கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 48

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2016


‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைக்கதையும் டாக்டர் ‘நீலமேகம்’ சிறுகதையும்!

இயக்குநர் ஸ்ரீதரின் ஒரு வெற்றிப் படம், ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’. அவருக்கு வழக்கமான முக்கோணக் காதல் கதையாக இருந்தாலும், வித்தியாசமான சூழலும் சோகத்தின் சாயலும் அமைந்த மறக்க முடியாத படம்.

படக்கதையின் மூன்று முக்கிய பாத்திரங்களும் மிகவும் உயர்தரமானவை. கதாநாயகி சீதா, நிர்ப்பந்தத்தின் பேரில் தன்னுடைய காதலனை மறந்துவிட்டு வேறொருவனை கைப்பிடித்திருந்தாலும், தன் கணவன் மீது உயிராக இருப்பவள். நோயுற்ற தன் கணவனின் மருத்துவராக மாஜி காதலனே வந்த போதும், துளிக்கூட சஞ்சலமோ சபலமோ கொள்ளாத மாதரசி.

அவளுடைய கணவனோ, தான் இறக்க நேர்ந்தாலும் தன் மனைவி மீண்டும் மணம் செய்து கொண்டு நலமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற பெரிய மனது கொண்டவன்.

முக்கோணத்தின் இன்னொரு முக்கிய கோணமாக விளங்குபவர் டாக்டர். முரளி. சந்தர்ப்பவசத்தால் தான் நேசித்த பெண்ணை மணக்க முடியாமல் போகும் போது, மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதன் மூலம் தன்னுடைய சோகத்தை மறக்க நினைப்பவர். முன்னாள் காதலி தன்னுடைய உதவியை எதிர்பார்த்து நிற்கும் போதும், அந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள சிறிதும் நினைக்காதவர். அவளுடைய நலத்தையும் பெருமையையும் பேண நினைப்பவர்.

இப்படிப்பட்ட உயர்ந்த பாத்திரங்களை ஏற்று நடிக்க மிகவும் பொருத்தமான நடிகர்கள் அமைந்தது, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது.

சீதா வேடத்தில் நடித்த தேவிகா, பாத்திரத்தின் மென்மையையும் மேன்மையையும் அற்புதமாக பிரதிபலித்தார். அவர் மிக அழகாகத் தோன்றியதுடன் சிறந்த முறையில் நடிக்கவும் செய்தார். அவர் நடித்த படங்களில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ மிக முக்கியமான படமாக அமைந்தது.

புற்றுநோய்க்கு ஆளான கணவன் வேணுவாக நடித்த முத்துராமன், நிராசை, நல்லெண்ணம், தியாக உள்ளம் என்று  பல கட்டங்களில் வெளிப்படுத்த வேண்டிய உணர்ச்சிகளை அனாயாசமாக செய்து முடித்தார்.

மாஜி காதலன் வேடமேற்றவர் கல்யாண் குமார்.  அந்தப் பாத்திரத்திற்குப் பொருத்தமான பெருந்தன்மைக்கும், உன்னதமான எண்ணங்களுக்கும்   உத்தரவாதம் தருவதாக அவருடைய நடிப்பு அமைந்தது.

இந்த நடிகர்களைக் கொண்டு, படாடோபமும் செயற்கைத்தனமும் இல்லாமல் திரைக்கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். கேமரா கோணங்களும் ஒளி அமைப்புகளும் காட்சிகளுக்கு வலுவூட்டும் வகையில் படத்தின் திரைக்கலை திகழ்ந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நாயகன் இறந்துவிடுவானோ என்ற சோகச் சூழலில் நகரும் படத்தின் இடையிடையே வரும்  இனிமையான பாடல்கள், இறுக்கமான நிலையை மறக்கச் செய்தன அல்லது முக்கியமான காட்சிகளின் வீரியத்தைக் கூட்டின.

‘எங்கிருந்தாலும் வாழ்க’, ‘முத்தான முத்தல்லவோ’, ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’, ‘என்ன நினைத்து என்னை அழைத்தாயோ’, ‘சொன்னதுநீ தானா’, ‘ஒருவர் வாழும் ஆலயம்’ முதலிய பாடல்கள், படத்திற்கு உயிரோட்டமாக அமைந்தன. இன்றும் கூட படத்தின் சிறப்புக்கான சான்றிதழ்களாக காற்றில் வலம் வருகின்றன.

இப்படியெல்லாம் அமைந்து, 14 நாட்கள் ஒரு மருத்துவமனையில் நடப்பதாக உள்ள கதையை, 22 நாட்களில் எடுத்து முடித்தார் ஸ்ரீதர். 1962ம் ஆண்டின் குடியரசு தினத்தில் வெளிவந்த படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று சில திரையரங்குகளில் 175 நாட்கள் ஓடியது.

இதற்கெல்லாம் சுமார் இருபது வருடங்களுக்கு முன். ‘டாக்டர். நீலமேகம்’ என்றொரு கதை,  அனுமான் என்ற பத்திரிகையில் ஜனவரி 25, 1943 அன்றும், ஆகஸ்டு 1, 1943 அன்றும், இரண்டு தவணைகளில் வெளிவந்தது. அது குண்டூசி கோபால் என்ற மதிப்பிற்குரிய சினிமா பத்திரிகையாளர் எழுதிய சிறுகதை.

‘டாக்டர். நீலமேகம்’ சிறுகதையில், தான் காதலித்த பெண்ணை சில காரணங்களால் மணம் செய்துகொள்ள முடியாமல் போன டாக்டர். நீலமேகம், திருமணமே செய்து கொள்ளாமல் மருத்துவ சேவையில் ஈடுபட்டு தன்னுடைய துயரத்தை மறக்க முயன்று கொண்டிருக்கிறார். அப்படி இருக்கையில் ஒரு நாள் இரவு, ‘சோ’ என்று மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில் அவருடைய பழைய காதலியே கதவைத்தட்டுகிறாள்!

அவள் தன்னிடம் மீண்டும் வருவாள் என்று கனவிலும் நினைத்துப்பார்க்காத டாக்டர். நீலமேகம், ‘யாரது ஹேமாவா?’ என்று அவளை வரவேற்று, தழுதழுத்த குரலில் கேட்கிறார்.

மிகவும் நோய்வாய்ப்பட்டிருக்கும் தன்னுடைய கணவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவள் வேண்டுகிறாள்.

விதிவசத்தால் தன்னுடைய காதல் நிறைவேறாமல் போனாலும், ‘அவளாவது சந்தோஷமாக இருக்கட்டும்’  என்ற உயர்ந்த எண்ணத்தில் அவளுடைய கணவனுக்கு சிகிச்சை அளிக்க மழை கொட்டிக் கொண்டிருக்கும் நள்ளிரவில் செல்கிறார். இப்படி முடிகிறது, ‘டாக்டர் நீலமேகம்’ என்ற சிறுகதை.  

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தின் கதைக்கருவும் ‘டாக்டர் நீலமேகம்’ கதை முடிச்சும் நிச்சயம் ஒத்துத்தான் இருக்கின்றன. ஒரு டாக்டரிடம் அவருடைய முன்னாள் காதலி தன்னுடைய கணவனைக் காப்பாற்றும்படி கேட்டு வருவதுதான். ‘டாக்டர். நீலமேகம்’ என்ற சிறுகதையின் முடிச்சு. அதே கதைக்கருவைத்தான் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படமும் கொண்டிருக்கிறது.

தன்னை மணப்பதாகக் கூறிவிட்டு வேறொருவனை மணந்ததற்கான காரணம் என்ன என்று காதலன் கேட்டு அறிகிற சம்பவம் சிறுகதையில் உள்ளது..திரைப்படத்திலும் உள்ளது.

குண்டூசி கோபாலின் கதைக்கருவை எடுத்தாண்டதாக ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ பட டைட்டிலில் எந்த அறிவிப்பும் இல்லை. கதை, வசனம், டைரக்க்ஷன்: ஸ்ரீதர் என்றுதான் அது அறிவிக்கிறது.

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ திரைக்கதையில், ‘டாக்டர். நீலமேக’த்திலிருந்து பல மாறுதல்களும் இருந்தன. படத்தின் நாயகன் வேணு புற்றுநோயால் அவதிப்படுகிறான்...டாக்டர். நீலமேகம் சிறுகதையில் நாயகியின் கணவன் கடுமையான ஆஸ்துமாவின் மூச்சிரைச்சலால் அவதிப்படுகிறான். அது மட்டுமில்லாமல், சிறு கதையில் ஒரு காதல் முக்கோணம் சரியாக பின்னப்படவில்லை. அது சிறுகதையின் நோக்கமும் இல்லை. அதனால், சிறுகதையின் லாயக்கற்ற கணவன் ஸ்ரீதரின் திரைக்கதையில் ஒரு சிறந்த மனிதனாக படைக்கப்பட்டிருக்கிறான்.

சிறுகதையின் முதல் சந்திப்பு நடப்பது டாக்டர். நீலமேகத்தின் இல்லத்தில். திரைப்படத்தில் அது நாயகனின் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. சிறுகதையில், டாக்டர். நீலமேகம் தன்னுடைய மாஜி காதலியின் கணவனுக்கு சிசிச்சை அளிக்கச்செல்வதுடன் முடிகிறது. ஆனால் திரைப்படத்திலோ, டாக்டர் சிகிச்சை அளிக்கத் தொடங்குவதிலிருந்துதான் கதையே தொடங்குகிறது!

டாக்டர் தன்னுடைய பழைய காதலியுடனான ஒரு புகைப்படத்தை வைத்திருக்கிறார். அவளது கணவன் ஒரு சஞ்சிகையை டாக்டரிடமிருந்து வாங்கிச்செல்லும் போது அதற்குள்ளே அந்தப் படம் இருக்கிறது. அதைக் கணவன் பார்த்துவிடுவானோ என்று ஏற்படுகிற திகில், புகைப்படம் கீழே விழுந்துவிட அதை மீட்க வரும் நாயகி, ஆனால் அவள்  அப்படிச் செய்வதற்குள் டாக்டரே அதை எடுத்துப்போய்க் கொண்டிருக்கும் காட்சி.... திரை ஊடகத்தின் சாத்தியக்கூறுகளை நன்கு புரிந்துகொண்ட ஸ்ரீதர் இப்படியெல்லாம் மிக சுவாரஸ்யமாக கதையை எடுத்துச் செல்கிறார்.

திரைப்படத்தில், டாக்டருக்கும் நாயகிக்கும் உள்ள பழைய காதலை அவளது கணவன் அறிந்துவிடுகிறான். ஆனால், நாயகி தன்னுடைய இல்லற தர்மத்திலிருந்து இம்மியும் பிசகாதவள் என்பதையும் புரிந்து கொள்கிறான். இதனால் அவனுக்கு அவள் மேல் இருக்கும் நேசமும் மரியாதையும் கூடுகின்றன. அவன் இறக்க நேர்ந்தால் அவள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவன் அவளை வற்புறுத்துகிறான். ‘சொன்னது நீதானா, சொல் சொல் சொல் என் உயிரே’ என்று அவள் துயரம் தாங்காமல் பாடுகிற கட்டம் வருகிறது. பிணக்கோலத்தை எதிர்நோக்கும் அச்சத்தில் அவளுடைய மணக்கோலத்தைக் காண விரும்புகிறான் அவன். ‘என்ன நினைத்து என்னை அழைத்தாயோ, ஏனிந்த கோலத்தை கொடுத்தாயோ’ என்று பாட்டில் அவள் மருகுகிறாள்.

இவையெல்லாம் சிறுகதை நினைத்தும் பார்க்காத நிலைகள். ஆனால் சிறுகதையின் சாயல்கள் ஆங்காங்கே தெரியத்தான் செய்கின்றன.  இரவில் மழை கொட்டும் நாளில் டாக்டர். நீலமேகம் தொடங்குகிறது. படத்தில் வரும் எங்கிருந்தாலும் வாழ்க அத்தகைய ஓர் இரவில் இடம்பெறுவதாகத்தான் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. பாடலுக்கு இடையே தவளைகள் செய்யும் சப்தத்தை ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். படத்தின் பல முக்கியமான திருப்பங்கள் இரவில் வருவதாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு, முன்பு குறிப்பிட்ட புகைப்படத்தை மீட்டுச் செல்லும் காட்சி.

திரைப்படத்தில் வரும் டாக்டரின் மனோபாவம் அப்படியே டாக்டர். நீலமேகத்தின் மனப்போக்கோடு ஒத்திருக்கிறது. ‘‘இனி எனக்கு இந்த உலகில் சந்தோஷமே கிடையாது. தன்னந்தனியனாகவே வாழ்க்கையைக் கழித்துவிடப்போகிறேன். நீயாவது சுகமாக இரு,’’ என்று சிறுகதை கூறுவதைத்தான் படத்தில் கல்யாண் குமார் நடித்துக்காட்டுகிறார்!

‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ வெற்றி அடைந்த பிறகு, அதை ‘தில் ஏக் மந்திர்’ என்ற பெயரில் இந்தியிலும் எடுத்து, ஸ்ரீதர் வெற்றி கண்டார். குண்டூசி கோபாலை பொறுத்தவரை, தன்னுடைய கதைக்கருதான் எடுத்தாளப்பட்டிருக்கிறது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். ஆனால், அதை அவர் வழக்காகவோ பிரச்னையாகவோ எழுப்பவில்லை. தன் மீது ஒரு கொலை முயற்சி நாற்பதுகளில் நடந்தபோது கூட அவர் பிரார்த்தனை செய்து கடவுளின் பதிலை பெற்றதோடு நிறுத்திக்கொண்டிருந்தார்!

டாக்டர். நீலமேகத்தின் பலமான சாயலில் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ வந்த காலகட்டத்தில், குண்டூசி கோபால் தனது வாழ்க்கையில் சரிவுகளைக் கண்டுகொண்டிருந்தார். ‘என்னுடைய கதை’ என்று கிளர்ந்து எழுவதற்கான வசதியெல்லாம் அவரிடம் இல்லை. திரை ஊடகம் வேறு, சிறு கதை வேறு. ஆனால் சினிமா பண்ணத்தெரிந்தவர்களுக்கு சில சமயம் வேறு ஊடகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும் பங்களிப்புகளை சரியாக மதிக்கத் தெரியாமல் போவதும் உண்டு.

மிகச் சிறந்த சினிமா பத்திரிகையாளராக தமிழ் திரை உலகிற்கு சிறந்த முறையில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சேவை செய்த ‘குண்டூசி’ கோபால், 1984ல் காலமானார்.  தமிழ் பத்திரிகை உலக சரித்திரத்தில், முதன்முதலாக கேள்வி – பதில் பகுதியைத் தொடங்கிய பெருமையும் கோபாலுக்கு உண்டு. ஆனால் அவருடைய சிறுகதை ஏன் சுடப்பட்டது என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

 (தொடரும்)