் இடஒதுக்கீட்டின் வரலாறானது 1996ம் ஆண்டு ஆரம்பமாகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக பல்வேறுமுயற்சிகளுக்கு பின்னும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறவில்லை. பெண்கள் முன்னேற்றம் மற்றும் சமூக சமத்துவத்தின் மீது அக்கறை கொண்டவரான முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 26.6.1998 மற்றும்22.11.1999 ஆகிய தினங்களில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற பெரும் முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால், சில காரணங்களால் அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது. மகளிர் முன்னேற்றத்திற்கான பணிகள் மற்றும் சமூக நீதி இயக்கத்திற்கான எங்கள் தலைவர் கலைஞர் அவர்களும் பல்வேறு மகளிர் மாநாடுகளில்மகளிர் இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை விரைந்து நிறைவேற்றிட தீர்மானங்களை கொண்டு வந்ததோடு, 24.11.2014 அன்று வாஜ்பாய் அவர்கள் மகளிர் இடஒதுக்கீட்டிற்காக மேற்கொண்ட முயற்சிகளையும் குறிப்பிட்டு, நாட்டில் உள்ள மகளிர் பெருமைப்படுத்தும் விதமாக மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்றிடுமாறு உங்களுக்கு கடிதம் எழுதினார். கனிமொழி எம்.பி. அவர்களின் தலைமையில் செயல்படும் திமுக மகளிர் அணிசார்பில்,  ’உலக மகளிர் தினம் - 2017’ஐ முன்னிட்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டிற்கு நான் தலைமையேற்ற போது,சட்டமன்றங்களிலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.

அரசியலில் பெண்களின் முன்னேற்றத்திற்கான இன்றிமையாத சமூகநீதி மற்றும் பாலின சமத்துவத்தின்பயன்களில் சம வாய்ப்புகளை வழங்கவும், நம் நாட்டின் மதிப்புக்குரிய அரசியல் பதவிகளில் பெண்கள் பங்கேற்க வழிவகை செய்யும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்றதாங்கள் நேரடியாக தலையிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு, மு.க. ஸ்டாலின் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.