கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 65

பதிவு செய்த நாள் : 27 பிப்ரவரி 2017
‘அந்த நாள்’ திரைப்படமும் அதன் முன்னோடியான ‘ராஷோமா’னும்!

'அந்த நாள்' திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே படத்தின் முக்கிய நடிகரான சிவாஜி கணேசன் சுட்டுக்கொல்லப்படுகிறார்.  இப்படி ஒரு திடுக்கிடும் புதுமையை 1954லேயே செய்த 'அந்த நாள்,' இன்னொரு விதத்திலும் தமிழ் சினிமா சரித்திரத்தில் முக்கிய இடம் பிடித்தது. பாடல்கள் இல்லாத முதல் தமிழ் திரைப்படம் என்ற பெயரைப் பெற்றது. இயக்குநர் எஸ். பாலசந்தரும், படத்தின் தயாரிப்பாளரான ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் இதையெல்லாம் செய்யும் துணிவை எப்படி பெற்றார்கள்?

ஜப்பானிய திரைப்படமான 'ராஷோமான்' (1950), அவர்களுடைய துணிகர முயற்சிக்கு வித்திட்டது. அகிரா குரோசாவா இயக்கிய அந்தப் படம், ஒரே பாய்ச்சலில் ஜப்பானிய சினிமாவை உலக தரத்திற்கு இட்டுச்சென்றது. (இன்று வரை ஜப்பானின் மிகவும் மதிக்கப்பட்ட படமாக 'ராஷோமான்' தன்னுடைய இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. உலக சினிமாவின் ஓர் உன்னதப் படைப்பாளியாக குரோசாவாவும் விளங்குகிறார்).

அப்படி என்ன இருந்தது 'ராஷோமா'னில்? படத்தின் ஒவ்வொரு பிரேமும் கண்ணில் ஒற்றிக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கிறது என்பதோடு, சூழலை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. உதாரணத்திற்கு, ஒரு விறகுவெட்டி தன்னுடைய கோடரியை தோளில் தாங்கியவாறு வனப்பகுதியில் நடைபோடும் ஒரு காட்சியை குரோசாவும் அவருடைய கேமரா இயக்குநரான மியாகாவாவும் எடுத்திருக்கிற விதம் உலக சினிமாவின் ஓர் உன்னத பகுதியாக கருதப்படுகிறது.

கீழிருந்து மரங்களையும் வானத்தையும் கேமரா அண்ணாந்து பார்த்து நகரும் நேர்த்தியை 'ராஷோ'மானில் கண்ட பிறகு, எத்தனை தமிழ்ப் படங்கள் கூட அதை காப்பி அடித்தன! குரோசாவா அர்த்தத்துடன் செய்ததை மயிலாட வான்கோழி நடமிடுவதைப்போல, பலர் வெறும் அழகுக்காக அள்ளித் தெளித்தார்கள்!

'சோ'வென்று வானம் பொத்துக்கொண்டு ஊற்றுகிற ஒரு நாளில் தொடங்குகிறது 'ராஷோமான்'. அது பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கதை. கியோடோ நகரின் பாழடைந்த தெற்கு வாசலில் மழைக்காக ஒரு விறகுவெட்டியும்  ஒரு புத்த துறவியும் ஓதுங்கியுள்ளார்கள். அங்கே ஒரு சாமானிய பிரஜையும் சேர்ந்துகொள்கிறான்.

பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது போன்ற கொடூரமான காலகட்டம் அது. அப்படிப்பட்ட நிலையிலும் விறகுவெட்டியும் துறவியும் எதிர்கொண்ட ஒரு நிகழ்ச்சி அவர்களை உலுக்கிப்போடுகிறது. மனைவியுடன் சென்ற ஒரு சமுராய் வீரனை ஒரு கொள்ளைக்காரன் மறிக்கிறான். பின்னர் வீரன் இறந்து கிடக்கிறான். மானபங்கம் அடைந்த பெண் ஓடிவிடுகிறாள். கொள்ளைக்காரன் சட்டத்தின் காவலர்களிடம் அகப்படுகிறான்.

சமுராய் வீரனைக் கட்டிப்போட்டு அவனுடைய பார்வையிலேயே அவன் மனைவியின் கற்பை களவாடியதாகவும், அவளுடைய கோரிக்கையின் பேரில் அவள் கணவனுடன் போர் செய்து அவனைக் கொன்றதாகவும்  கொள்ளைக்காரன் வாக்குமூலம் அளிக்கிறான்!

சமுராய் வீரனின் மனைவி முன்வைப்பது வேறுவிதமாக இருக்கிறது. தன்னை சீரழித்துவிட்டு கொள்ளைக்காரன் சென்றதும், தன்னை கொன்றுபோடும்படி தன் கணவனிடம் அவள் கெஞ்சினாளாம். அவன் அவளை வெறுப்புடன் பார்த்தானாம். அவள் தன் கையில் இருந்த கத்தியுடன்  மூர்ச்சையடைந்த பின், எழுந்து பார்க்கும் போது, அதே கத்தி கணவனின் மார்பில் இறங்கியிருந்தது...அவன் இறந்துபோயிருந்தான்! இது மனைவியின் கூற்று.

இறந்துபோன சமுராய் வீரனின் ஆவி, ஒரு தொடர்பாளர் வாயிலாக வந்து பேசுகிறது. தன்னுடன் வந்துவிடும்படி சமுராயின் மனைவியைக் கொள்ளைக்காரன் கேட்டானாம். தனது கணவனைக் கொன்றுவிடும்படி கொள்ளைக்காரனிடம் சமுராயின் மனைவி வேண்டினாளாம். இது கொள்ளைக்காரனுக்கே ஆத்திரத்தை உண்டாக்க, அவள் தப்பி ஓடுகிறாள். சமுராயின் கட்டுகளை அவிழ்த்துவிட்டு கொள்ளைக்காரன் சென்றுவிடுகிறான். அதன் பிறகு தனது உயிரைத் தானே போக்கிக்கொண்டதாக சமுராயின் ஆவி கூறுகிறது.

இவர்கள் மூன்று பேரும் பொய் சொல்வதாகக்கூறும் விறகுவெட்டி,  வேறு கதை கூறுகிறான். பெண்மணியின் விலையுயர்ந்த கத்தியை விறகுவெட்டி திருடியிருக்கக்கூடும் என்று யூகிக்க முடிகிறது. விஷயம் இப்படி இருந்த போதிலும், பாழடைந்த அந்த வாயிலில் கிடத்தப்பட்டிருக்கும் ஓர் அனாதை குழந்தையைத் தன்னுடைய ஆறு பிள்ளைகளுடன் ஏழாவது பிள்ளையாய் வளர்க்க விறகுவெட்டி முன்வருகிறான். அதற்குள் மழையெல்லாம் ஓய்ந்துபோய் வானத்தின் வாசலில் பொற்கிரணங்கள் வெளிப்படுகின்றன.

'ராஷோமா'னில் ஒவ்வொருவரின் வாக்குமூலமும் ஏன் வேறுபடுகிறது? அதை எப்படி அர்த்தப்படுத்தி க்கொள்வது என்ற கேள்விக்கு  குரோசாவாவே விடைகொடுத்திரு க்கிறார். '''ராஷோமான்' வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது... வாழ்க்கையைப்போலவே அதன் பொருளையும் திட்டவட்டமாகக்கூற இயலாது,'' என்றார் குரோசாவா! பார்க்கப் பார்க்க புதுப்புது அர்த்தங்கள் புலப்படுவதாக 'ராஷோமான்' உள்ளதால் திரையியல் ஆராய்ச்சியாளர்கள் அதை இன்றும் துருவித்துருவி ப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!  திரை இலக்கியமாக 'ராஷோமான்' ஜொலித்துக்கொண்டிருக்கிறது!

ஐம்பதுகளில் எஸ். பாலசந்தர் சில படங்களில் நாயகனாக நடித்துவிட்டு சில படங்களை இயக்கவும் செய்திருந்தார். பெரிய ஸ்டூடியோ முதலாளிகளும் தயாரிப்பாளர்களும் அவரை மதித்து வாய்ப்புகள் அளித்தார்கள். ஏ.வி.எம்மின்  'பெண்' படத்தில், காமெடி வேடத்தில் பாலசந்தர் அற்புதமாக நடித்துக்கொண்டிருந்தார். ஒரே சமயத்தில் மூன்று மொழிகளில் படத்தை எடுத்தால் ஏகமாக லாபம் சம்பாதிக்கலாம் என்று கிளம்பிய ஏ.வி.எம்., இந்த த்ரீ-இன்ஒன் வேலையால் காலதாமதமும் பணவிரயமும்தான் மிச்சம் என்று கண்கூடாக அனுபவித்துக்கொண்டிருந்தது!

இதற்கிடையில், 'ராஷோமா'னை பார்த்திருந்த பாலசந்தரால் சும்மா இருக்க முடியவில்லை. அதைப்போல் ஒரு நாடகம் எழுதி ஆல் இண்டியா ரேடியோவுக்கு கொடுத்துப் பார்த்தார். அங்கே அரசு சம்பளம் வாங்கிக் கொண்டு ஹாய்யாக இருப்பவர்கள் இருந்ததால், வேண்டாம் என்று நிராகரித்தார்கள்! ஏ.வி.எம்முக்கு அதே கதையைச் சொன்னார் பாலசந்தர். குறுவை சம்பாவைப் போல் வேகமாக எடுத்துத் தள்ளக்கூடிய படம் என்று நினைத்த  ஏ.வி.எம்., மூலக்கதையைத் தன்னுடைய கதை ரிப்பேர்காரரான ஜாவர் சீதாராமனிடம் திரைக்கதை, வசனம் எழுதக்கொடுத்தார். அப்படித்தான் 'அந்த நாள்' உருவானது.

கொலைக்கு ஆளாகும் பிரதான பாத்திரத்தில் யாரைப் போடலாம் என்று குழப்பம் இருந்தது. ஏ.வி.எம்மின் 'வாழ்க்கை'யில் நடித்திருந்த சகஸ்ரநாமம் முதலில் பயன்படுத்தப்பட்டார். பிறகு கல்கத்தா (கோல்கட்டா) விஸ்வநாதன். பிறகு, நன்கு வளர்ந்த படத்திலிருந்து விஸ்வநாதன் நீக்கப்பட்டு சிவாஜி கொண்டு வரப்பட்டார். படத்தை பார்த்தால் தெரியும், ஒரு சில நாட்களில் அவர் தன்னுடைய பகுதிகளை முடித்திருக்கக்கூடிய அளவுக்குத்தான் காட்சிகள் இருந்தன என்று! இப்படித்தான் கொலை நடந்திருக்கும் என்று ஒவ்வொரு பாத்திரமும் கூறி முடிக்கும்போது, சிவாஜி குண்டடிப்பட்டு விழும் காட்சி வந்துபோனது. 'பாவம், எத்தனை முறை சாவார் மனிதர்' என்று சிலர் கேட்கும்படி இது அமைந்தது.

'ராஷோமா'னின் தழுவல் என்று 'அந்த நாள்' கூறப்பட்டாலும், ஒரு சம்பவத்தைப் பற்றி பலர் பலவிதமாகக் கூறுகிறார்கள் என்பதைத்தாண்டி இரண்டு படங்களுக்கும் இடையில் எந்த ஒற்றுமையும் இல்லை!

'ராஷோமா'னில் ஒரு மரணமும் (கொலையா தற்கொலையா?) ஒரு கற்பழிப்பும் நடக்கின்றன. இவை எந்த வகையில் நடந்தன என்று சம்பந்தபட்டவர்களே கூறுகிறார்கள். இவர்களின் மாறுபடும் கூற்றுகளுக்கு பின்னே ஆழ்ந்த உளவியல் காரணங்கள் பொதிந்திருக்கக்கூடும் என்பது தான் 'ராஷோமா'னின் செறிவுக்குக் காரணமாக இருந்தது. நேரடியாக சம்பவத்தைப் பார்த்ததாகக்கூறும் விறகுவெட்டியின் கூற்று உண்மையோ பொய்யோ, அது மேலும் ஒரு பரிமாணத்தை சேர்ப்பதாக அமைந்தது. நம்முடைய அறிதல் சாத்தியக்கூறுகளைப் பற்றி கேள்விகள் எழுப்புவதாக 'ராஷோமான்' அமைகிறது. தற்சார்பு இல்லாமல் யாராவது எதையாவது விளங்கிக்கொள்ள முடியுமா என்ற வினாவை அது தோற்றுவிக்கிறது. சிந்தனையைத் தாண்டி மனிதனின் இதயத்தில் எழும் அன்பை குறித்து அது நம்பிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் 'அந்த நாள்'  எடுத்துக்கொள்வது ஒரு கொலையைப் பற்றிய போலீஸ் விசாரணையை. கொலை இப்படித்தான் நடந்திருக்கும் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் வேறொருவரைக் குற்றவாளி ஆக்குகிறது. கொலையுண்ட ரேடியோ விஞ்ஞானி ராஜனை (சிவாஜி கணேசன்) அவருடைய தம்பி பட்டாபி (டி.கே. பாலசந்திரன்) சுட்டுக்கொன்றிருப்பார் என்கிறார் பக்கத்து வீட்டுச் சின்னையா பிள்ளை (பி.டி. சந்பந்தம்). தன்னுடைய மனைவி ஹேமா (மேனகா) கொலையைச் செய்திருப்பாள் என்கிறார் பட்டாபி. நடனக்காரி அம்புஜம் (சூர்யகலா) கொலையை செய்திருப்பாள் என்பது ஹேமாவின் வாதம். அம்புஜமோ, சின்னையா பிள்ளையைக் குற்றவாளி என்கிறாள்! புலன் விசாரணை செய்யும் சி.ஐ.டி. சதானந்தம் (ஜாவர் சீதாராமன்), இந்த பரஸ்பர  குற்றச்சாட்டுகளின் முடிச்சுகளை அவிழ்த்து, அவற்றுடன் சம்பந்தமே படாத கொலையுண்டவரின் மனைவிதான் (பண்டரிபாய்) குற்றவாளி என்று தீர்மானிக்கிறார்! 'கொலையும் செய்வாள் பத்தினி' என்ற 'தூக்குத் தூக்கி' நாடக வாசகமும்  இந்த முடிவை எட்ட அவருக்கு உதவுகிறது.

தன்னுடைய ரேடியோ பெட்டிகள் தயாரிப்பு திட்டத்திற்கு உதவி கிடைக்கவில்லை என்பதால் ராஜன் தேசவிரோதி ஆனார், நாட்டுக்கு எதிராக ஜப்பானிய உளவாளியாக மாறினார் என்று கதை சொன்னார் ஜாவர் சீதாராமன்.

பின்னாளில் 'அந்த நாள்' திரைப்படத்தை நினைவுகூர்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இந்த கருத்தைக் கூறி, 'அரசாங்கமும் அரசியல்வாதிகளும் படித்த திறமைமிக்க இளைஞர்களுக்கு செவிசாய்க்காவிட்டால் அவர்கள் நாட்டுக்கு எதிரிகளாக மாறிவிடுவார்கள்' என்றார்! நாட்டின் ஆக்க சக்திகளுக்கு வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்பது உண்மைதான் என்றாலும், வாய்ப்பு கிடைக்காமல்போனால் தேசத்துரோகிகள் ஆகிவிடுவார்கள் என்பது ஏற்கக்கூடியதாக உள்ளதா? அப்படி தேசத்திற்கு துரோகம் செய்கிறவரை, மனைவியே முன்னின்று சுட்டுத்தள்ளுவாள் என்றல்லவா 'அந்த நாள்' காட்டுகிறது! ஆகவே, யார் யார், எந்த எந்த சம்பவத்திலிருந்து எதை எதை அனுமானிக்கிறார்கள் என்பது அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது என்று 'ராஷோமான்' சுட்டிக்காட்டும் உண்மைதான் எதிலும் முன்வந்து நிற்கிறது.

இன்னொரு முரண்பாடு வேடிக்கையாக உள்ளது. உலக சினிமாவிற்கு ஜப்பானின் திரைத்துறை தந்த 'ராஷோமா'னால் உந்தப்பட்டு வெளிவந்த 'அந்த நாள்', அன்றைய அரசியல் சூழலுக்கு ஏற்ப, ஜப்பானை எதிரி நாடாக சித்தரித்தது! ஏனென்றால், இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் இந்தியாவை ஆண்ட பிரிட்டனுக்கு எதிர் அணியில் நின்றது. ஆனால் அப்போதும்கூட, பிரிட்டிஷ்காரர்களை இந்தியாவை விட்டு விரட்ட,  ஜப்பானின் துணையை நாடினார், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

அந்த நாளை விட்டு இந்த நாளுக்கு வந்தால், ஜப்பான் இந்தியாவின் மிகப்பெரிய நட்பு நாடாக விளங்குகிறது. ஜப்பான் குண்டுகள் சென்னையைத் தாக்கிய 1943ல் 'அந்த நாள்' தொடங்குகிறது. இந்த நாளில் ஜப்பானின் உதவியுடன் சென்னை மெட்ரோ விரைகிறது!

(தொடரும்)