கேரளாவில் வறட்சியை தீர்க்க மேக விதைப்பு திட்டம் – முதல்வர் பினராயி விஜயன் தகவல்

பதிவு செய்த நாள் : 08 மார்ச் 2017 01:59

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடுமையான வறட்சியை சமாளிக்க மேக விதைப்பு முறையை (செயற்கை முறையில் மழை பெய்ய வைத்தல்) அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக சட்டசபையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

கேரளாவில் கடுமையான வறட்சி நிலவுகிறது. வறட்சி காரணமாக பயிர்கள் அழிந்து சுமார் 300 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

வறட்சியை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பாக காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் சட்டசபையில் கேள்வி எழுப்பின. இதற்கு பதில் அளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார்.

‘‘வறட்சியை சமாளிக்க அரசு மேக விதைப்பு முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. மஹாராஷ்டிராவிலும், ஆந்திர பிரதேசத்திலும் இந்த திட்டம் வெற்றி பெற்றுள்ளதால் கேரளாவிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். ஆனால் இந்த திட்டத்திற்கு  எவ்வளவு செலவாகும் என்று இதுவரை கணிக்கப்படவில்லை” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.

அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், கேரள அரசு, மக்களுக்கு குடிநீர் வழங்குவது போன்ற உரிய நடவடிக்கைகளை  சரியாக செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார் காங்கிரஸ் தலைவர் சாஃபி பாரம்பில். அரசின் திட்டங்கள் பெயரளவில் தான் உள்ளன இன்னும் செயல்படுத்தபடவில்லை என்றும் தெரிவித்தார்.

மேற்கொண்டு வறட்சிக்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்க எதிர்கட்சிகள் வைத்த கோரிக்கையை சபாநாயகர் பி. ஸ்ரீராம கிருஷ்ணன் நிராகரித்தார். இதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

எதிர்கட்சிகளின் குற்றசாட்டுகளுக்கு பதில் அளித்த முதல்வர், மக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்கவும், நீராதாரத்தை காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் சபையில் கேட்டுக் கொண்டார் முதல்வர்.

வறட்சி காரணமாக கேரளாவில் நிலத்தடி நீர் மட்டம் 4 மீட்டர் அளவு குறைந்துள்ளதாகவும் அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைந்து வருவதாகவும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் தெரிவித்துள்ளது.