சினிமாவில் எம்.ஜி.ஆர். – 285 – விஜயபாஸ்கர்

பதிவு செய்த நாள் : 30 நவம்பர் 2016

விரும்பத்தகாத கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி!

பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

‘கலை­ஞர்­க­ளுக்­குள் போட்டி இருக்­க­லாம். இத­னால் தொழி­லில் முன்­னேற்­ற­மும் வளர்ச்­சி­யும் காண முடி­யும். ஆனால் எந்த ஒரு கட்­டத்­தி­லும் பொறா­மை­யாக அது மாறி­வி­டக்­கூ­டாது. இது பெரும் பாதிப்பை வளர்ச்­சி­யில் ஏற்­ப­டுத்­தி­வி­டும்’ என்­பதை சந்­தர்ப்­பம் கிடைக்­கும் போதெல்­லாம் வலி­யு­றுத்தி வரு­வார் எம்.ஜி.ஆர். இதற்­கா­கவே நடி­கர்­கள் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் அடிக்­க­டி சந்­தித்­திப் பேசிப் பழக வேண்­டும் என்ற கருத்­தி­னைக் கொண்­டி­ருந்த அவர் அதைச் செய­லி­லும் காட்டி வந்­தார்.

நடி­கர் சங்­கத்­தின் தலை­வ­ராக எம்.ஜி.ஆர். இருந்த சம­யம், ஒவ்­வொரு ஆண்­டும் பொங்­கல் விழாவை சங்­கத்­தின் சார்­பில் சிறப்­பா­கக் கொண்­டாட ஏற்­பாடு செய்­வார். நடி­கர் சங்­கத்­தில் (தற்­போ­தைய அ.தி.மு.க. தலை­மை­ய­கம்) கலை­ஞர்­க­ளுக்­கென பல கலை நிகழ்ச்­சி­கள், போட்­டி­கள், கருத்­த­ரங்­கு­கள் ஏற்­பாடு செய்­வார். கலை­ஞர்­க­ளைப் பங்­கேற்க வைப்­பார்.

விழா காலை­யி­லேயே ஆரம்­ப­மா­கி­வி­டும். மூத்த கலை­ஞர்­க­ளின் அறி­வு­ரை­க­ளு­டன் விழா ஆரம்­ப­மாகி, இரவு வரை தொட­ரும். காலை சிற்­றுண்டி, பக­லு­ண­வு­டன் இரவு விருந்­தும் இருக்­கும். அனை­வ­ரு­ட­னும் தரை­யில் அமர்ந்து வேடிக்­கை­யா­கப் பேசி­ய­படி உணவு அருந்­து­வார். பம்­ப­ரம் போலச் சுற்­றிச் சுழன்று எல்லா ஏற்­பா­டு­க­ளும் சரி­வர நடக்­கின்­ற­னவா என்­ப­தைக் கண்­கா­ணிப்­பார். எல்­லாக் கலை­ஞர்­க­ளை­யும் அவரே முன்­வந்து வர­வேற்று உப­ச­ரிப்­பார்; முகமலர்ச்­சி­யு­டன் விடை கொடுத்து அனுப்­பு­வார்.

பல வெற்­றிப் படங்­க­ளில் தொடர்ந்து நடித்து, ‘நடி­கர் தில­கம்’ எனப் போற்­றப்­பட்ட சிவாஜி கணே­சன், மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் மிக்க செல்­வாக்­கு­டன் திகழ்ந்து வந்­தார். அவ­ருக்கு ஒரு படி மேலாக எம்.ஜி.ஆரும் மிக்க செல்­வாக்­கு­டன் விளங்கி வந்­தார்.

இரண்டு கலை­ஞர்­க­ளுக்­கும் லட்­சக்­க­ணக்­கில் ரசி­கர்­கள் இருந்­தார்­கள். அவர்­க­ளி­டையே பலத்த போட்­டி­யும் இருந்­தது. தங்­க­ளது அபி­மான நடி­கர் மீது கொண்­டி­ருந்த அன்­பும் பாச­மும் சில சம­யம் இவர்­க­ளி­டையே வெறி­யா­கக்­கூட மாறி­யது. தங்­க­ளது அபி­மான நடி­க­ருக்­குப் போட்­டி­யாக இருந்த நடி­கர் நடித்த படங்­கள் திரை­யி­டப்­ப­டும் சம­யம் ஒட்­டப்­ப­டும் சுவ­ரொட்­டி­கள் மீது சாணம் அடிப்­ப­தும், சுவ­ரொட்­டி­க­ளைக் கிழிப்­பது போன்ற சம்­ப­வங்­க­ளூம் நடை­பெற்று வந்­தன.

திரைப்­ப­டத்­து­றை­யின் வளர்ச்­சி­யில் அக்­கறை கொண்ட பலர் இந்த இரண்டு கலை­ஞர்­க­ளை­யும் சந்­தித்து, விரும்­பத்­த­காத இந்­தக் கலா­சா­ரத்­திற்கு முற்­றுப் புள்ளி வைக்க முன்­வ­ரு­மாறு கேட்­டுக்­கொண்­டார்­கள்.

துர­தி­ர்ஷ்­ட­வ­ச­மாக அப்­போது ஒரு சம்­ப­வம் நடந்­தது. சீர்­கா­ழி­யில் நாட­கம் நடத்­த சென்­றி­ருந்த எம்.ஜி.ஆர்., நாடக மேடை­யில் எதிர்­பா­ராத வகை­யில் விபத்­துக்­குள்­ளாகி, அவ­ரது கால் எலும்பு முறிந்து போனது. நாட­கத்தை மேற்­கொண்டு நடத்த முடி­யாத நிலை­யில், எம்.ஜி.ஆர். சென்­னைக்கு உடனே திரும்பி, பூந்­த­மல்லி நெடுஞ்­சா­லை­யில் உள்ள ஒரு தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்­சைக்­கா­க சேர்க்­கப்­பட்­டார்.

திரைப்­ப­ட­வு­ல­கை­யும், லட்­சக்­க­ணக்­கான அவ­ரது ரசி­கர்­க­ளை­யும் இச்­சம்­ப­வம் மிக்க துய­ரத்­திற்­குள்­ளாக்­கி­யது. அவர் பூரண குணம் பெற்று விரை­வில் திரும்ப வேண்­டும் என அனை­வ­ரும் மன­தார விரும்­பி­னார்­கள்.

இந்த நிலை­யில் நானும், என்­னு­டன் அப்­போது ‘பேசும் படம்’ பத்­தி­ரி­கை­யில் பணி­யாற்றி வந்த எஸ்.வி. சம்­பத்­கு­மா­ரும் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்­தோம். அவ­ரது உடல்­ந­லம் பற்றி விசா­ரித்து அவர் பூரண குணம் பெற்று விரை­வில் திரும்ப வேண்­டும் என வாழ்த்­தி­னோம்.

‘பயப்­பட எது­வு­மில்லை. விரை­வில் குண­ம­டைந்து, முன்பு இருந்­ததை விட முழு உற்­சா­கத்­து­டன் படப்­பி­டிப்­பில் கலந்து கொள்­வேன். இதை என் ரசி­கர் களுக்­குத் தெரி­வி­யுங்­கள்’ என்று எங்­க­ளுக்கு ஆறு­தல் சொல்லி, தன்­னம்­பிக்­கை­யு­டன் பதில் தந்­தார்.

பேச்­சுக்­கி­டை­யில் அவ­ரி­டம் நாங்­கள் விளம்­ப­ரச் சுவ­ரொட்­டி­க­ளில் சாணம் அடிப்­பது பற்­றி­யும், கிழித்து அலங்­கோ­லப்­ப­டுத்­து­வ­தைப் பற்­றி­யும் குறிப்­பிட்டு, ‘இதை நிறுத்த நீங்­கள் உட­ன­டி­யாக ஏதா­வது முயற்சி எடுக்க வேண்­டும்’ என்று கேட்­டுக்­கொண்­டோம்.

அப்­போ­தைய சூழ்­நி­லை­யை­யும், உடல் நிலை­யை­யும் பொருட்­ப­டுத்­தா­மல், ‘உண­மை­தான். இதை உடனே செய்ய வேண்­டும். எனது ரசி­கர்­கள் இம்­மா­திரி நடந்து கொள்­ள­மாட்­டார்­கள். அப்­படி அவர்­கள் செய்­வார்­க­ளே­யா­னால் எனக்கு அதில் உடன்­பாடே கிடை­யாது!’ என உணர்ச்சிவசப்­பட்­டுச் சொன்­னார் அவர்.

'இதையே ஓர் அறிக்­கை­யாக நீங்­கள் தந்­தால் ‘பேசும் படம்’ இத­ழில் வெளி­யி­டு­வோம். உங்­களை உங்­கள் ரசி­கர்­கள் புரிந்து கொள்ள ஏது­வா­கும்' என்று நாங்­கள் சொன்­ன­தும், உடனே ஓர் அறிக்­கை­யை­யும் தயா­ரித்­துக் கொ­டுத்­தார். அறிக்­கை­யின் முடி­வில் புகைப்­ப­டத்­து­டன், தனது கையெ­ழுத்­தை­யும் வெளி­யி­டும்­ப­டிக் கேட்­டுக்­கொண்டு, தன் கையெ­ழுத்­தை­யும் போட்­டுத் தந்­தார்.

எம்.ஜி.ஆர். விருப்­பப்­ப­டியே ‘பேசும் படம்’ இத­ழில் அந்த அறிக்­கை பிர­சு­ரிக்­கப்­பட்டு அதற்­கான பல­னும் விரை­வில் கிடைத்­தது. சாணம் அடிப்­பது நீங்­கி­யது.