ம(க)லைக்குன்று!

பதிவு செய்த நாள் : 10 மார்ச் 2017

புதுக்கோட்டை என்றவுடன் உங்களுக்கு தற்போது நெடுவாசலும் ஹைட்ரோகார்பனும் ஞாபகம் வரலாம். இவை சமீபத்திய சம்பவங்கள். ஆனால், புதுக்கோட்டைக்கு ஒரு முக்கிய வரலாறு உண்டு. அங்கேதான் கலைச் சிறப்புமிக்க 'சித்தன்னவாசல்' இருக்கிறது. புதுக்கோட்டை - அன்னவாசல் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, இந்த மலைக்குன்று.

கி.மு. முதல் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் செல்வாக்கோடு விளங்கிய ஜைன சமய துறவிகள் வசித்த இடம். அவர்களின் கலைப்படைப்புகளுக்குச் சான்றாகவும் விளங்குகிறது.

இங்குள்ள குடைவரைக் கோயிலின் அர்த்தமண்டப விதானப் பகுதியில், தாமரைத் தடாகச்சித்திரம் ஒன்று உள்ளது. இத்தனை நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், அழகு குலையாமல் காட்சி தருகிறது. மண்டபத் தூண்களில் உள்ள ஆடல் அழகிகளின் சித்திரமும், அரச தம்பதியின் சித்திரமும் பண்டைய சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்துள்ளன. கலைநேர்த்தியை மட்டும் அளவுகோலாகக் கொண்டு பார்த்தால், இந்தச் சித்திரங்களை அஜந்தா ஓவியங்களுக்கு அடுத்தபடியாக மதிப்பிடலாம்.

அறிவர் கோயில் வளாகத்துக்கு முன்னால், வலப்புறம் செல்லும் மலைப்பாதையில், சமணத்துறவிகள் கடுமையான நோன்பிருந்தபோது பயன்படுத்திய, பதினேழு கல் படுக்கைகள் காணப்படுகின்றன. இங்கே தமிழ் பிராமி எழுத்துக் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.

சித்தன்னவாசல், ஆதிகால மனிதர்களின் வாழ்விடமாக இருந்துள்ளது. இதற்குச் சான்றாக இறந்தவர்களை மண்பாண்டங்களில் வைத்துப் புதைத்த சான்றுகள் ஏராளமாக கிடைத்துள்ளன. இங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், திருகோகர்ணம் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வரவேற்பு வளைவைக் கடந்து குன்றை நோக்கிப் போகும் வழியிலேயே இருபுறமும் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் பாதுகாக்கப்பட்ட பண்டைக்காலப் புதைகுழிப் பகுதிகளைக் காணலாம்.

ஒன்பதாம் நூற்றாண்டுக் கல்வெட்டுக் குறிப்பின்படி, பாண்டிய மன்னன் ஸ்ரீமாறன் வல்லபன், அர்த்த மண்டபத்தின் முன்புறத்தில் முகமண்டபம் ஒன்றை எழுப்பியதாக குறிப்பு உள்ளது. சிதிலமடைந்திருந்த இம்மண்டபம் தற்போது, சீரமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை நகரிலிருந்து சித்தன்னவாசல் செல்ல, பேருந்து கட்டணம் 7 ரூபாய். புதுக்கோட்டை நகரில்,500 ரூபாய் முதல் விடுதி வசதி உண்டு. புதுக்கோட்டை பழநியப்பா நகரில், ஞானாலயா ஆய்வு நூலகம் ஒன்று உள்ளது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன. வாழ்வதற்கு மட்டுமல்ல, வாழ்ந்தவர்களின் வரலாற்றையும் அறிய, சித்தன்னவாசல் போன்ற இடங்களுக்குச் சென்று வருவது சிறப்பு.

- சுப்ர.பாலன்


பயனுள்ள தகவல்கள்:

உண்மையான தைரியசாலி!

* ''யாரை தைரியசாலி, சக்தி வாய்ந்தவன் என்று கருதுகிறீர்கள்?'' என தன்னுடன் இருந்த ஒருவரை கேட்டார் நபிகள் நாயகம் (ஸல்). ''வீரத்துடன் போரிட்டு வெற்றி அடைந்தவர்களை தைரியசாலிகள், சக்தி மிகுந்தவர்கள்'' என்று அவர் கூறினார். ''இல்லை, கோபம் வந்தபோது தன்னை கட்டுப்படுத்தி கொள்கிறவன்தான் உண்மையான தைரியசாலி'' என்று நபிகள் நாயகம் விளக்கம் அளித்தார்.