சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 270 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2016

அப்பா – அண்­ணன் இரு­வ­ரை­யும் தாண்டி முதல் படத்­தி­லேயே ‘புலிப்­பாய்ச்­சல்’ பாய்ந்­தார் கார்த்தி! அன்­பின் ஈரம் அறி­யா­மல் புழு­திக் காட்­டில் புரண்டு திரி­யும் கிரா­மத்து சண்­டி­ய­ராக வாழ்ந்­தி­ருந்­தார் கார்த்தி! அவரை விரட்டி விரட்டி காத­லிக்­கும் முத்­த­ழகு கதா­பாத்­தி­ர­மா­கவே மாறி­யி­ருந்­தார் பிரி­யா­மணி. கேர­ளாவை சேர்ந்த பிரி­யா­ம­ணியை 'கண்­க­ளால் கைது செய்' படம் வாயி­லாக தமிழ் சினி­மா­வுக்கு கொண்டு வந்­தார் பார­தி­ராஜா. பிறகு பாலு­ம­கேந்­தி­ரா­வின் ‘அது­வொரு கனாக்­கா­லம்’ படத்­தில் நடித்­தார். இரண்­டுமே எடு­ப­டா­மல் போனது! ‘பருத்தி வீரன்’ வந்­து­தான் பிரி­யா­ம­ணியை ரசி­கர்­க­ளி­டத்­தில் மிக நெருக்­க­மாக கொண்டு போனது. இதில் பிரி­யா­ம­ணி­யின் பிர­மா­த­மான நடிப்­புக்கு தேசிய விருது கிடைத்­தது.

இத்­தனை தகு­தி­க­ளை­யும் தன்­ன­கத்தே கொண்­டி­ருந்­த­தால் பட்­டை­யக் கிளப்­பி­னான் ‘பருத்தி வீரன்.’ இனி ‘பருத்தி வீர­னைப் பற்­றிப் பார்ப்­போம்…..

இத­யத்­தில் ஈரக்­க­சிவே இல்­லா­மல் பாறை போன்ற இறு­கிய மன­தோடு குடி, கூத்து, வெட்­டுக்­குத்­து­வென தறி­கெட்­டுத்­தி­ரி­யும் கிரா­மத்­துச் சண்­டி­யர் பருத்­தி­வீ­ரன் (கார்த்தி), சிறு­வ­ய­தில் ஏற்­பட்ட சிநே­க­மும், ஈர்ப்­பும் அத்­தை­ம­கள் முத்­த­ழகு (பிரி­யா­மணி)வின் மன­தின் அடி­வா­ரத்­தில் தங்­கி­விட, அவ­னையே நினைத்து நினைத்து உருகி, அவ­னுக்­கா­கவே உயிர் வாழ்­கி­றாள். முத்­த­ழ­கு­வின் உண்­மை­யான அன்பு பருத்தி வீர­னுக்கு தெரி­ய­வந்து அவளை கைபி­டிக்க நினைக்­கும்­போது குடும்­பப் பகை குறுக்கே பாய்­கி­றது…! முத்­த­ழ­கு­வுக்கு கல்­யாண ஏற்­பாடு நடக்க; அதற்கு சம்­ம­திக்­கா­மல் பருத்தி வீர­னோடு ஊரை விட்டு ஓடு­கி­றாள் முத்­த­ழகு! பிறகு நடக்­கும் சம்­ப­வங்­கள் மனதை கனக்க வைக்­கும் கிளை­மாக்ஸ். தெற்­கத்தி மண்­ணின் புழுதி வாசத்­தோடு கிரா­மத்து அத்­தி­யா­ய­மாக வந்த ‘பருத்தி வீரன்’ கதை இது­தான்!

அழுக்கு ஆடை­கள், எண்­ணெய் வழி­யும் தலை­கள், கறை­ப­டிந்த பற்­கள், கறுப்பு முகங்­கள். ஆனால், வெள்­ளந்­தி­யான மன­சும் – மண்­வா­ச­னைப் பேச்­சு­மாக… அப்­ப­டியே தெற்­கத்தி சீமை­யி­லி­ருக்­கும் கிரா­மங்­களை எந்த பாசாங்­கும் இல்­லா­மல் படம்­பி­டித்து வந்த இயக்­கு­நர் அமீர்,  இந்த 'பருத்தி வீரன்' வாயி­லாக திரை­யு­ல­கத்­தையே திரும்­பிப் பார்க்க வைத்­தார். ஏற்­க­னவே, 'மவு­னம் பேசி­யதே', ‘ராம்’ என இரு படங்­களை தந்­தி­ருக்­கும் அமீ­ரின் மூன்­றா­வது முத்­திரை பதிப்பு இது.

திரு­வி­ழா­வும், தெம்­மாங்­குமா தொடங்­கும் ஆரம்­பக் காட்­சி­யில் தொடங்கி உக்­கி­ர­மான கிளை­மாக்ஸ் காட்சி வரை ஒவ்­வொரு பிரே­மி­லும் தெரி­கி­றது புழு­தி­வா­சம்! “குஸ்தி வாத்­தி­யா­ருக்கு முன்­னா­டி­தான் குறி­வச்­சேன் சித்­தப்பு… பய­புள்ள பொசுக்­குனு திரும்­பிட்­டானா, அதான் குத்து குந்­துற இடத்­துல விழுந்­தி­ருச்சு…!” என ஏதோ மெடல் குத்­தி­ய­தைப் போல பெருமை பீத்­திக் கொண்டு போட்­டோ­வுக்கு போஸ் கொடுப்­ப­தில் தொடங்கி கார்த்­தி­யும், சித்­தப்பு சர­வ­ண­னும் சேர்ந்து படம் முழுக்க செய்­யும் சண்­டி­யர்­தன சாக­சங்­கள் அத்­த­னை­யும் அலப்­ப­றையோ அலப்­பறை! அப்­ப­னும், மக­னு­மாய் சேர்ந்து கஞ்சா கறுப்­பு­வை­யும், ‘பொணந்­தின்னி’ ராசு­வை­யும் ஏகத்­துக்கு கலாய்க்­கும்­போது ரசி­கர்­கள் பக்­க­மி­ருந்து ஆர­வார அலை­ய­டித்­தது…!

அறி­யாத வய­தில் மன­தின் அடி­வா­ரத்­தில் விதை போல விழுந்த அந்த ப்ரியத்தை உயி­ராக சுமந்து, பின்­ன­டியே அலை­யும் முத்­த­ழ­குவை புரிந்து கொள்­ளா­மல் குடி­யும், கும்­மா­ள­மு­மாய் திரி­யும் பருத்தி வீர­னாக, கிரா­மத்து சண்­டி­ய­ரா­கவே வாழ்ந்து முதல் படத்­தி­லேயே நடிப்பு முத்­தி­ரையை பதித்து ஆச்­சர்­யப்­ப­டுத்­தி­னார் கார்த்தி.  பவு­டர் பூசாத முகத்­தோடு, எண்­ணெய் வழி­யும் தலை­யோடு, பாவா­டை-­­தா­வ­ணி­யில், மூங்­கில் உடம்­பும், முரட்­டுப் பிரி­ய­மு­மாக இருக்­கும் முத்­த­ழ­கு­வா­கவே மாறி பிர­மிக்க வைத்­தார் பிரி­யா­மணி. கதா­பாத்­தி­ரத்­தின் தன்­மையை முழு­மை­யாக உள்­வாங்­கிக் கொண்டு நடித்­த­தால் பிரி­யா­ம­ணிக்கு தேசிய விருது கொடுத்து கௌர­வப்­ப­டுத்­தி­யது மத்­திய அரசு. சித்­தப்பு செவ்­வா­ழை­யாக வந்து அலப்­பறை கொடுக்­கும் சர­வ­ணன், ஒரு நேரத்­தில் ஹீரோ­வாக கலக்கி, இதில் குண­சித்­திர பாத்­தி­ரத்­துக்கு மாறி­யி­ருந்­தார். பருத்தி வீர­னோடு சேர்ந்து சித்­தப்பு சர­வ­ணன் செய்த அலம்­பல்­கள் அவ­ருக்கு இரண்­டா­வது இன்­னிங்ஸை தொடங்கி வைத்­தது. அதே­போல நீண்ட கிரு­தா­வும், முரட்டு மீசை­யும், வறட்­டுப் பிடி­வா­த­மு­மாக கழுவ சேர்­வை­யாக வந்த பொன்­வண்­ண­னுக்­கும் நல்ல அடை­யா­ளத்தை படம் குடுத்­தது.

இவர்­க­ளைத் தவிர; ‘டீக்­கடை ஓனர்’ கஞ்சா கறுப்பு, ‘பொணந்­தின்னி’, கூலிங் கிளாஸ் போட்ட ஆத்தா, சில்­லுண்டி சிறு­வன், ப்ரியா­ம­ணி­யின் தாய் என எல்­லோ­ருமே அச­லான கிரா­மத்து மனி­தர்­க­ளாக இருந்து ஆச்­சர்­யப்­ப­டுத்­தி­னார்­கள். ராம்­ஜி­யின் கேமரா பட்­டிக்­காட்டு புழு­தி­மேட்­டில் புரண்­டெ­ழுந்­த­தைப் போல இருந்­தது. மென்­மை­யான பாடல்­கள், அதி­ர­வைக்­கும் பின்­னணி இசை என மன­தின் அடி­யா­ழம் வரை தொட்­டார் இசை­ய­மைப்­பா­ளர் யுவன்­சங்­கர் ராஜா! தமிழ் சினி­மா­வில் ‘பருத்­தி­வீ­ரன்’ முக்­கி­ய­மான பதி­வாக இருந்து. மேலும் பல ‘பருத்தி வீரன்’­­கள் வர கார­ண­மாக அமைந்­தது.