சினிமாவில் எம்.ஜி.ஆர். – 284 – விஜயபாஸ்கர்

23 நவம்பர் 2016, 12:09 AM

உதவிக்கரம் நீட்டிய வள்ளல்!

பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

ஐம்­ப­து­க­ளின் முற்­ப­குதி.

ஒரிசா மாநி­லத்­தில் பெரும் வெள்­ளம் ஏற்­பட்டு, ஆயி­ரக்­க­ணக்­கான மக்­கள் வீடு வாசல்­க­ளை­யும் உடை­மை­க­ளை­யும் வாழ்க்­கை­யை­யும் இழந்து தவிக்­கும் அவ­ல­நிலை ஏற்­பட்­டது. நிவா­ரண நிதிக்கு உத­வும்­படி ஒரிசா அரசு அறிக்­கை­யும் தந்­தது.

ஒரி­சா­வைச் சேர்ந்த சில மாண­வர்­கள் அப்­போது சென்­னை­யில் தங்கி, மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் படித்து வந்­தார்­கள். நிவா­ரண நிதிக்கு பணம் திரட்­டித்­தர அவர்­கள் விரும்­பி­னார்­கள். என்னை வந்து சந்­தித்­தார்­கள். வைஜ­யந்­தி­மா­லா­வும் கிஷோர்­கு­மா­ரும் நடித்த ‘நியூ­டெல்லி’ என்ற இந்­திப்­ப­டம் வட இந்­திய நக­ரங்­க­ளில் திரை­யி­டப்­பட்டு பெரும் வெற்­றி­யு­டன் ஓடிக்­கொண்­டி­ருந்­தது.

‘ஒரிசா நிவா­ரண நிதிக்­காக, சென்னை ‘அசோக்’ திரை­ய­ரங்­கில் (தற்­போ­தைய ‘சிவ­சக்தி’) ‘நியூ டெல்லி’ படத்தை காலைக் காட்­சி­யா­கத் திரை­யி­டப் போகி­றோம். எம்.ஜி.ஆர். அவர்­களை நிகழ்ச்­சிக்­குத் தலைமை வகிக்க நீங்­கள் ஏற்­பாடு செய்து தர­வேண்­டும். அவர் வந்­தால் வசூல் அதி­க­மா­கக் கிடைக்­கும்” என்று அந்த மாண­வர்­கள் என்­னி­டம் கேட்­டுக் கொண்­டார்­கள். நான், எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து இது­பற்­றிச் சொன்­னேன்.

“அவ­திப்­ப­டும் மக்­கள் எங்­கி­ருந்­தால் என்ன, யாரா­யி­ருந்­தால் என்ன? அவர்­க­ளது துய­ரத்­தைத் துடைக்க வேண்­டி­யது நமது கடமை. நல்ல நோக்­கத்­திற்­காக இவர்­கள் அழைக்­கி­றார்­கள். நிச்­ச­யம் கலந்து கொள்­கி­றேன்” என்று எம்.ஜி.ஆர். அவர்­கள் சொன்­னார்­கள். ஒரிசா மாண­வர்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி.

எம்.ஜி.ஆர். அவர்­கள் அப்­போது தி.மு.க.வில் ஒரு முக்­கிய புள்ளி. இந்தி எதிர்ப்­பில் அக்­கட்சி தீவி­ர­மாக இருந்­தது. “இந்தி படத்­திற்கு அழைக்­கி­றோமே, அவர் வரு­வாரா என்ற சந்­தே­கம் இருந்­தது. பயந்­த­ப­டி­தான் இருந்­தோம். எங்­க­ளுக்கு பெரும் மகிழ்ச்சி” என்று அந்த மாண­வர்­கள் தெரி­வித்­தார்­கள்.

“எம்.ஜி.ஆர். அவர்­கள் இந்­திக்கு எதி­ரா­ன­வர் அல்ல. அது மக்­கள் மீது திணிக்­கப்­ப­டும் முறை­யைக் கண்­டிக்­கி­றார். அவர் நடித்த மர்­ம­யோகி, சர்­வா­தி­காரி படங்­கள் இந்­தி­யில் மொழி மாற்­றம் செய்­யப்­பட்டு வந்­தி­ருக்­கின்­றன. சொந்­தத்­தில் இந்­தி­யில் ஒரு படம் தயா­ரிக்­க­வும் அவர் திட்­ட­மிட்­டி­ருந்­தார். ஆனால் அது கைகூ­ட­வில்லை” என்று மாண­வர்­க­ளி­டம் எடுத்­துச் சொன்­னேன். அவர்­கள் நேரில் எம்.ஜி.ஆர். அவர்­க­ளைச் சந்­தித்து தங்­கள் மகிழ்ச்­சி­யை­யும் நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொண்­டார்­கள். விழா­வுக்­கான நாள் நெருங்­கிக் கொண்­டி­ருந்­தது.

இதற்­கி­டை­யில் ‘நியூ­டெல்லி’ படம் சென்­னை­யில் திரை­யி­டப்­பட்­டது. அதில் இடம் பெற்ற ஒரு காட்­சி­யைப் பற்றி சில பத்­தி­ரி­கை­கள் கடு­மை­யாக விமர்­ச­னம் செய்­தன. கண்­ட­னத்­துக்கு உள்­ளான காட்சி இது­தான்.

ஒரு பொது இடம். படத்­தின் நாய­கன் (கிஷோர் குமார்) ஒரு தமி­ழ­னின் தலை­யில் செருப்பை வைத்து ஆடிப் பாடி வரு­கி­றார் அங்கு கதா­நா­ய­கி­யும் (வைஜ­யந்தி மாலா) இருக்­கி­றார். “ஒரு தமிழ் நடிகை கதா­நா­ய­கி­யாக நடித்­துள்ள படத்­தில் எப்­படி இந்­தக் காட்சி இடம் பெற­லாம்? தணிக்­கை­யில் எப்­படி அனு­ம­தித்­தார்­கள்? தமிழ் நாட்­டில் இதை திரை­யிட அனு­ம­திக்­க­லாமா?” என்று விமர்­ச­னங்­கள் வர, ஒரே பர­ப­ரப்­பா­கி­விட்­டது. விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்த மாண­வர்­க­ளுக்கு பெரும் பயம் வந்து விட்­டது. எம்.ஜி.ஆர் அவர்­கள் நிகழ்ச்­சிக்கு வரு­வாரா மாட்­டாரா என்ற கவ­லை­யு­டன் பதை­ப­தைப்­பு­டன் என்னை வந்து சந்­தித்­தார்­கள். இதற்­கி­டையே எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் பார்­வைக்­கும் இந்த விமர்­ச­னங்­கள் வந்­தன. அவர் என்னை அழைத்­தார். “தமி­ழர்­களை இழிவு செய்­யும் காட்­சி­யைக் கொண்ட இப்­ப­டத்­திற்கு நான் எப்­ப­டித் தலைமை வகித்து வசூ­லுக்கு உதவ முடி­யும்? இதை முன்­னமே நீங்­கள் ஏன் என்­னி­டம் சொல்­ல­வில்லை? என்னை தர்­ம­சங்­க­டத்­தில் வைத்து விட்­டீர்­களே!” என்று சற்று கடு­மை­யா­கவே என்­னி­டம் பேசி­னார்.

“அந்­தப் படத்தை நான் பார்க்­க­வில்லை. பார்த்­தி­ருந்­தால் உங்­களை அழைத்­தி­ருக்­கவே மாட்­டேன்!” என்­றேன். என்­னைப் புரிந்­து­கொண்ட நிலை­யில் “இப்­போது என்ன செய்­ய­லாம்?” என்­றார். ஒரிசா மாண­வர்­கள் என்­னைச் சந்­தித்­துப் பேசிய விவ­ரத்தை அவ­ரி­டம் சொன்­னேன்.

“அவர்­கள் நிர­ப­ரா­தி­கள். ஒரு நல்ல நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில்­தான் இதைத் திரை­யி­டு­கி­றார்­கள். பெரி­தாக விளம்­ப­ரம் செய்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு இந்த விஷ­யம் தெரிந்­தி­ருக்க நியா­ய­மில்லை. கடைசி நிமி­ஷத்­தில் நீங்­கள் மறுத்­து­விட்­டால் பெரி­தும் மனம் ஒடிந்து போய் ஏமாற்­ற­ம­டைந்து விடு­வார்­கள். தவிர, நீங்­கள் மறுத்­து­விட்­டால். வேறு எவ­ரும் முன்­வந்து தலைமை வகிக்­கத் துணி­ய­மாட்­டார்­கள் உங்­கள் விருப்­பப்­ப­டிச் செய்­ய­லாம்” என்­றேன். சில நிமி­ஷங்­கள் யோசித்த அவர், “விழா­வுக்கு வரு­கி­றேன். ஆனால் அதே சம­யம் என் எதிர்ப்­பை­யும் நான் காட்­டு­வேன்” என்­றார். “அது உங்­கள் தனிப்­பட்ட உரிமை. எவ­ரும் தலை­யிட முடி­யாது!” என்­றேன்.

விழா நாள் வந்­தது.