கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 56

பதிவு செய்த நாள் : 26 டிசம்பர் 2016

திரை வடிவம் பெற்ற சோவின் மேடை நாடகங்கள்!

முன்னணி பத்திரிகையாளராகவும், அரசியல் விமர்சகராகவும் சோ ராமசாமி அகில இந்திய புகழ் பெற்றார்.தேசிய அரசியலில் முன்னணி இடம்பெற்ற நரேந்திர மோடி, அத்வானி, சந்திரசேகர் போன்றவர்கள் அவருக்கு நண்பர்க ளாகவும், அவர் மீது நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் விளங்கினார்கள்.

காலஞ்சென்ற முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் நீண்ட நாள் நண்பராக இருந்தார். அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலில் விடாமல் விழுந்தார்கள் என்றால், சோவையும் அவருடைய மனைவியையும் நமஸ்காரம் செய்து ஆசி பெற்றார் ஜெயலலிதா. ஒரு காலகட்டத்தில் ஜெயலலிதாவை தேர்தலில் வீழ்த்த, தமிழ்நாட்டில் ஒரு புதிய கூட்டணி வகுப்பதில் சோ முக்கிய இடம்பெற்றார் என்பது வேறு விஷயம்!

ஆனால் துக்ளக் ஆசிரியராக இப்படியெல்லாம் வலம் வந்த சோ, ஆரம்பத்தில் தைரியமாக வெளிப்பட்டது நாடக ஆசிரியராகவும் நடிகராவும்தான். நாடகம்தான் சோவின் தன்னம்பிக்கையை வளர்த்தது, ஆளுமையை உருவாக்கியது என்று என்னிடம் அவருடைய அருமைத் தம்பி, அம்பி அடித்துக் கூறியிருக்கிறார்.

ஒரு முறை அம்பி என்ற ராஜகோபாலனை சோவே எனக்கு அறிமுகம் செய்துவைத்து, ‘‘நான் என்னமோ பெரிசா பண்ணிட்டேன்னு சில பேர் சொல்றா...ஆனா இவன்தான் சார் உண்மையான சாதனை செஞ்சவன்... என்ன அருமையா ஒரு ஸ்கூல் நடத்தறான்,’’ என்று தன் தம்பியின் சாதனையை சோ வியந்தார்!

இந்த அம்பிதான், சோ ஏகப்பட்ட நாடகங்கள் எழுதி, இயக்கி நடிக்கவும் செய்த விவேகா பைன் ஆர்ட்ஸ் குழுவை, தனது நண்பர்கள் டி. நாராயணசாமி, ஜே. முத்துசாமி, கொத்தமங்கலம் மாலி ஆகியோருடன் தொடக்கியவர்.

இந்த அமைப்பின் பிரதான நாடக ஆசிரியராகவும் நட்சத்திரமாகவும் சோ உருவானார். இந்த குழுவிற்கு ‘இப் ஐ கெட் இட்’ (எனக்கு அது கிடைத்தால்) என்ற ஆங்கிலத்தலைப்பிலான மேடைநாடகத்தை சோ 1958ல் எழுதிக் கொடுத்தார்.  விவேகா பைன் ஆர்ட்ஸுக்கு அது நல்ல வெற்றியைக் கொடுத்தது. அதன் பிறகு ஆண்டுக்கு ஆண்டு சோ புதிய நாடகங்களை எழுதி இந்த குழுவின் வாயிலாக வெற்றிகரமாக மேடை ஏற்றிக்கொண்டிருந்தார். விவேகா பைன் ஆர்ட்ஸில் உருவான சோவின் ஆளுமையும் அனுபவங்களும் பத்திரிகைத்துறையிலும் சினிமாவிலும் அவருடைய சாதனைகள் படைக்க வழிவகுத்தன.

விவேகாவிற்கு தான் எழுதிய 24 மேடைநாடகங்களைக் குறிப்பிட்டு, தன்னுடைய பேர்த்தியிடம் கூட பின்னாளில் சோ பெருமையாகக் கூறிக்கொள்வார். அந்த அளவிற்கு அவருடைய நாடகத் தடம் அவருடைய வாழ்க்கையில் முதலிடம் பெற்றிருந்தது.

‘பார் மகளே பார்’ (1963) படத்தில், சென்னை தமிழில் விளாசித்தள்ளும்  ‘மெக்கானிக்கல் மாடசாமி’யாக திரை உலகில் அறிமுகமானார் சோ. காமெடி வேடங்களில் நடிப்பதுடன், படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுத ஆரம்பித்தார்.

முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய ‘தேன் மழை’ (1966), ‘நினைவில் நின்றவள்’ (1967), ‘பொம்மலாட்டம்’ (1968), திருமலை மகாலிங்கம் இயக்கிய ‘நிலகிரி எக்ஸ்பிரஸ்’ (1968) முதலிய படங்களுக்கு சோ திரைக்கதை வசனம் எழுதி ஹாஸ்ய வேடங்களிலும் நடித்தார். அவர் பிரபலமான நட்சத்திரமாக உருவாகி வருவதை ‘நீலிகிரி எக்ஸ்பிரஸி’ல் வரும் ஒரு பாடலே சான்று. -- வாலிபம் ஒரு வெள்ளித்தட்டு என்ற பாடலில் அவரைக்கிண்டல் செய்யும் பெண்கள், ‘அச்சச்சோ சோ சோ’ என்று பாடுகிறார்கள்!

இதே காலகட்டத்தில், ‘மனம் ஒரு குரங்கு’ என்ற தனது பிரபல மேடை நாடகத்திற்கும் சோ கதை,வசனம் எழுதி காமெடி வேடத்தில் நடித்தார். ெபர்னாட் ஷா எழுதிய ‘பிக்மேலியன்’ என்ற நாடகத்தின் கதை அமைப்பில், மை பேர் லேடி என்ற படம் வந்தது. இதே கதையமைப்பில் நம்முடைய சூழலுக்கு ஏற்ப, ‘மனம் ஒரு குரங்கு’ என்று முதலில் மேடைநாடகம் ஆக்கினார் சோ. தன்னுடைய சினிமா அத்தியாயம் வலுப்பெற்றபோது அதைத் திரைப்படமாக அமைத்தார். படத்தை இயக்கியவர், பழம் பெரும் இயக்குநரும் எழுத்தாளருமான ஏ.டி.கிருஷ்ணசாமி.

‘மனம் ஒரு குரங்கு’ என்ற வாசகத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறான் செல்லப்பா என்ற வாலிபன் (சோ). பார்க்கும் பெண்களையெல்லாம் காதலிக்கும் இயல்பு கொண்ட அவனுடைய போக்கை, குரங்குத்தனம் என்றுதானே விவரிக்க முடியும்!

மருதாயி என்ற கறிகாய்க்காரியை மல்லிகாதேவி என்ற நடிகையாக ஆக்குகிறார் டைரக்டர் கோபிநாத். ‘‘நான் செஞ்சு காட்டறேன் என்று எடுத்துக்கிட்ட காரியத்தை செஞ்சு காட்டணும். அதுவும் மத்தவங்களுக்காக இல்லை, என்னோட சொந்த நியதிக்காகத்தான்...’’ என்று மேதையைப்போல் பேசுபவர்,  ‘என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?’ என்று கடைசியில்  பேதையைப்போல் நிற்கும் நிலைக்கு வருகிறார்! மனம் ஒரு குரங்குதானே!

‘மருதாயியே என்னுடைய உயிர்’ என்று ஆதி முதல் கூறி வந்த அவளுடைய மாமன் முருகேசன், அவள் மல்லிகாதேவியானவுடன் ‘நான் தள்ளியே நிற்கிறேன்’ என்று விலகிப்போகிறான்! அவனுடைய எண்ணங்களின் குரங்காட்டம்  அந்த மாதிரி.

இதையெல்லாம் வெளிப்படுத்த சம்பவங்கள் மட்டுமன்றி, ‘மனம் ஒரு குரங்கு’ என்று அடித்துக்கூறும் ஒரு பாடலும் படத்தில் இருக்கிறது. வித்வான் லட்சுமணன் பாடலை எழுதி, டி.பி.ராமச்சந்திரன் இசையமைத்து டி.எம்.சவுந்திரராஜன் பாடிய பாடல், மனதின் போக்குகளை அப்பட்டமாகவும் அற்புதமாகவும் புட்டுவைக்கும் அரிய பாடல்.

‘‘அடித்தாலும் அணைத்தாலும் வழிக்கு வராது

அப்படியே விட்டுவிட்டால் முடிவும் இராது

நயத்தாலும் பயத்தாலும் அடங்கிவிடாது

நமக்குள்ளே இருந்துகொண்டு நன்மை தராது’’ என்று மனதின் தாண்டவங்களைப் பாடல் தத்ரூபமாக காட்டுகிறது.

வரிக்கு வரி அர்த்தபுஷ்டியுடனும் இசைநயத்துடனும் விளக்கும் பாடலைக் குறித்த எனது ரசனையை சோவிடம் ஒரு நாள் பகிர்ந்துகொண்டேன். உண்மைதான் என்று ஆமோதித்தார். நல்ல சினிமா அனுபவமுள்ள ஏ.டி.கிருஷ்ணசாமியின் இயக்கத்தில் சில காட்சிகள் நேர்த்தியாக அமைந்தன.

அறுபதுகளின் பிற்பகுதியில்  (1968),  சோவின் ‘முகமது பின் ‘துக்ளக்’  நாடகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஒரே நாளில் பல முறை மேடை ஏற்றப்படும் அளவிற்கு அதற்கு வரவேற்பு இருந்தது.  

அரசியல் நையாண்டி நாடகத்தின் மிதமிஞ்சிய வெற்றியின் காரணமாக தொடங்கப்பட்ட அரசியல் விமர்சனப் பத்திரிகையான துக்ளக்கின் ஆசிரியரானார் சோ. ஜனவரி 1970ல், மாதம் இருமுறை இதழாக துக்ளக் வரத்தொடங்கியது.

விஷயம் தெரிந்தவன் என்று ஏதோ பெயர் இருந்தாலும், ‘முகமது பின் துக்ளக்’ என்ற 14வது  நூற்றாண்டு மன்னன், தாறுமாறான முடிவுகளை எடுத்தவன் என்ற அபகீர்த்தி பெற்றவன். ஒரு கோமாளி ராஜாவின் பெயரைத் தனது பத்திரிகைக்கு சூட்டுவதால், கேலியும், கிண்டலும், எள்ளலும் நிரம்பிய தன்னுடைய அரசியல் குத்தல்களுக்கு கூடுதல் கவனம் கிடைக்கும் என்று எண்ணினார் சோ.

துக்ளக் ‘பிராண்ட்’ திரைப்படமாகவும் வெளிவந்தால் அதை நிலைநிறுத்துவதில் இன்னொரு படி முன்னேற்றம்தானே? ‘முகமது பின் துக்ளக்’  திரைப்படத்தை சோவே இயக்கினார், ‘டைரக்ஷன் கற்றுக்கொள்ள முயற்சி’ என்ற அறிவிப்புடன்! ஆனால் படத்தைப் பொறுத்தவரை அது கற்றுக்குட்டியின் கிறுக்கல் முயற்சியாகத் தெரியவில்லை. நல்ல முறையில் அமைந்த படமாகத்தான் இருந்தது.

இந்திரா காந்தி போல் ‘பாப்’ தலையுடன் படத்தில் தோன்றும் மனோரமா குறித்து, ‘பாவலன் பாடிய புதுமைப் பெண்ணை பூமியில் கண்டது இன்று’ என்று ஒரு பாடல் படத்தில் முழங்குகிறது. திரை வடிவத்தில் புகுத்தப்பட்ட இந்தப் பாடல் அரசியல் தலைவியின்      முரண்பாடுகளை மிக அழகாக கண்முன்னே நிறுத்துகிறது.  மனோரமா, வெண்ணிற ஆடை மூர்த்தி என்று ஒரு சில சினிமா நடிகர்களைப் படத்தில்  தெளித்திருந்தாலும், பெரும்பாலும் தன்னுடைய நாடகக் குழுவினைரைக்கொண்டே படத்தை எடுத்திருந்தார் சோ.

அன்றைய அரசு, துக்ளப் படத்தை முஸ்லிம் விரோத படம் என்று சித்தரித்து அதை தடைக்கு உள்ளாக்கப்பார்த்ததால், ‘அல்லா அல்லா’ பாடலை கடைசி நேரத்தில் டைட்டில் பாடலாக சேர்த்தார் சோ. அதை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனைக் கொண்டு பாடச் செய்தார். பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால், எம்.எஸ்.வி. அதைத்தொடர்ந்து பல படங்களில் பாடும் நிலை வந்தது.

நாடகம், பத்திரிகை, திரைப்படம் என்று துக்ளக் பெற்ற முப்பரிமாண வெற்றி சோவை அரசியல் விமர்சகராக நிலைநிறுத்தியது. தன்னுடைய 24 நாடகங்களில் ஒரு சில தான் அரசியல் தொடர்புடையவை. ஆனால் அவை பெற்ற அதிகப்படியான கவனத்தால், மற்றவை கவனிக்கப்படுவதில்லை என்ற சோவேகூட வருத்தப்பட்டதுண்டு.

விலைமாதர் பிரச்னையை சோ துணிச்சலாக மையப்படுத்திய நாடகம், ‘யாருக்கும் வெட்கமில்லை’. சமூகமே விலைமாதர்களை உருவாக்குகிறது. அந்த சமூகமே அவர்களை இழிவுபடுத்துகிறது. இந்த முரண்பாட்டை சோ மிக அழகாக நாடகத்தில் வெளிக்கொண்டுவந்தார். அதில் அவர் ஏற்ற ராவுத்தர் வேடத்தில் மிக அழகாக நடிக்கவும் செய்தார். ‘யாருக்கும் வெட்கமில்லை’ 1975ல்  திரைப்படமாக வந்த போது, அதே வேடத்தில் நடித்ததுடன் படத்தின் இயக்குநராகவும் இருந்தார். சந்தர்ப்பவசத்தால் விலைமாதாக மாறிய கதாநாயகி வேடத்தை ஜெயலலிதா ஏற்றார். ‘எப்படியாவது உயிர் வாழ நினைக்கும் விலை மாது’ என்று நீதிபதி தண்டிக்கும் தறுவாயில் உயிரைப்போக்கிக்கொண்டு தீர்ப்பை தவறென்று நிரூப்பிக்கும் உயர்ந்த பாத்திரம் அது. ‘மேலும் கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம்’ என்று படத்தில் ஜேசுதாஸ் பாடிய பாடல் பேசப்பட்டது.

சமூகத்தில் உண்மை வெளிவராமல் போவதற்கு காரணம், பலர் விலைபோவதுதான் என்ற உண்மையை ‘உண்மையே உன் விலை என்ன?’ என்ற நாடகம் முன் வைத்தது. இதைத் திரையிலும் சோ இயக்கினார். உண்மையை வெளிக்கொண்டுவரப் பாடுபடும் பாதிரியாராக முத்துராமன் நடித்தார். சாட்சிகளை விலைக்கு வாங்கும் ஆரோக்கியசாமியாக அசோகன் நடித்தார். தெலுங்கு கலந்து பேசும் வக்கீல் சத்யநாராயணா வேடத்தை சோ ஏற்றார். இந்த வக்கீல் உட்பட பலர் உண்மையை மறைக்கும் சதிக்கு அடிபணிந்து விலைபோகிறார்கள். ஆனால் கடைசியில் ஓர் இலட்சியவாதியின் உயிர் போகிறது...உண்மை அம்பலமாகிறது.  ஒரு நல்லவன் தியாகம் செய்யும் உயிர்தான், உண்மைக்குத் தரப்படுகிற விலை என்பதுதான் கருத்து.

பின்னாளில் ‘சரஸ்வதியின் சபதம்’ என்ற தன்னுடைய நாடகத்தை சின்னத்திரைக்காக  தானே இயக்கித் தயாரித்தார் சோ. அதில் நாரதராக என்னை நடிக்க வைத்தார். இந்த சின்னத்திரை தொடரில் ஸ்ரீவித்யா சரஸ்வதியாக நடித்தார். எழுத்தாளர் தாசானுதாசனின் சேஷ்டைகளால் கலைவாணிக்கே குழப்பம் ஏற்படுவதாக கதையை அமைத்திருந்தார், தாசானுதாசனாக நடித்த சோ!

(தொடரும்)