கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 59

பதிவு செய்த நாள் : 16 ஜனவரி 2017
கட்டபொம்மன் திரைப்படமும் அது கிளப்பிய சர்ச்சை பூதங்களும்!

சிவாஜி கணேசனின் சிறு வயது நினைவுகளில் ஒன்று. அது 1935ம் ஆண்டு. திருச்சி சங்கிலியாண்டபுரம் வீட்டின் வெளியே கட்டபொம்மன் கூத்து நடந்துகொண்டிருந்தது. அப்பாவுடன் கூத்துப் பார்க்கப்போயிருந்தான் ஏழு வயது கணேசன்.

வெள்ளைக்காரர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய கட்டபொம்மனின் வீரதீரபிரதாபங்கள் கூத்தில் முழங்கின. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்து, சிறை சென்று, மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு வெளியே வந்திருந்த அப்பாவுக்கு பரம சந்தோஷம்.

அப்போது, கணேசன் உட்பட நாடகத்தைப் பார்க்க வந்திருந்த சில பையன்களைப் பிடித்து கூத்தில் பங்கேற்க  வைத்தார்கள். கும்பினியாரின்  வெள்ளைக்கார பட்டாளத்தில் ஒருவனாக கணேசன் தனது முதல் வேடத்தை ஏற்றான். பையன்கள் எல்லாம் வெள்ளைக்காரப் பட்டாளத்துக்காரர்கள் போல் நடைபோட்டார்கள். பார்த்துக்கொண்டிருந்த மக்கள் கைதட்டினார்கள், ஒருவரைத் தவிர!

கூத்தைப் பார்க்க சேர்ந்து சென்ற அப்பாவும் பிள்ளையும் தனித்தனியே வீடு திரும்பினார்கள். அப்பாவுக்கு கடும் கோபம். தன் வாழ்க்கையையே பணயம் வைத்து வெள்ளைக்காரன் ஆட்சியை எதிர்த்தவர் அவர். மகனோ கும்பினிக்காரனாக இப்படி மார்தட்டிவிட்டானே! கணேசனை முதுகில் அடித்துவிட்டார்.

"உனக்கு என்ன தைரியம் இருந்தால் என் எதிரியின் படையில் சேர்ந்து கூத்தாடுவாய்...கூத்தாடிப்பயலே," என்று தன்னை அப்பா கோபித்துக்கொண்டு அடித்தவுடன் கணேசனுக்கு  காய்ச்சல் வந்து படுத்துவிட்டான்.

சின்னசாமி காளிங்கராயரின் மகன் கணேசமூர்த்தி, ஐம்பதுகளில் சிவாஜி கணேசனாக உருவெடுத்து, ஸ்டூடியோ  பறவையாக மாறியிருந்தார்.

ஆனால், மூச்சுவிடக்கூட நேரம் இல்லாத அந்தக் காலகட்டத்தில், அப்பா மெச்சிய கட்டபொம்மனாக நூற்றுக்கும் மேற்பட்ட மேடைகளில் தன்னுடைய சிவாஜி நாடக மன்றத்தின்  சார்பாக நடித்துக்கொண்டிருந்தார்.

மேடையில் வசனம் பேசிக்கொண்டிருக்கும்போதே வாயிலிருந்து ரத்தம் குபுகுபுவென்று கொட்டிவிடும். மற்றவர்கள் பதறுவார்கள்...ஆனால் கணேசன் ஒன்றும் நடக்காததுபோல் தொடர்வார். அவருக்குத்தானே தெரியும், சின்ன வயது தழும்புகளை ஆற்ற உதவும் அருமருத்து அதுவென்று!வெள்ளைக்காரப் பட்டாளத்துக்காரனாக மேடை ஏறிய சிறுவன் கணேசன், வீரபாண்டிய கட்டபொம்மனாக உருவெடுத்ததற்கான திரைமறைவு காரணம் இதுதான். பிதா மெச்ச வேண்டும் என்று நினைக்காத புத்திரன் உண்டா?

பதினெட்டாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் வாழ்ந்த கட்டபொம்மு, பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட குறுநில தலைவர். வர்த்தகம் செய்ய வந்த கிழக்கிந்திய கும்பினிக்காரர்கள் ஆட்சியைப் பிடிக்க முனைந்தபோது, கட்டபொம்மு போன்ற பாளையக்காரர்களுக்கும் கும்பினியாருக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டன. இத்தகையவற்றின் ஓர்  உச்சக்கட்டமாக, 1799ம் ஆண்டு கும்பினி பட்டாளத்தால் கயத்தாற்றில் கட்டபொம்மு தூக்கிலிடப்பட்டார்.

ஆனால், வெள்ளைக்காரனை ஓட ஓட விரட்டி வீரமரணம் அடைந்தவரின் புகழ் மறையவில்லை. கட்டபொம்முவைப் பற்றிய தெம்மாங்கு பாடல்களும் கும்மிகளும் வந்தவண்ணம் இருந்தன. "பாஞ்சப் பதியினில் வளர்ந்தோங்கும், வீரபாண்டியக் கட்டபொம்மேந்திரன் மேல், வாஞ்சையாய் கும்மி தமிழ் பாட, யானை முகத்தோனும் காப்பாமே" என்று தொடங்கிய கும்மி பாடல், கட்டபொம்மனின் நினைவை அறவே அகற்ற நினைத்த வெள்ளைக்காரனைத் தாண்டி எஞ்சி நின்றது. புதிதாக நாட்டில் வளர்ந்த வெள்ளைக்காரன் ஆட்சி, கட்டபொம்மனைக் கெட்ட பொம்மன் என்று வர்ணித்தாலும் அவனை ‘இட்டபொம்மன்’ என்று மக்கள் இலக்கியம் பாடியது!  கட்டபொம்மன்  ஆண்ட பாஞ்சாலங்குறிச்சியில் முயல் நாயைத் துரத்தும், பாம்பு கீறியை விரட்டும் என்பது போன்ற கட்டபொம்மு குறித்த ஒரு பிம்பம் மக்கள் மனதில் உருவாயிற்று.

சிவாஜி கணேசனின் சின்ன வயசில் தெருக்கூத்து போன்றவற்றில் கட்டபொம்மன் வலம் வந்திருக்கலாம். ஆனால் அந்நாளின் மேடை நாடகங்கள் கட்டபொம்மன் கதைப் பக்கம் அவ்வளவாக திரும்பவில்லை. சுதந்திரப் போராட்ட காற்று நாடெங்கிலும் வீசிக்கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் கூட, கட்டபொம்மன் கதை,  குறிப்பிடப்படும் அளவிற்கு எடுத்தாளப்படவில்லை. பெரிய அளவில் முதலீடு தேவைப்பட்ட திரைத்துறையிலே, கட்டபொம்மனை கையாளும் துணிச்சல் யாருக்கும் இருக்கவில்லை.

வெள்ளைக்காரனுக்கு தீராத பகையாளியான கட்டபொம்மன் பற்றிய படம் எடுத்தால், படம் தடைக்கு உள்ளாகலாம். அல்லது படத்தணிக்கை கடுமையாக இருக்கக்கூடும்.  முதலுக்கே மோசம் வரக்கூடிய இந்த மாதிரியான நிலைமைகளை எந்தத் தயாரிப்பாளரும் சந்திக்கத் துணியவில்லை.

புது விஷயங்களுக்கு பிள்ளையார் சுழி போடுவதில் வல்லவரான கொத்தமங்கலம் சுப்பு, தாம் இயக்கி, பிரதான வேடத்தில் நடித்து, பாடல்களும் எழுதிய ‘மிஸ் மாலினி’யில் ஒரு புதிய திசையைக் காட்டினார் (1947). நாட்டுப்பற்றை நயமாக எடுத்துரைத்த ஒரு பாடலில், தாயானவள் குழந்தைக்கு, "காந்தி மகான், நேதாஜி, கட்டபொம்மன் கதை கூறி வளர்க்கவேண்டும்’’ என்று சுப்பு பாடினார்.

இதைத் தொடர்ந்து, தேசியத்தை ஒரு கண்ணாகவும் தமிழ் பற்றை மற்றொரு கண்ணாகவும் (மீசையைத் தனி அடையாளமாகவும்) கொண்டிருந்த ம.பொ.சிவாஞானம்,  கட்டபொம்மனை  சுதந்திர போராட்ட வீரனாக முன்னிறுத்தினார்.

சதர்ன் ஸ்தாபனம் என்ற பதிப்பகம், 'தமிழ்நாட்டுத் தியாகிகள்' என்ற தலைப்பில் கட்டபொம்மன், குமரன், முத்துவடிவு, சிதம்பரம் பிள்ளை, சிவா, சத்தியமூர்த்தி ஆகியோரைப் பற்றி ஒரு நூல்  வெளியிட்டது. இந்தப் புத்தகம் ம.பொ.சி., எம்.எஸ். சுப்ரமணிய அய்யர், தி.ந. சுப்ரமணியம் ஆகியோரால் எழுதப்பட்டிருந்தது.

ம.பொ.சி. தொடங்கிய தமிழரசுக் கழகத்தில் சேர்ந்திருந்த  டி.கே.எஸ். சகோதரர்கள், 'முதல் முழக்கம்' என்ற  பெயரிலே கட்டபொம்மன் நாடகம் நடத்தத் தொடங்கினார்கள். தமிழரசுக் கழகத்தின் சார்பாக ராயப்பேட்டை காங்கிரஸ் திடலிலே 1951ல் நடந்த இலக்கிய, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடு நடந்தது. அதில் இரவு நேரங்களில் டி.கே.எஸ். சகோதரர்களின் ‘அவ்வையார்’, ‘கட்டபொம்மன்’ நாடகங்கள் மிகச் சிறப்பாக நடந்தன.

சுதந்திரம் வந்தவுடன் தேசிய உணர்ச்சி ஓங்கியிருந்த நிலையில், சினிமா தயாரிப்பாளர்களும் கட்டபொம்மனின் சரித்திர பிரசித்தி பெற்ற கதையைத் திரைப்படம் ஆக்க நினைத்தார்கள். இதற்கெல்லாம் முன்னோடியாக அந்நாளைய பிரபல சினிமா பத்திரிகையின் கேள்வி – பதில் பகுதியில் ஒரு வாசகர் இப்படிக் கேட்டிருந்தார் -  – "நம் நாடு சுதந்திரம் அடைந்துவிட்டதே, இனி கட்டபொம்மு கதையைப் படம்பிடிக்க சர்க்கார் அனுமதிக்குமா?"

இந்த கேள்விக்கு, 'இது போன்ற சரித்திரங்களை இனிமேல் தாராளமாக தயாரிக்கலாம்' என்று விவரம் அறிந்த ஆசிரியர் பதில் அளித்திருந்தார்.

படத்தயாரிப்பாளர்கள் மத்தியில், கட்டபொம்மனை படமாக்குவதில் போட்டியிருப்பதுபோன்ற செய்திகள் வரத்தொடங்கின. ‘மாரியம்மன்’ (1948) என்ற படத்தை 1947ல் தயாரித்துக்கொண்டிருந்த செல்வம் பிலிம் கம்பெனியின் அடுத்த தயாரிப்பு, 'கட்டபொம்மு' என்ற செய்தி வந்தது. ஜூலை 1948ல் இந்த செய்தி ஒரு மாறுதல் அடைந்தது.

"சேலம் ரத்னா ஸ்டூடியோவின் படமாம் இந்த கட்டபொம்மு" என்று கூறிய புது செய்தி, கட்டபொம்முவாக பி.யு.சின்னப்பா நடிப்பார் என்ற கூடுதல் தகவலைக் கொடுத்தது. சின்னப்பா நடித்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அந்த சரித்திர படத்தில் நடிக்கும் வாய்ப்பை சின்னப்பாவின் சரித்திரத்தில் விதி எழுதவில்லை!

ஏனென்றால் திடீரென்று ஒரு சில மாதங்களில் கதை மாறியது.  கட்டபொம்மு, ஊமைத்துரை ஆகியோரது சரித்திரத்தைப் பற்றி சகல உரிமைகளையும், குறிப்பாக நாடகமாக நடத்தும் உரிமையையும் சினிமா படம் பிடிக்கும் உரிமையையும் நடிகர் டி.எஸ்.பாலையாவும் அவருடைய நண்பர் எம்.வி. பாண்டிய  பிள்ளையும் வாங்கியிருக்கிறார்கள் என்ற செய்தி பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இந்த உரிமையை அவர்கள் யாரிடமிருந்து வாங்கினார்கள், அப்படி விற்கும் உரிமை யாருக்கு இருந்தது என்ற தகவல்கள் ஒன்றும் இல்லை!

எப்படியும், இத்தகைய அறிவிப்புகள் அடுத்த கட்டத்தை எட்டவேவில்லை. பிறகு, ஜெமினி வாசன் கட்டபொம்மன் படத்தை எடுப்பார் என்று எழுந்த நம்பிக்கை, அவர் அப்படியொன்றும் செய்துவிடமாட்டார் என்ற நிராசையாக 1952ல் மாறியிருந்தது. ஆனால் பிறகு வந்த விளம்பரங்கள் மீண்டும் கட்டபொம்மன் கனவுகளை உசுப்பிவிட்டன.

‘பராசக்தி’ தொடக்கி வைத்த சிவாஜி யுகம், சிவாஜியால்தான் கட்டபொம்மன் வேடத்தை ஏற்று நடிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்தியது. பழம் பெரும் நாடக ஆசிரியரும், சக்தி நாடக சபையின் உரிமையாளருமான சக்தி கிருஷ்ணசாமி, கட்டபொம்மன் நாடகத்திற்கு வீரியமிக்க வசனங்களை எழுதினார். ஆகஸ்டு 1957 தொடங்கி மார்ச் 1959க்குள்ளாக, கட்டபொம்மன் நாடகத்தை நூறு முறைக்குமேல் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக மேடை ஏற்றிவிட்டார் சிவாஜி. இதே காலகட்டத்தில் வண்ணப்படமாக வீரபாண்டிய கட்டபொம்மன் பி.ஆர். பந்துலுவின் இயக்கத்தில் தயாரானது.

என்ன வேடிக்கை என்றால், அறுபதுகள் தொடங்கி சிவாஜியின் படங்களின் தரத்தை தன்னுடைய அற்புதமான பாடல் வரிகளால் உயர்த்திய கண்ணதாசன், கட்டபொம்மனுக்கு எதிராக மருது சகோதரர்களை தன்னுடைய ‘சிவகங்கை சீமை’யின் வாயிலாக நிறுத்தினார்! இத்தனைக்கும் சிவாஜியின் படங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தோல்வி அடைந்திருந்த காலகட்டத்தில், கட்டபொம்மன் பலிக்கவேண்டியது சிவாஜிக்கு அவசியமாக இருந்தது.

ஆனால் அப்போது தி.மு.கவிலிருந்த கண்ணதாசனுக்கு, தெலுங்கன் கட்டபொம்மனுக்கு எதிராக சுத்த தமிழ் வீரரான மருது இருவரை முன்னிறுத்துவது முக்கியமாக பட்டது! தேசிய நீரோட்டத்திற்கு நகர்ந்துகொண்டிருந்த சிவாஜிக்கும் ஒரு 'செக்' வைக்க வேண்டியிருந்தது.

இந்த சூழ்நிலையில், கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்ற கோஷத்துடன் களத்தில் குதித்தார் கல்கண்டு பத்திரிகை ஆசிரியர் தமிழ்வாணன். கட்டபொம்மனுக்கு எதிராக பூலித்தேவன் என்ற இன்னொரு பாளைய வீரரை நிறுத்தினார்! ம.பொ.சிக்கு எதிராக இந்தப் பூலித்தேவனைப் பற்றி வருடக்கணக்கில் பத்திரிகையில் எழுதியதோடு ஒரு நாடகமும் எழுதி மேடையேற்றினார். 17,000  ரூபாய் நஷ்டம் கண்டதுதான் லாபம்!

தன்னுடைய பத்திரிகையின் விற்பனையை அதிகரிக்க, தமிழ்வாணன் கட்டபொம்மனை கண்டமேனிக்கு சாடுகிறார் என்று ம.பொ.சியின் ஆதரவாளர்கள் கடுமையான வார்த்தைகளில் குற்றம் சாட்டினார்கள். ஆனால், தமிழறிஞர் மு.அருணாசலம் கூட, இருபதாம் நூற்றாண்டின் சில அரசியல் சாகசக்காரர்கள் தங்கள் சொந்த இலக்குகளை அடைய, பதினெட்டாம் நூற்றாண்டின் சாகசக்காரனான கட்டபொம்மனைப் சுதந்திர போராட்டக்காரனாக சித்தரித்தார்கள், என்று காட்டமாகத்தான் எழுதியிருக்கிறார்.

சரித்திரம் திரித்து எழுதப்படுகிறது என்ற குற்றச்சாட்டு அதிகமாக எதிரொலிக்கும் காலம் இது. ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் செல்வாக்கு கூடுதலாக உள்ளவர்களின் குரல்தான் ஓங்கி ஒலிக்கிறது. அதுதான் சரித்திரமாக எழுதப்படுகிறது. அந்த வகையில் பிரபல நடிகரால் நடிக்கப்பட்டு வெற்றிப்படமாக அமைந்த ‘‘கட்டபொம்மன்’’ மக்கள் மனதில் நிற்கிறது.

(தொடரும்)