தென்கொரிய அதிபர் பதவி நீக்கத்தை உறுதி செய்தது நீதிமன்றம்

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2017 22:36
தென்கொரியா அதிபர் பார்க் கியுன் ஹை க்கு எதிரான போராட்டம்


தென்கொரியா,

தென்கொரியா அதிபரான பார்க் கியுன் ஹை, ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரோயகம் செய்த குற்றங்களால் பதவி இழந்தார். அவரது பதவி நீக்கத்தை தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்தது. இதன்மூலம் தென் கொரியாவின் முதல் பெண் அதிபரான பார்க் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் அதிபர் என்ற அவப்பெயரையும் பெற்றார்.

தென் கொரியாவின் முன்னாள் பிரதமர் பார்க் சுங் ஹைவின் மகளான பார்க் கியுன் ஹை, தென்கொரியாவின் முதல் பெண் அதிபராக பெரும்பான்மை ஆதரவோடு 2012ம் ஆண்டு பதவியில் அமர்ந்தார்.

பார்க்கின் பதவிகாலத்தில் அவர் மீது தொடர்ந்து பல ஊழல் குற்றசாட்டுகள் எழுந்தன. அவரது பள்ளி தோழியான சோய் சூன் சில், அதிபரின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசு விவகாரங்களில் தலையிட்டு வந்தார். அவர் மீது பல குற்றசாட்டுகளும் சந்தேகங்களும் எழுந்த போதும் அதிபர் பார்க் அதை கண்டுகொள்ளவில்லை. இதனால் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் கடும் அதிருப்திக்கு ஆளானார்.

இதனால் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பல லட்சம் மக்கள் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தினர். அதன் அடிப்படையில் தென்கொரியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் மாதம், அவர் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரோயகம் செய்த குற்றத்திற்கு வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தது. இதைத் தொடர்ந்து, பார்க் பதவி இழந்தார். அரசியலமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவில் அவரது குற்றங்கள் நிருபிக்கப்பட்டு, அவரை பதவி நீக்கம் செய்து தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக தன் அதிபர் பதவியை இழந்தார் பார்க்.

இந்த தீர்ப்பு பற்றி நாடாளுமன்ற குழுவை சேர்ந்த குவான் சியோங் டாங் கூறுகையில்,  சட்டத்திற்கு முன்பு அதிபர் உட்பட அனைத்து மக்களும் சமம் என்பதை இந்த தீர்ப்பு நிருபித்து உள்ளது என்றார்.

நீதிமன்றத்தின் வெளியே பார்கின் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்போர் என பலர் கூடியிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 2 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.