இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –24

பதிவு செய்த நாள் : 31 அக்டோபர் 2016


விஸ்வம் வீட்டுக்கு வந்தபோது, அப்பா வாசலில் உட்கார்ந்து கொண்டிருப்பார். அவனை பார்த்ததும் எழுந்து வந்து கதவை திறந்தார்.

''இன்னிக்கு ரொம்ப நேரமாயிட்டாப்பல இருக்கே...?'' என்று கேள்வி குறியோடு பார்த்தார்.

அவன் பதில் சொல்லாமல் தலையாட்டினான். இத்தனை நேரத்துக்கும் துாங்காமல் உட்கார்ந்திருக்கிற அவரை பார்த்தபோது கஷ்டமாக இருந்தது. ரிடையர் ஆகி ஒரு வேலையும் இல்லாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பது ரொம்ப இம்சையான விஷயம் என்று நினைத்துக் கொண்டான். அவரை – அவர் மனசை பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை. அவர் வெளியில் எங்கும் போவதில்லை. கறிகாய் வாங்க, டியூஸி.எஸ்.ஸில் சாமான் வாங்க, என்று ஒரு பெரிய காக்கி பையை துாக்கிக் கொண்டு அலைவதோடு சரி, மீதி நேரத்தையெல்லாம் இந்த மாதிரி வீட்டுத் திண்ணையில்தான் கழிக்கிறார். தெருவில் போகிறவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். படியில் நின்று பேசுகிறவர்களோடு ஐந்து நிமிஷம் பேசுகிறார். அகிலா சாப்பிடக் கூப்பிடுகிற போது எழுந்து போகிறார். ருக்மிணி மாதிரி அகிலாவின் சமையலுக்கு அத்தனை ருசி எதுவும் கிடையாது. புளி வாசனை துாக்கலாய் அடிக்கும். சில நாள் உப்பில் சிக்கனம் தெரியும். மறுநாள் அதுவே தாராளமாகி விடும். பரிவாய் அன்பாய் எது செய்யவும் தெரியாது அவளுக்கு. 'பரபர'வென்று அலைவாள். பாத்திரச் சத்தம் அவள் முணுமுணுக்கிற சத்தம் உருளியில் ஏதோ தீய்கிற நாற்றம் எல்லாம் சமையற்கட்டிலிருந்து ஒன்றாய்க் கலந்து வரும். ஏதோ ஆயிற்று என்று கதவை இழுத்து மூடிக்கொண்டு கூடத்தில் வந்து உட்கார்ந்து ரேடியோ கேட்பான். இல்லாவிட்டால் ஏதாவது ஒரு துணியை விரித்துச் சிவப்பு பென்சிலால் கோடுகள் இழுத்து வெட்டிக் கொண்டிருப்பாள். அதுவும் இல்லை என்றால், அரைத் துாக்கத்தில் கையில் ஏதாவது ஒரு பத்திரிகை நழுவிக் கொண்டிருக்கும்.

அப்பா அவளை எதுவும் சொல்வதில்லை. முன்பு ஒருதரம் அவனுக்காக மோர்ச் சாதத்தைப் பிசைந்து மூலையில் மூடி வைப்பதை மட்டும் கண்டித்தார்.

''ஆபீஸ் வேலையெல்லாம் முடிச்சுட்டு களைச்சுப் போய் வர்றவனுக்கு கொஞ்சம் முழிச்சிண்டிருந்து சாதம் போடக் கூடாதா அகிலா? பாவம்! வெறும் மோர்ச் சாதத்தை அவனே எடுத்து வெச்சுண்டு சாப்பிட்டுக்கணுமா...?'' என்று கேட்டார்.

''அவனை ஆபீஸ்லேர்ந்து நேரத்தோட வந்து சாப்பிட்டுட்டுப் போகச் சொல்லுங்க. இப்படி பத்துக்கும் பதினொன்னுக்கும் வந்தா எனக்கு துாக்கம் வரதே...!''

''ஆமாம் நாளைக்கே உனக்குக் கல்யாணமாகி அவன் இந்த மாதிரி வர்றவனாக இருந்தால், அப்ப என்ன பண்ணுவே...?''  என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

''அப்ப பார்த்துக்கலாம்...!'' என்று அந்த பேச்சை முடித்துவிட்டு, பெட்ஷீட்டை உதறிப் போட்டுக் கொண்டாள் அவள்.

மறுநாள் ராத்திரி அவன் தானாக எடுத்து வைத்துச் சாப்பிட்டுக் கொண்டு இருந்தபோது படுத்துக் கொண்டிருந்தவர் எழுந்து அவன் எதிரில் வந்து நின்றார்.

''ஊறுகாய் ஏதாவது வேணுமா?'' என்று கேட்டார்.

''வேணாம், இருக்கு!'' என்று பதில் சொன்னான் அவன்.

அவர் ஒரு நொடி பேசாமல் நின்றார் பின்பு, ''துாக்கம் வரதாம். துாங்கிட்டா. வயசு பதினெட்டு முடிஞ்சு போச்சு. ஆனா இன்னும் பொறுப்பே வரலை பாரு...!'' என்று சலித்துக் கொண்டார்.

அவன் சிரித்தான்.

''அதனால என்னப்பா? நானே வச்சுண்டு சாப்பிட்டுக்கறேன். இதற்காக அவளை ஏன் சிரமப்படுத்தணும்? இதுல எனக்குக் கஷ்டம் ஒண்ணும் இல்ல...!''

''இருந்தாலும் ஒரு பொறுப்பு தெரிய வேணாமா? எல்லாத்துலயும் இப்படித்தான் இருக்கா அவ..!''

அவன் முகத்தில் புன்னகை மாறாமலே அவரை பார்த்தான்.

''பொறுப்பு தெரியற போது தானா தெரியும். அது வரைக்கும் அவள் தன் இஷ்டப்படித்தான் இருக்கட்டுமே?''

அப்பா சிறிது நேரம் பேசாமல் இருந்தார். பின்பு, ''நீ சொல்றதும் சரிதான்...!'' என்று சொல்லிக் கொண்டே திரும்பிப் போய்விட்டார்.

அதிலிருந்து அவர் யாரையும் ஒன்றும் சொல்வதில்லை. அதிகம் பேசுவதும் இல்லை. எப்போதாவது ருக்மிணியின் அப்பா வந்தால், அவரோடு மட்டும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பார். மீதி நேரமெல்லாம் இப்படித்தான். தெருவை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அவரோடு சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது விஸ்வத்திற்கு. மனசை வருடுகிற மாதிரி இதமாக பேச வேண்டும்.

''ஏம்ப்பா.... துாக்கம் வரலியா?'' என்று கேட்டான்.

''வரலை, சித்த இப்படி காத்தாட உட்கார்ந்துண்டிருக்கலாமேன்னு இப்பத்தான் வந்தேன்.''

''துாங்காம இப்படி ஏம்ப்பா உடம்பைக் கெடுத்துக்கறீங்க? எப்பப் பார்த்தாலும் தெருவை வெறிச்சுண்டு அப்படி என்னதான் யோசனை பண்ணுவேள்?''

''ஒண்ணுமில்ல விஸ்வம்! யோசனை என்ன இருக்கு? நீங்கள்ளாம் இருக்கறப்ப எனக்கு எதைப் பத்திதான் என்ன கவலை?''

''உங்களை பார்த்தா அப்படி கவலைப்படாம இருக்கிறவராத் தெரியலையே...!''

''போடா அசடு! எனக்கு ஒரு கவலையும் இல்ல போ, போய் சாப்பிட்டுட்டு வா. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்''

என்ன என்கிறாற் போல் பார்த்தான் அவன்.

''சாப்பிட்டுட்டு வா, சொல்றேன்.''

''சரி'' என்று உள்ளே போனான். ஐந்து நிமிஷத்துக்கெல்லாம் கையைத் துடைத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான். அவர் முகத்தைப் பார்க்கிற மாதிரி எதிர்ச்  சுவரில் முதுகைச் சரித்துக் கொண்டு உட்கார்ந்தான். தினமும் கூடத்து விளக்கைப் போட்டு கொண்டு படிக்கிற ராம்ஜி கூட இன்று துாங்கிப் போய்விட்டதால் வீட்டில் வெளிச்சம் எதுவும் இல்லை. தெரு விளக்கின் வெளிச்சம் மட்டும் வராந்தாவில் லேசாக விழுந்தது. தெரு மிகவும் நிசப்தமாக இருந்தது. யார் வீட்டு ரேடியோவிலிருந்தோ தமிழ் சினிமாப் பாட்டு வருவது லேசாய்க் காதை எட்டியது. அதற்கு மெதுவாக காலால் தாளம் போட்டபடி உட்கார்ந்திருந்தான் அவன்.

''இன்னிக்கு ரங்கநாத ஜோஸ்யர் வந்திருந்தார்...!'' என்று மெதுவாகத் தொண்டையைக் கனைத்துக் கொண்டே ஆரம்பித்தார் அவர்.

''ம்...?''

''நல்லதா ரெண்டு ஜாதகம் வந்திருக்காம். அகிலாவுக்குப் பார்க்கலாம்னு கொண்டு வந்தார்.''

''ம்...''

''அதுல ஒண்ணு ரொம்ப நன்னா பொருந்தி வரதுன்னார்!''

''.........''

''பையன் பாங்குல வேலையா இருக்கானாம். எழுநுாறோ என்னவோ சம்பாதிக்கிறானாம். நல்ல பையன் நல்ல இடம் உங்களால முடிஞ்சதைச் செஞ்சாப் போறும். இப்படி ஒரு நல்ல வரனா வரபோது சிரமத்தைப் பார்க்காம முடிச்சுடுங்கோன்னு சொல்றார்...''

விஸ்வம் பேசாமல் இருந்தான். அவரும் சிறிது நேரம் பேசவில்லை. பின்பு, ''என்ன விஸ்வம் பேசாம இருக்கே? என்ன சொல்றே நீ...?'' என்று அவரே மறுபடியும் கேட்டார்.

விஸ்வம் அவரை நிதானமாக பார்த்தான்.

''இதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்குப்பா? அகிலாவைக் கேளுங்க. அவளுக்கு இஷ்டம்னா – உங்களுக்கும் பிடிச்சிருந்தா முடிச்சுட வேண்டியது தானே?''

அவர் நிதானமாய்ச் சிரித்தார்.

''இவ்வளவு சுலபமா சொல்லிட்டியே விஸ்வம். ஒரு பொண் கல்யாணம்ன்றது லேசான விஷயமில்லை. பரசுவோட கல்யாணத்தை நடத்தின மாதிரி அவ்வளவு ஈஸியா முடிச்சுட முடியாது. இதுக்குத் தொட்டதுக்கெல்லாம் பணம் வேணும். அவ்வளவு பணத்துக்கு நாம எங்கே போறது....?''

அவன் சில விநாடிகள் யோசித்தான். பின்பு, மெதுவாகப் பேச ஆரம்பித்தான்.

''சரிப்பா, நம்மகிட்ட பணம் இல்லைங்கிறதுக்காக எத்தனை நாளைக்கு அவளை இப்படியே வச்சுண்டிருக்க முடியும்? நான் தப்பு சொல்றேன்னு நினைச்சுக்காதீங்க. அவளை மேல படிக்க வச்சுருக்கலாம். அதுக்கு வசதி இல்லேன்னா ஏதாவது வேலைக்காவது அனுப்பிச்சிருக்கணும். எதுவுமில்லாம இப்படி வீட்ல எத்தனை நாளைக்கு வெட்டியா பொழுதை போக்கிண்டிருக்க முடியும்? அது எவ்வளவு கஷ்டமான விஷயம். இன்னும் கொஞ்ச நாள் அவ இப்படியே இருந்தா மனசு ரொம்ப சலிச்சுப் போயிடும். அதுக்கு முன்னால நீங்க அவளுக்கு வேற எதுலயும் இன்ட்ரஸ்ட் நினைக்கறேன். இடமாற்றம் மனுஷா மாற்றம் எல்லாம் அவளை இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமா மாத்தலாம். நாம எப்பவா இருந்தாலும் பணத்தைக் கையிலே வச்சுண்டு கல்யாணம் பண்ணப் போறதில்லை. கடன் வாங்கித்தான் பண்ணியாகணும். அந்த கடனை வாங்கி இப்பவே பண்ணினால் என்ன? ''

''சரி, நீ சொல்ற மாதிரி அப்படியே பண்ணிடறோம்னு வச்சுக்கோ அதுக்கப்புறம் இந்த வீட்டுப் பொறுப்பை யார் பார்த்துக்கறது? நாம சாப்பாட்டுக்கு என்ன பண்றது...?''

''என்னப்பா நீங்க...?'' என்று சிரித்தான் அவன்.

''இதெல்லாம் ஒரு பெரிய கவலையாப்பா? நமக்குன்னு அவ எப்பவும் உட்கார்ந்துண்டிருக்க முடியுமா? இல்லே, இந்த வீட்டுக்குன்னு ஒருத்தி வரவரைக்கும் அவ கல்யாணத்தைத் தள்ளிப் போடத்தான் முடியுமா? யாராவது ஒரு நல்ல ஆளாப் பார்த்து நாம ஏற்பாடு பண்ணிக்க வேண்டியதுதான். வேற என்ன செய்ய முடியும்?''

அவர் பேசாமலே இருந்தார். அப்படியே ஐந்து நிமிஷம் போயிற்று. பின்பு அவனை நிமிர்ந்து பார்த்தார்.

''அப்போ அவாளை வந்து பொண்ணைப் பார்த்துட்டு போகச் சொல்லட்டுமா?''

''ம்... அதுக்கு முன்னால பரசுவுக்கும் இதைப் பத்தி எழுதிப் போட்டு அவனோட அபிப்பிராயத்தையும் கேளுங்க.''

''நாளைக்கு எழுதிப் போட்டுடறேன். அவனுக்குத் தெரியப்படுத்தாம செய்ய முடியுமா என்ன?'' என்றார்.

அதற்குப் பின் இருவரும் பேசவில்லை. காற்று 'ஜிலுஜிலு'வென்று வீசியது. எதிர்ப் பூவரசின் நிழல் தரையில் பெரிசாய் விழுந்தது. அதையே பார்த்துக் கொண்டு இருந்தான் விஸ்வம்.

''வா, விஸ்வம்! உள்ளே போய்ப் படுத்துக்கலாம். உனக்கு ரொம்ப அசதியா இருக்கும். கார்த்தால எழுந்த உடனே ஆபீசுக்குப் பறந்துண்டு போயாகணும்!'' என்று கூப்பிட்டார் அவர்.

''இல்லப்பா. எனக்கு துாக்கம் வரலை. நீங்க போய்ப் படுத்துக்குங்க. நான் கொஞ்ச நாழி இங்கேயே இருந்துட்டு வரேன்...!''

''இப்ப எதுக்கு இங்க உட்காரணும்? மணி பன்னிரண்டாகப் போறது, வந்து படுத்துக்கோ.''

''இல்ல. துாக்கம் வரபோது எழுந்து வரேன். நீங்க போங்க...''

''என்னப்பா! சர்வேச்வரா!'' என்று வலது கையைத் தரையில் உன்றி எழுந்து கொண்டார். கீழே கிடந்த துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டார்.

''அப்ப நான் போகட்டுமா?'' என்று கேட்டார்.

'ம்...' என்று தலையாட்டினான் அவன்.

அவர் போனதும் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தான். சரேலென்று மின்னிக் கொண்டு ஒரு நட்சத்திரம் கோடிழுத்துக் கொண்டு போயிற்று. அது விழுந்த திசையை வெறித்துக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருந்தான். துாரத்தில் நாய் ஒன்று குரைத்தது. அது ஓய்ந்ததும் தெருவின் நிசப்தம் திடீரென்று அதிகமாயிற்று. அதைக் கலைக்கிற மாதிரி தெருக்கோடியில் மெலிசாகச் சலங்கைத் சத்தம் கேட்டது. மனசு பரபரக்கத் திரும்பிப் பார்த்தான் விஸ்வம். ஒற்றைக் கண் மாதிரி கீழே தொங்கவிடப்பட்ட லாந்தர் அசைய வரிசையாக அந்த கட்டை வண்டிகள் வந்து கொண்டிருந்தன. உடனே அவனுக்கு ருக்மிணியின் ஞாபகம் வந்தது. அவள் எதிரில் உட்கார்ந்திருக்கிற மாதிரி தோன்றியது. 'இந்த வண்டி போற வரைக்கும் ஏதோ கிராமத்துல இருந்த மாதிரி இல்லே?' என்று குரல் கூடக் கேட்டது. உடம்பைச் சிலிர்த்துக் கொண்டான். கடைசி வண்டி பார்வையை விட்டு மறைகிற வரை அப்படியே உட்கார்ந்திருந்தான்.

அவை போனதும் சட்டென்று ஒரு சோகம் மனசை இறுகப் பற்றிக் கொண்டது. ஏதேதோ ஞாபகத்துக்கு வந்தது. ஒரு கேன்வாஸ் பையை மாட்டிக்கொண்டு மலைமீது ஏறுகிற விஸ்வம், வயல் வரப்புகளில் நிதானமாய் நடக்கிற விஸ்வம், பாழ் மண்டபத்தில் உட்கார்ந்து பாசி பிடித்த குளத்தில் ஒவ்வொரு கல்லாய் எறிகிற விஸ்வம், கிராமத்து திருவிழாவில் சுற்றுகிற விஸ்வம், பலுான் ஊதல் வாங்கி ஊதுகிற விஸ்வம், வேலைக்கு போகாமல் ஊர் சுற்றுகிற விஸ்வம், ப்ளூடைமண்டில், டிரைவ் இன்னில், அமெரிக்கன் லைப்ரரியில், பீச்சில் இவை எல்லாம் எத்தனை இதமான உணர்வுகள்! அந்த இதத்தில் எத்தனை நாட்களை கடத்தி இருக்கிறான் அவன் இப்போது...? இந்த விஸ்வம்...?

ஒழுங்காக ஆபீசுக்குப் போகிற விஸ்வம். ராத்திரி ஒன்பது மணி வரை தன் காபினில், தனியாக உட்கார்ந்து லெட்ஜரைப் புரட்டுகிற விஸ்வம், சம்பளத்தைக் கொண்டு போய் அப்படியே அப்பாவிடம் கொடுக்கிற விஸ்வம், வீட்டுச் செலவைச் சரிகட்டுகிற விஸ்வம், அப்பாவிடம் பேசித் தங்கையின் கல்யாணத்தை ஏற்பாடு பண்ணுகிற விஸ்வம், அதற்காகக் கையெழுத்துப் போட்டுக் கடன் வாங்கப் போகிற விஸ்வம், மாசம் கொஞ்சமாய் அதை அடைக்கப் போகிற விஸ்வம்!

அவன் ஓர் ஆழமான பெருமூச்சோடு எழுந்து கதவை மூடிக்கொண்டு உள்ளே படுக்கப் போனான்.

(தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்