சினிமாவில் எம்.ஜி.ஆர். – 282 – விஜயபாஸ்கர்

09 நவம்பர் 2016, 12:45 AM

நன்றி மறவா நாயகர்!

பிர­பல சினிமா பத்­தி­ரி­கை­யா­ளர் பொம்மை சாரதி, பொன்­ம­னச்­செம்­மல் எம்.ஜி.ஆரு­ட­னான தனக்கு ஏற்­பட்ட அனு­ப­வங்­க­ளின் பகிர்வு...

பதி­னாறு வயது. ஆம்; என்­னு­டைய அப்­போ­தை­டைய வயது.

குடும்­பச் சுமை கழுத்­தில் வலிய வந்து உட்­கார பள்­ளிப் படிப்பை அப்­போ­து­தான் முடித்­தி­ருந்த நான், உத­வித் தொகை­யு­டன் தேடி வந்த கல்­லூ­ரிப் படிப்பை உதறி விட்டு, எழுத்­தின் மீது இருந்த ஆர்­வம் கார­ண­மாக, கிடைத்த வேலையை மகிழ்ச்­சி­யோடு ஏற்­றுக் கொண்­டேன்.

அது மே மாதம், ஒன்­ப­தாம் தேதி – ஆண்டு 1949. வேலை – ‘பேசும் படம்’ சினி­மாப் பத்­தி­ரிக்­கை­யில் உதவி ஆசி­ரி­யர் வேலை.

ஆசி­ரி­யர் டி.வி.ராம்­நாத் அவர்­கள் தந்­தைப் பாசத்­தோடு வர­வேற்­றார். எனது வளர்ச்­சிக்­கும் முன்­னேற்­றத்­திற்­கும் பெரு­ம­ளவு உத­வி­னார்.

நான் வேலைக்­குச் சேர்ந்த இரண்­டா­வது மாதம்.

அந்த இதழ் ‘பேசும் பட’த்­தின் அட்­டை­யில் ‘மரு­த­நாட்டு இள­வ­ரசி’ படத்­தின் வண்ண விளம்­ப­ரம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. அந்த இத­ழின் இரண்டு பிர­தி­களை எம்.ஜி.ஆர். அவர்­க­ளி­டம் தந்து விட்டு வரும்­படி ஆசி­ரி­யர் அவர்­க­ளால் பணிக்­கப்­பட்­டேன்.

எம்.ஜி.ஆர். அவர்­களை அவ­ரது இல்­லத்­தில் சந்­தித்து ‘எங்­கள் ஆசி­ரி­யர் அவர்­கள் உங்­க­ளி­டம் தரச் சொன்­னார்­கள்’ என்று அவ­ரி­டம் பிர­தி­க­ளைத் தந்­தேன்.

சில வினா­டி­கள் மேலட்­டை­யில் பார்­வை­யைச் செலுத்­திய எம்.ஜி.ஆர். அவர்­கள் இத­ழைப் பக்­கம் பக்­க­மா­கப் புரட்­டிப் பார்த்­தார்.

‘என் நன்­றியை உங்­கள் ஆசி­ரி­ய­ருக்­குச் சொல்­லுங்­கள். என்­னைச் சந்­தித்து பிர­தி­களை வழங்­கிய உங்­க­ளுக்­கும்­தான்! என்று என் கைக­ளைப் பற்றி சிரித்­த­ப­டிச் சொன்ன அவர், என்­னைப் பற்றி விசா­ரித்­தார். நான் சுருக்­க­மா­கச் சொன்­னேன்.

‘உங்­கள் ஆர்­வப்­படி இத்­து­றை­யில் முன்­னேற என் வாழ்த்­துக்­கள்!” என்று என் கைக­ளைப் பிடித்­துக் குலுக்­கிய எம்.ஜி.ஆர் அவர்­கள், ‘இனி நாம் அடிக்­க­டிச் சந்­திக்க வேண்­டும்” என்­றார்.

எங்­க­ளது முதல் சந்­திப்பு இப்­படி முடிந்­தது.

எம்.ஜி.ஆர். அவர்­கள் நடி­கர் என்ற நிலை­யி­லி­ருந்து தயா­ரிப்­பா­ள­ராக உயர்ந்து, டைரக்­ட­ராக மாறி, திரைப்­ப­டத்­து­றை­யில் ஈடு இணை­யற்­ற­வ­ராக விளங்கி, ‘மக்­கள் தில­கம்’ எனப் போற்­றப்­பட்டு, தன்னை நேசித்த மக்­க­ளின் சேவைக்­கெ­னவே தனிக்­கட்­சி­யைத் துவக்கி, தேர்­த­லில் நின்று வென்று, ‘உல­கி­லேயே நாட்­டின் அர­சாட்­சி­யைக் கைப்­பற்­றிய முதல் நடி­கர்’ என்ற வகை­யில் ‘சரித்­திர நாய­க’­­­­னாகி ‘தமி­ழ­கத்­தின் முதல்­வர்’ என்ற நிலைக்கு வந்து, அவ­ரது கடைசி காலம் வரை இந்­தச் சந்­திப்­புத் தொடர்ந்­தது.

இது என் வாழ்­நா­ளில் எனக்­குக் கிடைத்த பேர­தி­ருஷ்­டம் என்றே நான் நினைக்­கி­றேன். எம்.ஜி.ஆர். அவர்­க­ளு­டன் இருந்த நீண்ட தொடர்­பில், நாங்­கள் சந்­தித்த நேரங்­க­ளில் என் மனதை விட்டு நீங்­காத நிலை­யில் உள்ள சில சம்­ப­வங்­க­ளைச் சொல்­லப் போகி­றேன். அவ­ரது உயர்ந்த பண்­பு­கள், மனி­தா­பி­மா­னம், நிர்­வா­கத்­தி­றன், கூர்ந்த மதி­நுட்­பம், இலக்­கி­யப் புலமை இவற்­றைப் பற்­றி­யும் கூறப்­போ­கி­றேன்.

’பேசும்­ப­டம்’ காரி­யா­ல­யம் அப்­போது சென்னை ராயப்­பே­டை­யில் (இப்­போது ‘பைலட்’ திரை அரங்­கம் உள்ள இடம்) இருந்­தது. எம்.ஜி.ஆர். அவர்­கள், ராயப்­பேட்டை லாயிட்ஸ் வீதி­யில் உள்ள இல்­லத்­தில் வசித்து வந்­தார். இங்­கி­ருந்­து­தான் அவ­ரது நாடக மன்­ற­மும் இயங்கி வந்­தது. படங்­க­ளில் நடித்து வந்த நேரம் போக, மற்ற நாட்­க­ளில் நாட­கங்­க­ளில் ஆர்­வ­மு­டன் நடித்து வந்­தார். இன்­பக் கனவு, இடிந்த கோயில் போன்ற அவ­ரது நாட­கங்­க­ளுக்கு மக்­க­ளி­டையே பெரும் வர­வேற்பு இருந்­தது. எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் நன்­ம­திப்­புப் பெற்­றி­ருந்த சாமி அவர்­கள் நாடக மன்ற மேனே­ஜ­ரா­கச் செயல்­பட்டு வந்­தார். (பின்­னர் திரு.ஆர்.எம்.வீரப்­பன் அவர்­கள் இப்­பொ­றுப்­பினை ஏற்­றார்).

ராயப்­பேட்­டை­யில் அப்­போது ‘அஜந்தா ஓட்­டல்’ பிர­ப­ல­மாக விளங்கி வந்­தது. உணவு இடை­வே­ளை­யின் போது நான், என்­னு­டன் அப்­போது பணி­யாற்றி வந்த திரு.எஸ்.வி.சம்­பத்­கு­மார் (இப்­போது இவர் மேல்­ம­ரு­வத்­தூர் பக்­தர் குழு­வில் தொண்­டாற்றி வரு­கி­றார்) சாகுல் அமீது (’பேசும் படம்’ மலை­யா­ளப் பதிப்­பின் ஆசி­ரி­ய­ராக இருந்த அவர், இப்­போது இல்லை) இந்த ஓட்­ட­லுக்கு வரு­வோம்.

இந்த ஓட்­ட­லுக்கு மிக அரு­கில் எம்.ஜி.ஆர் அவர்­க­ளின் வீடு இருந்­தது. நேரம் கிடைக்­கும் சம­யங்­க­ளி­லெல்­லாம் எம்.ஜி.ஆர். அவர்­க­ளின் வீட்­டுக்­குச் சென்று அவ­ரைச் சந்­தித்­துப் பேசு­வோம். பல விஷ­யங்­க­ளைப் பற்றி உரை­யா­டு­வோம். சில சம­யங்­க­ளீல் எங்­கள் உரை­யா­டல் விவா­த­மாக உரு­மாறி கார­சா­ர­மா­கி­வி­டும். ஆனால், எந்த ஒரு கட்­டத்­தி­லும் எம்.ஜிஆர். அவர்­கள் பொறு­மையை இழக்க மாட்­டார். தான் சொல்ல வந்த கருத்தை ஆணித்­த­ர­மாக தக்க சான்­று­க­ளு­டன் எடுத்­துச் சொல்லி, அதை தன் வாதத் திற­மை­யால் எதிர்­த­ரப்­பி­னர் நியாய உணர்­வு­டன் ஏற்று கொள்­ளும்­ப­டிச் செய்து விடு­வார். அதே சம­யம் அவ­ரது கருத்து மாறு­பட்டு அமை­யு­மா­னால் அதை தயங்­கா­மல் ஏற்­கும் உயர் பண்­பும் அவ­ரி­டம் இருந்­தது.

(தொட­ரும்)