இந்திய தொடர்: ஸ்டார்க் விலகல்

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 09:04


ராஞ்சி,:

வலது கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய தொடரிலிருந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் விலகினார். இது ஆஸி., அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா வந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி நான்கு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. புனேயில் நடந்த முதலாவது போட்டியில் 333 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி., இமாலய வெற்றி பெற்றது. இதற்கு பதிலடியாக பெங்களூருவில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து மூன்றாவது டெஸ்ட் ராஞ்சியில் வரும் 16ம் தேதி தொடங்குகிறது.

பெங்களூருவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸி., வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க்கிற்கு காலில் காயம் ஏற்பட்டது. இதனால், இவர் பந்து வீச சிரமப்பட்டார். அதாவது வலது பாதத்தில் இவருக்கு காயம் இருந்தது. தொடர்ந்து வலி குறையாததால் ‘ஸ்கேன்’ எடுக்கப்பட்டது. இதில், அவரது பாதத்தில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவர் இந்திய தொடரிலிருந்து விலகினார். இவருக்கு பதில் மாற்று வீரரை ஆஸி., நிர்வாகம் அறிவிக்கவில்லை. இருந்தும் அணியில் இடம்பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஜேக்சன் பேர்டு, ராஞ்சி போட்டியில் ஹேசல்வுட்டுடன் புதிய பந்தை பகிர்ந்து கொள்ள உள்ளார்.  

ஏற்கெனவே ஆல்ரவுண்டர் மிட்சல் மார்ஷ் தோள்பட்டை காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதையடுத்து தற்போது ஸ்டார்க் விலகல் அந்த அணிக்கு நிச்சயம் பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. உலகின் சிறந்த ஆல்&ரவுண்டரான ஸ்டார்க், இந்தத் தொடரில் முக்கிய விக்கெட்டுகளை முக்கியத் தருணங்களில் கைப்பற்றினார், குறிப்பாக புனேயில் அவர் புஜாரா, கோஹ்லியை அடுத்தடுத்து வீழ்த்தியது இந்திய அணியை சரிவு பாதைக்கு கொண்டு சென்றது. இரண்டு டெஸ்டில் அவர் 5 விக்கெட், 118 ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு அரைசதம் அடங்கும். ஆஸி., அணியில் முக்கிய வீரராக ஸ்டார்க் உள்ளார். இவர் இலங்கையில் கிட்டத்தட்ட இதை விடவும் மோசமான சுழற்பந்து ஆடுகளத்தில் அபாரமாக பந்து வீசி 3 டெஸ்டில் 24 விக்கெட் சாய்த்தது குறிப்பிடத்தக்கது. மிட்சல் மார்ஷ் இடத்தில் மற்றொரு ஆல்&ரவுண்டர் ஸ்டாய்னிஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நடக்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளுக்குள் ஸ்டார்க் குணமடைந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டார்க் இடத்தில் பாட் கம்மின்ஸ் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.