உதவிக்கரம் நீட்டிய வள்ளல்!
பிரபல சினிமா பத்திரிகையாளர் பொம்மை சாரதி, பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆருடனான தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் பகிர்வு...
ஐம்பதுகளின் முற்பகுதி.
ஒரிசா மாநிலத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான மக்கள் வீடு வாசல்களையும் உடைமைகளையும் வாழ்க்கையையும் இழந்து தவிக்கும் அவலநிலை ஏற்பட்டது. நிவாரண நிதிக்கு உதவும்படி ஒரிசா அரசு அறிக்கையும் தந்தது.
ஒரிசாவைச் சேர்ந்த சில மாணவர்கள் அப்போது சென்னையில் தங்கி, மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார்கள். நிவாரண நிதிக்கு பணம் திரட்டித்தர அவர்கள் விரும்பினார்கள். என்னை வந்து சந்தித்தார்கள். வைஜயந்திமாலாவும் கிஷோர்குமாரும் நடித்த ‘நியூடெல்லி’ என்ற இந்திப்படம் வட இந்திய நகரங்களில் திரையிடப்பட்டு பெரும் வெற்றியுடன் ஓடிக்கொண்டிருந்தது.
‘ஒரிசா நிவாரண நிதிக்காக, சென்னை ‘அசோக்’ திரையரங்கில் (தற்போதைய ‘சிவசக்தி’) ‘நியூ டெல்லி’ படத்தை காலைக் காட்சியாகத் திரையிடப் போகிறோம். எம்.ஜி.ஆர். அவர்களை நிகழ்ச்சிக்குத் தலைமை வகிக்க நீங்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும். அவர் வந்தால் வசூல் அதிகமாகக் கிடைக்கும்” என்று அந்த மாணவர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள். நான், எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து இதுபற்றிச் சொன்னேன்.
“அவதிப்படும் மக்கள் எங்கிருந்தால் என்ன, யாராயிருந்தால் என்ன? அவர்களது துயரத்தைத் துடைக்க வேண்டியது நமது கடமை. நல்ல நோக்கத்திற்காக இவர்கள் அழைக்கிறார்கள். நிச்சயம் கலந்து கொள்கிறேன்” என்று எம்.ஜி.ஆர். அவர்கள் சொன்னார்கள். ஒரிசா மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
எம்.ஜி.ஆர். அவர்கள் அப்போது தி.மு.க.வில் ஒரு முக்கிய புள்ளி. இந்தி எதிர்ப்பில் அக்கட்சி தீவிரமாக இருந்தது. “இந்தி படத்திற்கு அழைக்கிறோமே, அவர் வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. பயந்தபடிதான் இருந்தோம். எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி” என்று அந்த மாணவர்கள் தெரிவித்தார்கள்.
“எம்.ஜி.ஆர். அவர்கள் இந்திக்கு எதிரானவர் அல்ல. அது மக்கள் மீது திணிக்கப்படும் முறையைக் கண்டிக்கிறார். அவர் நடித்த மர்மயோகி, சர்வாதிகாரி படங்கள் இந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. சொந்தத்தில் இந்தியில் ஒரு படம் தயாரிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். ஆனால் அது கைகூடவில்லை” என்று மாணவர்களிடம் எடுத்துச் சொன்னேன். அவர்கள் நேரில் எம்.ஜி.ஆர். அவர்களைச் சந்தித்து தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்கள். விழாவுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.
இதற்கிடையில் ‘நியூடெல்லி’ படம் சென்னையில் திரையிடப்பட்டது. அதில் இடம் பெற்ற ஒரு காட்சியைப் பற்றி சில பத்திரிகைகள் கடுமையாக விமர்சனம் செய்தன. கண்டனத்துக்கு உள்ளான காட்சி இதுதான்.
ஒரு பொது இடம். படத்தின் நாயகன் (கிஷோர் குமார்) ஒரு தமிழனின் தலையில் செருப்பை வைத்து ஆடிப் பாடி வருகிறார் அங்கு கதாநாயகியும் (வைஜயந்தி மாலா) இருக்கிறார். “ஒரு தமிழ் நடிகை கதாநாயகியாக நடித்துள்ள படத்தில் எப்படி இந்தக் காட்சி இடம் பெறலாம்? தணிக்கையில் எப்படி அனுமதித்தார்கள்? தமிழ் நாட்டில் இதை திரையிட அனுமதிக்கலாமா?” என்று விமர்சனங்கள் வர, ஒரே பரபரப்பாகிவிட்டது. விழாவை ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கு பெரும் பயம் வந்து விட்டது. எம்.ஜி.ஆர் அவர்கள் நிகழ்ச்சிக்கு வருவாரா மாட்டாரா என்ற கவலையுடன் பதைபதைப்புடன் என்னை வந்து சந்தித்தார்கள். இதற்கிடையே எம்.ஜி.ஆர். அவர்களின் பார்வைக்கும் இந்த விமர்சனங்கள் வந்தன. அவர் என்னை அழைத்தார். “தமிழர்களை இழிவு செய்யும் காட்சியைக் கொண்ட இப்படத்திற்கு நான் எப்படித் தலைமை வகித்து வசூலுக்கு உதவ முடியும்? இதை முன்னமே நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை? என்னை தர்மசங்கடத்தில் வைத்து விட்டீர்களே!” என்று சற்று கடுமையாகவே என்னிடம் பேசினார்.
“அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் உங்களை அழைத்திருக்கவே மாட்டேன்!” என்றேன். என்னைப் புரிந்துகொண்ட நிலையில் “இப்போது என்ன செய்யலாம்?” என்றார். ஒரிசா மாணவர்கள் என்னைச் சந்தித்துப் பேசிய விவரத்தை அவரிடம் சொன்னேன்.
“அவர்கள் நிரபராதிகள். ஒரு நல்ல நோக்கத்தின் அடிப்படையில்தான் இதைத் திரையிடுகிறார்கள். பெரிதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க நியாயமில்லை. கடைசி நிமிஷத்தில் நீங்கள் மறுத்துவிட்டால் பெரிதும் மனம் ஒடிந்து போய் ஏமாற்றமடைந்து விடுவார்கள். தவிர, நீங்கள் மறுத்துவிட்டால். வேறு எவரும் முன்வந்து தலைமை வகிக்கத் துணியமாட்டார்கள் உங்கள் விருப்பப்படிச் செய்யலாம்” என்றேன். சில நிமிஷங்கள் யோசித்த அவர், “விழாவுக்கு வருகிறேன். ஆனால் அதே சமயம் என் எதிர்ப்பையும் நான் காட்டுவேன்” என்றார். “அது உங்கள் தனிப்பட்ட உரிமை. எவரும் தலையிட முடியாது!” என்றேன்.
விழா நாள் வந்தது.