அதானிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அதிர்ச்சிக் கடிதம்

பதிவு செய்த நாள் : 17 மார்ச் 2017 01:48


மெல்பர்ன்,

இந்தியாவில் தற்பொழுது சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய குழு ஒன்றின் மூலமாக வேண்டுகோள் கடிதம் ஒன்றினை பிரபல இந்திய தொழிலதிபர் கௌதம் அதானிக்கு ஆஸ்திரேலிய பிரபல கிரிக்கெட் வீரர்கள் லான் மற்றும் கிரேக் சப்பல் ஆகிய இருவரும் கொடுத்தனுப்பியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள மாபெரும் பவளப் பாறை தொடர் கடற்பூங்கா (கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பார்க்) என்ற இடத்திற்கு அருகில் நிலக்கரி சுரங்கம் ஒன்றை தோண்ட கௌதம் அதானிக்கு ஆஸ்திரேலிய மத்திய அரசும், குயின்ஸ்லாண்ட் மாநில அரசும் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த அனுமதியின்படி ஆண்டுக்கு 11 லட்சம் கன டன்கள் நிலக்கரியினை அதானி நிறுவனம் தோண்டி எடுக்கலாம். இந்த நிலக்கரி சுரங்க திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீடு 21,700 கோடி டாலர் ஆகும்.

இந்த நிலக்கரி சுரங்க திட்டத்தினால் ஆஸ்திரேலியாவின் சுற்றுசூழல் கடுமையாகப் பாதிக்கப்படும் என அங்குள்ள சுற்றுசூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான சுற்றுலா தளமாக கருதப்படும் கிரேட் பாரியர் ரீஃப் (பவளப் பாறைத் தொடர்) கடுமையாக பாதிக்கப்படும் என்று அங்குள்ள மக்கள் கொந்தளித்து போய் உள்ளனர்.

இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கிறது. எதிர்ப்பு போராட்டத்தில் இப்போது பிரபல கிரிக்கெட் வீரர்களும் களமிறங்கி உள்ளனர். தங்கள் கோரிக்கை கடிதத்தை ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் மூலம் அதானி கையில் தரும்படி கிரிக்கெட் வீரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதானி என்ன பதில் சொல்லப்போகிறார் என்பதை பொறுத்து இருந்துதான் அறிய வேண்டும்.