சினிமாவில் எம்.ஜி.ஆர். – 286 – விஜயபாஸ்கர்

06 டிசம்பர் 2016, 11:20 PM

எதிர்பார்த்ததற்கும் மேலான வசூல்!

பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

எம்.ஜி.ஆர். அவர்­க­ளு­டன் அவ­ரது ‘பிளை­ம­வுத்’ காரில் நானும் சென்­றேன். வழக்­க­மாக கல­க­லப்­பா­கப் பேசி­ய­படி வரும் அவர், அன்று எதையோ தீவி­ர­மாக யோசித்­த­படி மௌன­மா­கவே இருந்­தார். திரைப்­பட அரங்­கின் வாச­லி­லேயே மாண­வர்­கள் ஒன்று திரண்டு, கோலா­க­ல­மாக அவரை வர­வேற்­றார்­கள். ரசி­கர்­க­ளின் கூட்­டம் அலை மோதி­யது.

படம் திரை­யி­டப்­பட்டு, இடை­வே­ளை­யின் போது எம்.ஜி.ஆர். அவர்­கள் பேச மேடைக்கு அழைக்­கப் பட்­டார். ரசி­கர்­க­ளின் அன்­பான ஆர­வா­ரம் அடங்­கவே பல நிமி­டங்­கள் பிடித்­தன. எம்.ஜி.ஆர். அவர்­கள் பேச ஆரம்­பித்­தார்­கள்.

“திரைப்­ப­டம் மிக சக்தி வாய்ந்­தது. பார்ப்­ப­வர் மன­தில் உடனே ஆழ­மா­கப் பதி­யக்­கூ­டி­யது. நல்ல கருத்­துக்­களை மக்­க­ளுக்கு படங்­க­ளின் மூலம் எடுத்­துச் சொல்ல வேண்­டும்.

மக்­க­ளி­டையே ஒற்­று­மையை வளர்க்க வேண்­டும். வெறுப்­பை­யும் வேற்­று­மை­யை­யும் ஏற்­ப­டுத்­தக்­கூ­டாது. இந்­தப் படத்­தில் செருப்பு வைக்­கும் காட்சி இடம் பெற்­றுள்­ளது. இந்­தக் காட்­சி­யைப் பார்க்­கும் போது நான் மிக­வும் வேத­னைப்­பட்­டேன். என்­னைப் போலவே படம் பார்த்த ஆயி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­க­ளும் வருத்­தப்­பட்­டி­ருப்­பார்­கள்.

குறிப்­பிட ஓர் இனத்­த­வ­ரின் கலாச்­சா­ரத்­திற்கு இது ஏற்­பு­டை­ய­தாக இருந்­தா­லும், வேறு ஒரு பகு­தி­யைச் சேர்ந்த மக்­க­ளின் உணர்வை அது பாதிக்­கு­மா­னால், அம்­மா­தி­ரி­யான காட்­சி­களை படத்­தில் இடம் பெறச் செய்­யா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும். இதை கலை­ஞர்­கள் எங்­கி­ருந்­தா­லும் கவ­னிக்க வேண்­டும்: கடைப்­பி­டிக்க வேண்­டும்” என்று தனது எதிர்ப்­பைத் தெரி­வித்த அவர், அதே சம­யம் மாண­வர்­க­ளின் நாட்­டுப் பற்­றை­யும் அவர்­க­ளது நல்ல நோக்­கத்­தை­யும் மிக­வும் புகழ்ந்­தார். அந்த ஒரு கார­ணத்­திற்­கா­கவே தான் வரச் சம்­ம­தித்­த­தை­யும் எடுத்­துச் சொன்­னார்.

விழா முடி­வ­டைந்து திரும்­பும் சம­யம் வந்­தது.

காரில் ஏறப்­போ­கும் முன் விழா நிர்­வா­கியை அழைத்து விழா­வைச் சிறப்­பாக நடத்­தி­ய­தற்­கா­கப் பாராட்டி நன்றி தெரி­வித்து, “நாளை என்னை வந்து பாருங்­கள்” என்று அவ­ரி­டம் கூறி, பின்­னர் என் பக்­கம் திரும்பி, “அவரை அழைத்து வரும் பொறுப்பு உங்­க­ளு­டை­யது!” என்­றார்.

திரும்­பும் சம­யம் வழி நெடுக பேசி­ய­படி வந்­தார். அவ­ரது மன இறுக்­கம் தணிந்­து­விட்­டது என்­ப­தைப் புரிந்து கொண்­டேன்.

மறு­நாள் விழா அமைப்­பா­ள­ரு­டன் (அவ­ரது பெயர் திரு.ராஜ்­கி­ஷோர் என்று நினைவு) எம்.ஜி.ஆர். அவர்­களை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்­தேன்.

முகம் மலர வர­வேற்­றார். விழா அமைப்­பா­ள­ரி­டம் “உங்­க­ளது நோக்­கம் உயர்­வா­னது. ஆனால் நீங்­கள் தேர்ந்­தெ­டுத்த படம் பற்றி அப்­படி என்­னால் சொல்ல முடி­யாது. உங்­க­ளது நற்­ப­ணிக்கு என் சிறிய காணிக்கை!” என்று, ஒரு பெரிய தொகைக்­கான காசோ­லை­யும் அவ­ரி­டம் தந்­தார். எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் உயர்ந்த பண்­பை­யும் அன்­பை­யும் கண்டு, வந்­த­வர் திக்­கு­முக்­கா­டிப் போய்­விட்­டார்.

அவர் புறப்­பட்­டுச் சென்­ற­தும் எம்.ஜி.ஆர். அவர்­க­ளி­டம் நான், ‘’நேற்று விழா மேடை­யி­லேயே இதைத் தந்­தி­ருக்­க­லாமே. இன்­னும் சிறப்­பாக இருந்­தி­ருக்­குமே!” என்­றேன்.

எம்.ஜி.ஆர். அவர்­கள் கல­க­ல­வெ­னச் சிரித்­தார்.

“நேற்­றைய விழா­வில் படத்­தைப் பற்றி என் எதிர்ப்பை வெளி­யிட்­ட­போது இதைச் செய்­தி­ருந்­தால் இதற்­குத்­தான் முக்­கி­யத்­து­வம் கிடைத்­தி­ருக்­கும். என் எதிர்ப்­புக்கு வலிமை குறைந்து போயி­ருக்­கும்” என்­றார்.

எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் சமா­தா­னம் எனக்­குத் திருப்­தி­யைத் தந்­தது. அதே சம­யம் பிறர் மனம் புண்­ப­டாத நிலை­யில் தன் எதிர்ப்­பைத் தெரி­விக்­கும் நய­மும் என்னை வியக்க வைத்­தது.