செலுலாய்ட் சோழன் சிவாஜி தொடர் 167– சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 12 மார்ச் 2017

தமிழ் திரையுலகைச் சார்ந்தவர்களில் குறிப்பாக நடிகைகளில் ஜெயலலிதா அளவுக்கு படிக்கும் பழக்கம் தீவிரமாக உள்ளவர்கள் அந்தக் காலகட்டத்தில் யாரேனும் இருந்தார்களா என்பது எனக்கு சந்தேகமே. அரசியல் தொடர்பான புத்தகங்களிலும் அவர் ஆர்வம் காட்டியதுண்டு.

ஆனால், அவர் பின்னாளில் மாநில முதலமைச்சராக வருவாரென என்னால் அப்போது கணிக்க முடியவில்லை.’ இவ்வாறு ஏவி.எம். சரவணன் சொல்கிறார்.  இந்த ஆண்டு அந்த இன்னொரு படம் `வியட்நாம் வீடு’. இது சிவாஜியின் சொந்த தயாரிப்பு.  இந்தப் படத்தின் மூலமாகத்தான் எழுத்தாளர் சுந்தரம் ‘வியட்நாம் வீடு’ சுந்தரமானார். நூறு படங்களில் நடித்த பிறகு சிவாஜி மீண்டும் மேடைக்கு வந்த நாடகம் இது.

`ஏன் நீங்கள்தான் பெரிய நடிகராயிற்றே? ஏன் மீண்டும் மேடைக்கு வந்தீர்கள்? ‘சிவாஜியிடம் ஒரு முறை கேட்டேன்.

`ஒரு கலைஞன் அவனுடைய திறமையை நேரடியாக மக்கள் முன்னாடி நிரூபிக்கணும். அப்போ அவங்க கொடுக்கிற கைத்தட்டலும் பாராட்டும்தான் ஓர் உண்மையான கலைஞனுக்கு வெகுமதி. சினிமாவில சம்பாதிக்கிறது வாழ்க்கைக்கு. மேடைதான் ஒரு கலைஞனுக்கு கிடைக்கிற உண்மையான அங்கீகாரம்’ என்றார் சிவாஜி.

 குடும்பத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளை வைத்து இந்த நாடகத்தை எழுதியிருந்தார் சுந்தரம். சிவாஜியும், பத்மினியும் பிராமணத்தமிழ் பேசி அருமையாக நடித்தனர்.  இந்த படத்தை இயக்கியவர் பி. மாதவன்.  இந்த வருடம் வந்த இன்னொரு படம் `எதிரொலி.’ இந்த  படத்தை இயக்கியவர் கே. பாலசந்தர். இந்த படம் சிவாஜி படமாகவும் இல்லை  கே.பி. படமாகவும் இல்லை. அதனால் படம் தோல்வியடைந்தது.  

இந்த வருடத்தில் வந்த மற்ற படங்கள் ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’. இதில் 15.08.1970ம் வருடம் வந்த படம் ‘ராமன் எத்தனை ராமனடி’. 20.10.70ம் வருடம் தீபாவளி நாளில் வந்த இரண்டு படங்கள் ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’. இதில் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் சாந்தி தியேட்டரில் வெளிவந்தது. பக்கத்திலேயே இருந்த தேவி பாரடைஸ் தியேட்டரில் வெளியான படம் சொர்க்கம். ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ மூன்றுமே நூறு நாட்களை கடந்து ஓடின. ‘ராமன் எத்தனை ராமனடி’, ஓர் ஏழை கிராமத்தான் பெரிய நடிகனாவது மாதிரியான கதை. படம் படு அமர்க்களமாக ஓடியது.  இந்த படத்தில் சிவாஜி தொலைக்காட்சிக்காக நடித்த ‘சத்ரபதி சிவாஜி’ காட்சிகளை படத்தில் இணைத்திருந்தார்கள்.  இந்த தொலைக்காட்சி படத்திற்கு மட்டும் தஞ்சைவாணன் வசனமெழுதியிருந்தார்.  படத்தின் மொத்த கதை – வசனத்தையும் பாலமுருகன் எழுதியிருந்தார். ‘எங்கிருந்தோ வந்தாள்’ படம் பாலாஜியின் தயாரிப்பு.  இந்திப் படமான ‘கிலோனா’வின் தமிழ் வடிவம்தான் ‘எங்கிருந்தோ வந்தாள்’.  இந்தியில் சஞ்சீவ் குமார் நடித்திருந்தார். ஆனால், தமிழில் சிவாஜி நடித்ததை பார்த்த சஞ்சீவ் குமார் `இதில் ஒரு சதவீதம் கூட நான் நடிக்கவில்லை’ என்றார்.

 இந்த படத்தின் கிளைமாக்ஸை எடுக்கும்போது ஒரு சம்பவம் நடந்தது. இந்தியிலிருந்து கொஞ்சம் மாற்றம் செய்ய நினைத்தார் இயக்குனர் ஏ.சி. திருலோகசந்தர். அவர் செய்ய நினைத்த மாற்றங்களின்படி கிளைமாக்ஸ் முழுவதும் ஜெயலலிதா மீதுதான் இருக்கும்.  காலையில் மற்ற காட்சிகளை எடுத்தார் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். மதிய உணவுக்குப் பிறகு கிளைமாக்ஸ் எடுக்க வேண்டும். அது முழுவதும் ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இதை எப்படி கதாநாயகன் சிவாஜியிடம் சொல்வது? தயங்கிக் கொண்டேயிருந்தார் இயக்குநர் திருலோகசந்தர்.

நேரமாகிக் கொண்டிருந்தது. சிவாஜி திருலோக்கை அழைத்தார். `ஏன், என்ன லேட்?’ என்றார்.

`ஒரு விஷயத்தை உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலே.’

`பரவாயில்லை சொல்லுங்க.’

கிளைமாக்ஸ் முழுவதும் அம்மு(ஜெயலலிதாவை நெருக்கமானவர்கள் அப்படித்தான் அழைப்பார்கள்) மேலே இருக்கும்!’ என்றார் திருலோக்.

`அதனால என்ன? படத்தின் டைட்டில் ‘எங்கிருந்தோ வந்தாள் தானே? வந்தான் இல்லையே?’ என்றார் சிவாஜி.

 அவருக்கு அவருடைய பாத்திரத்தை விட படத்தின் வெற்றிதான் முக்கியம். அந்த படத்தின் கிளைமாக்ஸில் ஜெயலலிதா பின்னி எடுத்திருப்பார். அந்த படம் இந்திப் படத்தின் ரீமேக்காக இல்லாமலிருந்திருந்தால், அந்தப் படத்திற்கு ஜெயலலிதாவிற்கு தேசிய விருது கிடைத்திருக்கும்.

ஜெயலலிதா நடிக்கும்போது தியேட்டரில் கைத்தட்டல் பலமாக இருக்கும். அதற்கு சிவாஜி காட்டும் ரீயாக்‌ஷனுக்கு விசில் பறக்கும். ‘ராமன் எத்தனை ராமனடி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘சொர்க்கம்’ ஆகிய மூன்று படங்களிலும் இன்னொரு பெரிய ஹீரோ, எம்.எஸ். விஸ்வநாதன். மூன்று படங்களின் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்!

‘சொர்க்கம்’ படத்தை தயாரித்து இயக்கியவர் டி.ஆர். ராமண்ணா.   பணத்தினால் ஒரு மனிதனின் குணாதிசயங்கள் எப்படி மாறுகின்றன என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இந்த படத்திற்கு கட்டபொம்மனுக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமி வசனம் எழுதியிருந்தார்.

 இதே ஆண்டில் வந்த இன்னொரு படம் `பாதுகாப்பு.’ இந்த படத்தை இயக்கியவர் `பா’ வரிசை படங்களின் வல்லவரான பீம்சிங்தான் இந்த படத்தை இயக்கினார். ஆனால் படம் படுதோல்வியடைந்தது.

 இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்தார்.

இந்த ஆண்டு வந்த இன்னொரு படம் ` விளையாட்டுப் பிள்ளை’. இந்த படத்தின் கதை முதலில் ஆனந்த விகடனில் `ராவ் பகதூர் சிங்காரம்’ என்கிற பெயரில் நாவலாக வந்தது. `தில்லானா மோகனாம்பாள்’ கதையை கலைமணி என்கிற பெயரில் எழுதிய கொத்தமங்கலம் சுப்புதான் இந்த நாவலை எழுதியிருந்தார். இந்த படத்தில் சிவாஜிக்கு சொந்தமாக பத்மினி நடித்திருந்தார்.

இந்த  படத்தை அப்போது ஜெமினி அதிபராக இருந்த எஸ். பாலசுப்ரமணியன் தான் தயாரித்தார். ஆனால் இந்த படத்தை துவக்கியவர் ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன்தான். ஆனால் இந்த படம் முடிவடைவதற்கு முன்பே அவர் இறந்து போனார். அதனால் அவர் இறந்த பிறகுதான் படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. இந்த படத்திற்காக தன் முழு அர்ப்பணிப்பை கொடுத்திருந்தார் சிவாஜி. இந்த படத்தின் படப்பிடிப்பு மைசூருவில் நடந்தது.

 அடுத்த ஆண்டும் ஆதாவது 1971ம் ஆண்டு ‘இரு துருவம்’, ‘தங்கைக்காக’, ‘அருணோதயம்’, ‘குலமா குணமா’, ‘பிராப்தம்’,  ‘சுமதி என் சுந்தரி’, ‘சவாலே சமாளி’, ‘தேனும் பாலும்’, ‘மூன்று தெய்வங்கள்’,

‘பாபு’ ஆகிய படங்கள் வெளியாகின.                                            

(தொடரும்)