இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –23

பதிவு செய்த நாள் : 24 அக்டோபர் 2016அன்று கடற்கரையில் கூட்டம் இல்லை. சிலுசிலுவென்று காற்று வீசியது. மேற்கில் மறைகிற சூரியனின் சிவப்பு, பட்டை பட்டையாய் வானத்தில் கோடிழுத்தது. மணலோரத்தில் ஓடி வருகிற அலைகளின் நுரை நுனி வெள்ளியாகச் சுருட்டிக் கொண்டது. ஒன்றன்பின் ஒன்றாக ஓயாமல் எத்தனை சுருள்கள்! அவற்றில் காலை நனைத்துக் கொண்டு வெகுநேரம் நின்றிருந்தான் விஸ்வம். துாரத்தில் தெரிந்த பாய்மரப் படகை, வரிசையாய் நின்றிருந்த கப்பல்களை, வானத்தில் பளிச்சிடும் நீலத்தை மூட்டையாக நகருகிற மேகங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான். மனசு எதிலும் நிலைக்கவில்லை. திரும்பி வந்து மணலில் உட்கார்ந்து கொண்டதும், ஜமுனாவின் ஞாபகம் வந்தது. பாக்கெட்டில் கைவிட்டு அவள் எழுதியிருந்த கடிதத்தை எடுத்தான். நான்காம் முறையாகப் பிரித்து படிக்க ஆரம்பித்தான். கடிதம் பத்து வரிகளில் சுருக்கமாய் இருந்தாலும் அவன் மனசைத் தொட்டது. எந்த விதத்திலும் அவனைக் குறிப்பிடாமல் நேராக ஆரம்பித்திருந்தாள் அவள்.

'இதோடு எத்தனையோ தரம் பத்ரிகிட்ட சொல்லியனுப்பிட்டேன். எதற்கும் பதில் இல்லாததிலிருந்து உங்கள் கோபம் இன்னும் குறையலைன்னு தெரியறது. கோபிச்சுக்க உங்களுக்கு நியாயம் இருக்கு! உரிமையும் இருக்கு. நான் பண்ணினது தப்புதான். அன்னிக்கு அப்படி நடந்து கொண்டது பேசினது எல்லாமே தப்புதான். நீங்கள் 'ஸாரி, ஜமுனா!' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுத் திரும்பிப் போனதற்கப்புறந்தான் என் தப்பு எனக்கு உறைச்சது. அது உங்களை எவ்வளவு துாரம் அவமதிச்சிருக்கும்னு புரிந்தது. அதற்காக உங்களிடம் ஆயிரம் தடவை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனிமேலும் இப்படித் தண்டித்தால் என்னால் தாங்க முடியாது. இதைப் பார்த்ததுக்கு அப்புறமாவது உங்க கோபம் கொஞ்சம் தணியுமா, விஸ்வம்? நேரில் பார்த்து உங்களிடம் பேசக் காத்துக் கொண்டிருக்கும்,

உங்கள்  ஜமுனா.

கடிதத்தை மடித்து மறுபடியும் பைக்குள் போட்டுக் கொண்டபோது ஆழமான பெருமூச்சொன்று வெளிப்பட்டது. அவனிடமிருந்து அவளை நினைத்துப் பரிதாபப் பட்டான். அந்த கடிதத்தை அவள் ஆபீஸ் அட்சரசுக்கு அனுப்பி இருந்தாள். அதிலிருந்து தான் வேலையில் சேர்ந்த விஷயம் அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும். பத்ரிதான் சொல்லியிருக்க வேண்டும். பத்ரி இரண்டு, மூன்று தரம் அவனிடம் வந்து, 'ஜமுனா, உன்னை போன் பண்ணச் சொன்னாள். இல்லாவிட்டால் நேரிலாவது வரச் சொன்னாள்,' என்று சொன்னான். அதற்கு அவன் பேசாமல் இருக்கவே, ''என்ன விஸ்வம், அவகிட்ட உனக்கு என்ன கோபம்?'' என்றுகூடக் ேகட்டான். விஸ்வம் சிரித்துக் கொண்டே, ''கோபம் ஒன்றுமில்லை, பத்ரி,'' என்று பதில் சொல்லியிருந்தான். இப்போது யோசித்த போது தன் அடி மனசில் இன்னுங்கூட ஜமுனாவின் மீது கோபமிருக்கிறதோ என்று தோன்றியது. உடனே இல்லை என்று மறுத்துக் கொண்டான். அவளைப் பார்க்க முடியாமல் டெலிபோனில் கூடப் பேசமுடியாமல்.... போனதற்குத் தன்னை அழுத்திக் கொண்டிருக்கும் ஆபீஸ் வேலைதான் காரணம் என்று நினைத்துக் கொண்டான்.

அன்று ருக்மிணி பேசியதைக் கேட்டதிலிருந்து யார் மீதும் கோபப்பட முடியாது என்று தோன்றியது. யாரையும் வெறுக்க முடியாது. எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டுப் போனாள் அவள். மனசை துடைத்தது மட்டுமில்லை. அங்கு பளிச்சென்று ஒரு கோலமும் போட்டுவிட்டு போய் விட்டாள்.

எப்படிச் சொன்னாள் அவள் அதை? இந்த மாதிரியெல்லாம் யோசிக்க எப்படித் தோன்றியது? பரசு எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலி? பரசுமட்டுந்தான் அதிர்ஷ்டசாலியா? ருக்மிணி இல்லையா?

இப்போது அவர்கள் என்ன பண்ணிக் கொண்டிருப்பார்கள் என்று யோசித்தான். பரோடா கதைத்தெரு ஒன்றில் நடந்து போய்க் கொண்டிருக்கலாம். வீட்டில் உட்கார்ந்து டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால், ருக்மிணி சமையல் அறையில் ஏதாவது வேலை பண்ணிக் கொண்டிருப்பாள். பரசு கூடத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பான். அதுவும் இல்லை என்றால் ஆபீஸில் தன் மேஜையில் உட்கார்ந்து ஓவர் டைம் செய்து கொண்டிருக்கலாம்.

நாட்கள் ஓடுகிற வேகத்தை நினைத்துப் பிரமித்தான் விஸ்வம். ருக்மிணி ஊருக்குப் போய் ஒரு மாதம்தான் ஆகியிருக்கும். ஆனால், எவ்வளவோ நாட்களாகிவிட்ட மாதிரி இருந்தது. அவளையும், அவளுடைய அப்பாவையும் ரயிலேற்றிவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அப்போதுதான் ஆபீஸில் சேர்ந்திருந்ததால் அவனால் லீவு எடுக்க முடியாமல் போய்விட்டது. ராம்ஜிக்கும் பரீட்சை வந்துவிட்டதால் அவளைக் கொண்டு போய்விட முடியவில்லை. கடைசியில் அவளுடைய அப்பா கொண்டு போய் விடுவதாக ஏற்பாடாகியது.

பெட்டி படுக்கையெல்லாம் ஏற்றினபின், அவள் வந்து ஒவ்வொருவரிடமாயச் சொல்லிக் கொண்டாள். வார்த்தையாக எதுவும் வரவில்லை. 'வரட்டுமா!' என்று தலைமட்டும் ஆடியது. அந்த மவுனத்தின் கனம் கூடம் முழுதும் பரவி இருந்தது. மனசு இறுகிக் கிடந்தது. அவள் அப்பாவை நமஸ்கரித்த போது, அவர் உடல் குலுங்கிற்று.

''ராஜத்துக்கு அப்புறம் எங்களுக்கு எந்தக் குறையுமில்லாம பார்த்துண்டிருந்தியேம்மா...! வீட்ல மகாலட்சுமி நடமாடற மாதிரி இருந்ததே, இனிமேல நாங்க என்ன செய்யப் போறோம்னு தெரியலை. கை உடைஞ்ச மாதிரி இருக்கும்!'' என்று சொல்லிவிட்டுச் சுவர்ப் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டார். அவர் ருக்மிணியும் கலங்கிப் போனாள். ஸ்டேஷனுக்குப் போயும் அவளிடமிருந்து பேச்சு எதுவும் வரவில்லை. ஜன்னல் ஓரத்தில் தன் இடத்தில் உட்கார்ந்து ரயில் கிளம்பின போது, கண்கள் பளிச்சிட, உதடு சற்று இறுகக் கையாட்டின அவள் உருவம் அவள் மனசில் அப்படியே தங்கிப் போயிற்று. ருக்மிணியை நினைத்தால் அந்த உருவந்தான் வருகிறது. அதற்கு முன்பிருந்த சிரித்துக் கொண்டே நடமாடும் ருக்மிணி, என்று

எதுவும் நிைனவுக்கு வருவதில்லை. ரயிலில் போன அந்த

ருக்மிணிதான் நினைவில் நின்று கொண்டிருந்தாள்.

அவள் போய்ச் சரியாக எத்தனை நாளாயிற்று என்று எண்ணத் தொடங்கினான். இருபத்தாறு நாட்கள் இருபத்தாறு நாட்கள் தானா ஆயிற்று என்று தோன்றியது. அதற்கு நாலு நாள் முன்னால் தான் வேலையில் சேர்ந்தது நினைவுக்கு வந்தது.

அந்த முதல் நாள் அனுபவத்தை ஞாபகப்படுத்திப் பார்த்தான். சரியாக ஒன்பதரை மணிக்கெல்லாம் ஆபீசுக்குப் போனது, மரங்களையும், செடிகளையும் ஓர் அதிகமான உரிமையுடன் பார்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தது, மாடிப்படி ஏறினபோது, மறுபடியும் அந்தத் திரைப்படத்தை நினைத்துக் கொண்டது. வரதராஜனின் அறை வாசலில் ஒரு நிமிஷம் தயங்கி நின்று, பின் கதவை தட்டிவிட்டு உள்ளே போனது, குட்மார்னிங் சொன்னது!

வரதராஜன் அவனை உட்காரச் சொல்லிப் பத்து நிமிஷம் பேசினார். ஓர் ஆபீசில் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி உபதேசம் பண்ணினார்.

''உனக்கு ரொம்ப சிரிபாரிசு பண்ணி இந்த வேலையை வாங்கித் தந்திருக்கேன். உன் அப்பா இதற்காக என்னிடம் நடையாய் நடந்தார். நல்லபடியா நடந்துண்டு என் பேரைக் காப்பாத்து!'' என்று சொன்னார்.

பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் விஸ்வம். பின் அவர், பெல்லை அழுத்தி பியூனை வரவழைத்தார்.

''அக்கவுண்ட் செக்க்ஷன் சுந்தரராஜனை வரச் சொல்லு'' என்றார்.

உடனே ஒரு நிமிஷத்துக்கெல்லாம் குள்ளமாய் கண்ணாடி போட்டுக் கொண்டு ஒருவர் வந்து நின்றார்.

''குட் மார்னிங் சார்!'' என்று சொல்லிவிட்டு விஸ்வத்தை பார்த்து புன்னகை செய்தார்.

''உங்க செக்க்ஷனுக்கு வந்திருக்கிற நியூ காண்டிடேட்! அழைச்சுண்டு போய் எல்லாத்தை சொல்லிக் கொடுங்க...!''

''எஸ். சார்!'' என்று மறுபடியும் விஸ்வத்தைப் பார்த்தார் அவர். உதட்டில் அதே சிரிப்பு ஓடிக் கொண்டிருந்தது. எழுந்து நின்றான். அவன், ''போகட்டுமா?'' என்று வரதராஜனைப் பார்த்தான்.

''எஸ். யூ கேன் கோ, சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோ...!''

வெளியில் வந்ததும் சுந்தரராஜனுக்குத் தன்னை அவர் அறிமுகப்படுத்தாதது ஞாபகத்துக்கு வந்தது.

''ஐ ம் விஸ்வம்!'' என்று கை குலுக்கினான்.

''நான் உங்க செக்க்ஷன் சூப்பர்வைசர்!'' என்று சொல்லி விட்டு ''விஷ் யூ குட் லக்!'' என்றார்.

கீழே அழைத்துக் கொண்டு வந்து ஒவ்வொருவருக்காய் அறிமுகப்படுத்தினார்.

''எங்க படிச்சீங்க?''

''என்ன படிச்சிருக்கீங்க?''

''நம்ம சீப் உங்க ரிலேடிவ்வா?''

''வீடு எங்கே இருக்கு?''

''கன்க்ராஜுலேஷன்ஸ்!''

''ஆல் தி பெஸ்ட்!''

இப்படி அறிமுகத்தை முடித்துக்கொண்டு தன் ஸீட்டில் போய் உட்கார்ந்தான். வவுச்சர் 'டாலி' பார்த்து என்ட்ரி போடச் சொல்லிக் கொடுத்தார் சுந்தரராஜன்.

''லெட்ஜர்ல எழுதறதுக்கு முன்னால ஒரு தரத்துக்கு ரெண்டு தடவையா சரி பார்த்துடுங்க. அதுல தப்பு வரக்கூடாது'' என்றார்.

ஒரு புன்சிரிப்புடன் வேலையை ஆரம்பித்தான் அவன். உடனே பரசுவின் ஞாபகம் வந்தது. பரசுவும் இப்படித்தான் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பான் என்று தோன்றியது. அன்று முழுதும் என்ட்ரி போடுவதிலும் டோட்டல் டாலி பார்ப்பதிலும் போய்விட்டது.

ஒவ்வொரு நாளும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது எல்லாம் பழகிவிட்டது. ஆபீஸ் சூழ்நிலை, அதன் மனிதர்கள், வேலை, ஓவர் டைம் எல்லாந்தான் அதில் கூட ஒரு ரசனை இருப்பதாய் தெரிந்தது. அந்த அறை, நாற்காலி, மேஜை, நாற்காலி, டெலிபோன், டைப்ரைட்டர் சத்தம், பில், வவுச்சர், செக், பாலன்ஸ், லெட்ஜர் எல்லாவற்றோடும் வெகு காலமாக ஒரு தொடர்பு இருப்பதாக பட்டது. 'பழகிப் போனால் எல்லாவற்றோடும் எவ்வளவு சுலபமாகக் கைலுக்க முடிகிறது...!' என்று பெருமூச்சு விட்டான்.

சில நாட்கள் உட்கார்ந்து வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குப் போறபோது மணி பத்தாகிவிடும். உடம்பும், மனசும் அயர்ந்து கிடக்கும். கதவை தட்டுகிற போது பரசுதானா என்ற சந்தேகம் வரும். படித்துக் கொண்டிருக்கிற ராம்ஜி எழுந்துவந்து கதவை திறப்பான். தான் பரசுவைப் பார்த்த மாதிரியே பாவமாக பார்ப்பான். 'இதிலிருந்தெல்லாம் தப்பவே முடியாது ராம்ஜி!' என்று சொல்ல வேண்டும் போல இருக்கும். வேண்டாம், எதற்கு? தானாகத் தெரிகிறபோது தெரியட்டும் என்று லேசான புன்னகையோடு பேசாமல் இருந்துவிடுவான். கூடத்தில் படுத்து துாங்குகிற அகிலாவையும், அப்பாவையும் எழுப்பாமலிருக்க சத்தப்படுத்தாமல் முகத்தைக் கழுவிக்கொண்டு வருவான். சமையலறையின் மூலையில் அவனுக்காக கிண்ணத்தில் மோருஞ்சாதம் மூடி வைக்கப்பட்டிருக்கும்.

அதை எடுத்துக் கொண்டு சாப்பிட உட்காருகிற போது ருக்மிணியின் ஞாபகம் வரும். சட்டென்று வெள்ளை முயல் ஒன்று குதித்து ஓடிவிட்ட மாதிரி அவள் பாதம் மின்னி மறைகிறாற்போல் தெரியும். கொஞ்ச நாள் வரைக்கும் சாப்பிடப் பிடிக்காமல் அப்படியே மூடி வைத்துவிட்டுக் கை கழுவிக் கொண்டிருந்தான். இப்போது அந்த வெறுமையும் பழகிவிட்டது. எல்லாமே ஒரு பழக்கத்துக்கு வந்தாகி விட்டது. காலையில் எட்டு மணிக்கெல்லாம் அவசரமாய் சாப்பிட்டு விட்டு பஸ் பிடித்து ஆபீசுக்கு போய் ஐந்து மணிக்கு மேலும் உட்கார்ந்து வேலை செய்து, ராத்திரி ஒன்பது மணிக்கோ பத்து மணிக்கோ திரும்பி வந்து ஒரு வாய் மோர்ச் சாதம் சாப்பிட்டுவிட்டு பின், அடித்துப் போட்ட மாதிரி படுத்துத் துாங்கி.... நண்பர்களை பார்த்து, பார்க் பக்கம் போய் எத்தனையோ நாளாகிவிட்டது. மறுபடியும் அந்த சுவரின் மீது வரிசையாய் உட்கார்ந்து சாத்ரேயும் ஹக்ஸ்ஸியும் பற்றிப் பேச முடியாது. லேசாய் முணு முணுப்பாய் பாட முடியாது. இப்போது ஆபீசுக்கு போவது ஒன்றுதான் தன் வாழ்க்கை. அதுதான் நிஜம்!

மணலில் கிறுக்குவதை நிறுத்திவிட்டு ஆழமான ஒரு பெருமூச்சோடு நிமிர்ந்து பார்த்தான். கருநீலமாக வானம் இருண்டு விட்டது. துாரத்தில் ஒற்றை நட்சத்திரம் பிகாசித்து லைட் ஹவுஸ் விளக்கு விநாடிக்கு ஒரு தரம் கண்ணை சிமிட்டியது. பானி பூரிக்காரன் தன் கடையைக் கட்டிக் கொண்டிருந்தான். பீச் அநேகமாய் வெறுமையாய்க் கிடந்தது. இரண்டு மூன்று கார்களைத் தவிர எதுவும் இல்லை.

மணலை உதறிவிட்டு எழுந்து நடந்தான் விஸ்வம். நிமிர்ந்து பார்த்தபோது அந்த ஒற்றை நட்சத்திரமும் கூடவே நகர்கிற மாதிரி தெரிந்தது.

            (தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்