இந்தியாவில் முதலீடு மதிப்பு மிக்கது:அதிபர் ஒபாமா கருதியதாக அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2017 09:59


வாஷிங்டன்:

அமெரிக்கா பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கை உயர்த்தவும் இந்தியாவுடனான நட்பு மிகவும் அவசியமானது. இந்தியாவில் செய்யும் முதலீடு மதிப்பு வாய்ந்தது என்று ஒபாமா கருதியதாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் 20ம் தேதி பதவி ஏற்கிறார். இந்நிலையில் இந்தியா அமெரிக்கா உறவு குறித்து டிரம்ப் நிலைப்பாடு எப்படி இருக்க வேண்டும் என அதிபர் ஒபாமா விரும்புகிறார் என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அமெரிக்கா வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஸ் எர்னெஸ்ட் கூறியதாவது:  

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா மற்றும் அமெரிக்கா இடையில் உள்ள உறவை வலிமையாக்கும் நோக்கத்துடன் இந்தியாவில் ஒபாமா அதிகமான முதலீடுகளை செய்துள்ளார். இரு நாடுகள் இடையேயான ஆழமான தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார பலன்கள் போன்றவை இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்தி இருப்பதாக ஒபாமா நம்புகிறார்.  

 இந்தியா அமெரிக்கா இடையிலான நட்புறவு குறித்த டிரம்பின் சிந்தனைகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு தெரியாது. ஆனால் இந்தியாவில் செய்யும் முதலீடுகள் மிகவும் மதிப்பு வாய்ந்தது என ஒபாமா நினைத்தார். அமெரிக்கா பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், சர்வதேச அளவில் அமெரிக்காவின் செல்வாக்கை உயர்த்தவும் இந்தியாவுடனான நட்பு மிகவும் அவசியமானது என ஒபாமா முழுமையாக நம்பினார்.  

இவ்வாறு ஜோஸ் எர்ஜெஸ்ட் தெரிவித்தார்.