சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில்

பதிவு செய்த நாள்

24
அக்டோபர் 2015
06:56

ஸ்தல வரலாறு ...

 

தென்னிந்தியாவில் அதிகமாக தரிசிக்கப்படும் கோயில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலின் வாயிலை வெகு தொலைவில் இருந்தும் நம்மால் காணமுடியும். இக்கோயில் கோபுரம்134 அடி உயரத்திற்கு மிகக்கம்பீரத்துடன் காட்சி அளிக்கிறது. கோபுரத்தில் பல இந்து கடவுளர்களின் சிலைகள், சிற்பங்கள் இந்து புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட பல்வேறு காட்சிகள் காணப்படுகின்றன.

 

இக்கோயிலின் வாயில் 21 அடி உயரத்துடன், மிக நுணுக்கமாக குடைந்து அமைக்கப்பட்டதாகும். வெளிப்புற சுவரை அடுத்து, வலதுபுறமாக இக்கோயிலின் பிரகாரம் அமைந்துள்ளது. பிரகாரம் நெடிகிலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள சிறு, சிறு மண்டபங்கள், சிறு கோயில்கள் உள்ளன. கிட்டத்தட்ட 30 இந்து தெய்வங்கள் இங்கு எழுந்தருளியிருப்பதால், சிவன் மற்றும் விஷ்ணு பக்தர்களிடையே, மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது. இக்கோயிலின் கருவறையில் மிகப்பெரிய லிங்கமும், அதன் அருகில் விஷ்ணுவின் சிலையும் அமைந்துள்ளது.

 

சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர். தவிர உடல்பலம், மனபலம் கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டி கொள்கின்றனர். தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கின்றனர்.

 

இந்து மதத்திலுள்ள அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சுசீந்திரம் கோயில் ஓர் உயர்ந்த ஏழு நிலை கோபுரத்தை முகப்பில் கொண்டது. இதனை நாஞ்சில் நாட்டின் பல பகுதிகளில் நின்றும் காணலாம். கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும், கன்னியாகுமரிக் கடற்கரையையும் கண்குளிர காணலாம். கோயிலின் அகச்சுற்று மண்டபம் பரப்பிலும், அழகிலும் ராமேஸ்வரம் அகச்சுற்று மண்டபத்திற்கு இணையானது.

 

அயன், அரி, அரன் ஆகிய முப்பெருங் கடவுளரும் இக்கோயிலில் வழிபடப்படுகின்றனர். அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சõபம் விமோசனம் பெற்ற இடம். இங்கு தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சுசீந்திரம் என பெயர் வழங்கலாயிற்று. அத்ரி மகரிஷியின் பத்தினி அனுசூயாதேவி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்தியை குழந்தைகளாக உருவாக்கி கற்பின் பெருமையை உலகுக்கு எடுத்துக்காட்டி, மூவரும் ஓருருவாக காட்சி தந்த புண்ணிய தலம். தம்பதி சகிதமாக வணங்க வேண்டும்.

 

இங்குள்ள அனுமன் சிலை மிகவும் அழகானது; பிரம்மாண்டமானது. ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். இதன் உயரம் 18 அடி கொண்டு அற்புதமான சிற்பமாக அமைந்திருக்கும். இந்த அனுமன் இத்தலத்தில் மிவும் விஷேஷம். மேலக்கோபுர வாயிலுக்கு நிலத்தை தோண்டும்போது இந்த அனுமன் சிலை கிடைத்தது. 1929ம் ஆண்டில் ராமபிரானின் கருவறைக்கு எதிரில் இருக்குமிடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

பெரிய அனுமன் சிலையும், இறைவன் வாகனமாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசை தூண்களும் மண்டபங்களின் கட்டழகும் இங்கு சிறப்பாகும். எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும். இக்கோயிலில் அறம் வளர்த்த அம்மன் கருவறை உள்ளது. மேலும், கலைநயம் மிக்க சிற்பங்களுடன் கூடிய செண்பகராமன் மண்டபம், இசைத்தூண்கள் கொண்ட குலஷேகர மண்டபம், திருக்கல்யாணம் நடக்கும் ஊஞ்சல் மண்டபம், வேனிற்காலத்தில் மும்மூர்த்திகள் ஓய்வெடுக்கும் வசந்த மண்டபம், பல இறையுருக்களின் சிற்பங்களைக்கொண்ட சித்திர சபை என கலை வேலைப்பாடுகள் மிகுந்த மண்டபங்கள் உள்ளன.

 

இங்கு தினசரி வழிபாடுகள் நடத்தப்பெற்றாலும் சித்திரை தெப்பத்திருவிழா ஒரு நாள், ஆவணி பெருநாள் திருவிழா ஒன்பது நாட்கள், மார்கழி திருவாதிரை திருவிழா 10 நாட்கள், மாசி திருக்கல்யாண திருவிழா ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

 

சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் 5,400 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் அரச கோபுரத்தின் உயரம் நூற்று முப்பத்தி நாலரை அடி இருக்கிறது. இக்கோயிலின் நவக்கிரகங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. இந்த நவக்கிரகங்களின் சிற்பங்கள் மேற்கூரையில் உள்ளன.

 

கோயிலின் பிரதான நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் வடக்கு திசை நோக்கியபடி சப்த கன்னியர் சன்னதி உள்ளது. சப்த கன்னியரின் வலது புறம் விநாயகரும், இடதுபுறம் வீரபத்திரரும் தனித்தனி சன்னதிகளில் காட்சி அளிக்கின்றனர். தாணுமாலயன் கோயிலுக்கு அருகில் வடதிசையில் அம்பிகை ஆண் தெய்வங்களுக்கு எல்லாம் முந்தி பிறந்ததால் முன்னுதித்தி நங்கை அம்மன் என பெயர்பெற்ற கோயிலில் அம்மன் சன்னதிக்கு இடதுபுறத்தில் மேற்கில் இருந்து கிழக்கு பார்த்த கோலத்தில் சப்த கன்னியர்கள் காட்சி அளிக்கின்றனர். இங்கு ஒரேகல்லில் சப்த கன்னியர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளனர்.

 

போக்குவரத்து வசதி

நாகர்கோவில் வடசேரி பஸ்நிலையத்திலிருந்து 8 கி.மீ. தூரத்தில் பஸ் வசதியும், கோட்டாறு ரயில்வேஸ்டேஷனலிருந்து 4 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

தொடர்பு எண்: 04652- - 241421