பெங்களூருவில் பாஜக கவுன்சிலர் குத்திக்கொலை

பதிவு செய்த நாள் : 14 மார்ச் 2017 20:20

பெங்களூரு,
பெங்களூரு மாவட்டம் அனேக்கல் பகுதியில், பாஜக கவுன்சிலரும் தலித் தலைவருமான ஸ்ரீநிவாஸ் பிரஸாத் சில மர்ம நபர்களால் குத்திக்கொல்லப்பட்டார்.
அனேக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ் பிரஸாத் (வயது 38). பாஜக கவுன்சிலர். கித்தகானஹலி வாசு என்று பிரபலமாக அறியப்படுபவர் இவர். இவரை இன்று காலை 5 மணியளவில், அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள், கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொன்றனர். கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநில ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் பத்மர் இந்தக் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ‘‘கடந்த 2 வருடங்களில், 10க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஜனநாயகத்திற்கு எதிரான செயல். இதை மேலும் தொடராமல் தடுத்து நிறுத்த, மாநில அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.’’ என்று கூறினார்.

கொல்லப்பட்ட ஸ்ரீநிவாஸ் பிரஸாத் மிகவும் அமைதியானவர் என்றும் அவர் மீது இதுவரை எந்த வழக்குகளும் இல்லை எனவும் ராஜேஷ் பத்மர் தெரிவித்தார்.

கடந்த வருடம் அக்டோபர் 16ம்தேதி ஆர்.எஸ்.எஸ் தொண்டர் ஒருவர் பெங்களூருவில் கொல்லப்பட்டார். அதை எதிர்த்து பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.