வில்லியம்சன் சதம்: நியூசி., பதிலடி

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 09:03


டுனிடின்:

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. முன்னதாக நியூசிலாந்து தனது முதல் இன்னிங்சில் 341 ரன் எடுத்தது. கேப்டன் வில்லியம்சன் சதம் அடித்து அசத்தினார்.

டுபிளசி தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி நியூசிலாந்து சென்று மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் டுனிடனில் கடந்த 8ம் தேதி துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் ‘பேட்’ செய்தது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 308 ரன்கள் எடுத்தது. எல்கர் (140) சதம், பவுமா (64), கேப்டன் டுபிளசி (52) இருவரும் அரைசதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் பவுல்ட் 4, வாக்னர் 3, படேல் 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து தனது முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து இரண்டாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்திருந்தது. லதாம் (10), ராவல் (52), நிகோலஸ் (12) ஆட்டமிழந்தனர். கெண்டைக்கால் சதையில் ஏற்பட்ட காயம் காரணமாக ராஸ் டெய்லர் (8) ‘ரிட்டையர் ஹர்ட்’ ஆனார். கேப்டன் வில்லியம்சன் (78), படேல் (9) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த நிலையில், போட்டியின் மூன்றாம் நாளான நேற்று, தனது இன்னிங்சை நியூசிலாந்து தொடர்ந்தது. இரவு ஆட்டக்ககாரராக களமிறங்கிய படேல் (16) பிலாண்டர் வேகத்தில் சரிந்தார்.நீஷம் (7) நீடிக்கவில்லை. பின் வில்லியம்சனுடன் விக்கெட்கீப்பர் வாட்லிங் இணைந்தார்.

இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். தொடர்ந்து அசத்திய வில்லியம்சன், டெஸ்ட்  கிரிக்கெட்டில் தனது 16வது சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவர் 195 பந்தில் சதம் அடித்தார். ரபாடா வேகத்தில் வில்லியம்சன் 130 ரன் (241 பந்து, 18 பவுண்டரி) சரிந்தார். சான்ட்னர் (4) ஏமாற்றினார். வாட்லிங் (50) அரைசதம் அடித்து கைகொடுத்தார். வாக்னர் (32), பவுல்ட் (2) வெளியேற நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 341 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மீண்டும் களம் இறங்கிய ராஸ் டெய்லர் (15) ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா தரப்பில் மகாராஜ் 5, மார்கல், பிலாண்டர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் நியூசிலாந்து 33 ரன் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கிய தென் ஆப்ரிக்கா, ஸ்டீவ் குக் (0) விக்கெட்டை இழந்து 38 ரன்கள் எடுத்துள்ளது. எல்கர் (12), ஆல்லா (23) ஆட்டமிழக்காமல் உள்ளனர். பவுல்ட் ஒரு விக்கெட் வீழ்த்தினார். தென் ஆப்ரிக்கா தற்போது 5 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 9 விக்கெட்டுகள் மீதி உள்ளன. இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதி உள்ள நிலையில், இப்போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.