புத்தாண்டு, ஏகாதசி, துவாதிசி நாட்களில் சாதாரண பக்தர்களுக்கு விரைவு தரிசனம்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 14 டிசம்பர் 2016 06:47

திருமலை:திருப்பதிக்கு வரும் சாதாரண பக்தர்களுக்கு அடுத்த மாதம் வர இருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசி நாட்களில், தரிசனம், தங்கும் அறைகள் ஒதுக்கீடுகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம்அறிவித்துள்ளது.  

திருப்பதி திருமலையில் நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் தலைமையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளின் வாராந்திர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இணை நிர்வாக அதிகாரி சீனிவாச ராஜா மற்றும் தேவஸ்தான தலைமை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.  

கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் தேவஸ்தான நிர்வாக அதிகாரி சாம்பசிவராவ் கூறியதாவது: ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி, வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 8ம் தேதி மற்றும் துவாதசி தினமான ஜனவரி 9ம் தேதி ஆகிய நாட்களில், ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வருவது வழக்கம். வரவிருக்கும் இந்த முக்கிய நாட்களிலும் பக்தர்கள் வருகை கடந்த ஆண்டுகளை போலவே அதிகமாக இருக்கும் என்பதால், சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், அவர்களுக்கு அடிப்படை வசதிகள், தரிசன வாய்ப்பு ஆகியவை விரைவாக கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளன.  சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் காத்திருக்கும் இடங்களில் பக்தி நிகழ்சிகளை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.