வடகொரியா வாலாட்டம்... அமெரிக்காவுடன் ஜப்பான் போர் ஒத்திகை

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 07:58


டோக்கியோ:

வடகொரியாவின் வாலாட்டத்தை தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து ஜப்பான் போர் ஒத்திகையில் ஈடுபட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் விதிமுறைகளை மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்காவும், தென்கொரியாவும் அடிக்கடி போர் ஒத்திகை நடத்தி வருகின்றன.

கடந்த 6ம் தேதி நான்கு ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்தது. வடகொரியாவின் ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் வகையிலான தடுப்பு வாகனங்கள் தென்கொரியாவில் அமைக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியது. ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை அழிக்கவே ஏவுகணை சோதனை நடத்தியதாக வடகொரியா தெரிவித்தது.

வடகொரியாவின் இந்த பகிரங்க மிரட்டலால் ஜப்பான் அதிர்ச்சியடைந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவுடன் இணைந்து, ஜப்பானும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது. இந்த போர் ஒத்திகை சீனாவின் கிழக்கு கடல் பகுதியில் நடந்து வருகிறது.

கடல் எல்லை விவகாரத்தில் சீனா சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடல் பகுதியை சுற்றிலும் போர் ஒத்திகை நடந்து வருவதால் சீனாவும் அதிர்ச்சியடைந்துள்ளது.