மகப்பேறு விடுமுறை காலம் உயர்த்தப்பட்டது பெண்கள் முன்னேற்றத்தில் மைல்கல் : மோடி பெருமிதம்

பதிவு செய்த நாள் : 11 மார்ச் 2017 00:00

புதுடில்லி,

மகப்பேறு விடுமுறை காலத்தை உயர்த்துவதற்கு வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது, பெண்கள் முன்னேற்றத்திற்காக பா.ஜ.க. அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் ஒரு மைல் கல் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார் .

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மகப்பேறு விடுமுறை தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது. அமைப்புசார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை காலத்தை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயர்த்த இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது பெண்கள் முன்னேற்றத்திற்காக பா.ஜ.க. அரசு எடுத்து வரும் முயற்சிகளில் ஒரு மைல் கல் என டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகப்பேறு விடுமுறைக் காலம் உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது என்றும் மோடி கூறியுள்ளார்.

இந்த மசோதாவின்படி 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த பெண் ஊழியர்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுமுறை அளிக்கப்பட வேண்டும். ஆனால், முதல் இரு குழந்தைகளுக்கு மட்டுமே இது பொருந்தும். மூன்றாவது குழந்தைக்கு 12 வார காலங்கள் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும்.

50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களில் குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்றும் இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு தன் குழந்தையைப் பார்க்க பெண் ஊழியருக்கு தினசரி 4 முறை அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.