சினிமாவில் எம்.ஜி.ஆர். – 279 – விஜயபாஸ்கர்

18 அக்டோபர் 2016, 10:16 PM


தேடி வந்த பிரபலங்கள்!

சிவாஜி கணேசனை வைத்து வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், முரடன் முத்து முதலிய படங்களை தயாரித்து இயக்கியவருமான பத்மினி பிக்சர்ஸ் பி.ஆர்.பந்துலு படத்துறையில் நொடித்துப்போன நிலையில் எம்.ஜி.ஆரை நாடினார், அவர் ‘சிவாஜி யூனிட்’ என்று கூறப்படும் முகாமிலிருந்து வந்தவராயிற்றே என்று தயங்காமல் அவருக்கு எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்த படம்தான் ‘ஆயிரத்தில் ஒருவன்’ மாபெரும் வெற்றி பெற்றது.

19770ல் சிவாஜி யூனிட்டைச் சேர்ந்த அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் திருவிளையாடல், சரஸ்வதி சபதம், நவராத்திரி, திருவருட்செல்வர், தில்லானா மோகனாம்பாள் முதலிய படங்களை சிவாஜியை வைத்து இயக்கி தயாரித்தவர், தனக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர எம்.ஜி.ஆரின் உதவி நாடினார் ஏ.பி.நாகராஜன்.

அவருக்கு உதவ ஒப்புக் கொண்டு எம்.ஜி.ஆர். நடித்துக் கொடுத்த படம்தான் ‘நவரத்தினம்’ வெற்றிப்படம், அப்போது ஏ.பி.என். மனம் திறந்து சொன்னது.

“நவரத்தினம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிட்டு, துவக்கவிழா நடப்பதற்குள் ஒரே வாரத்தில் படம் எல்லா ஏரியாக்களும் விற்றுவிட்டன, வியாபாரரீதியில் பெரும் வெற்றியினைத் தந்திருக்கின்ற படம் இது. நான் இதுவரை படம் எடுத்தேன், இப்போது தான் பணம் எடுத்தேன்! மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான் இதற்குக் காரணம். அவர் இந்தப் படத்திற்கு அளித்திருக்கும் ஒத்துழைப்பு மறக்க முடியாதது, பாட்டு, கதை, வசனம், இசை, உடை, ஒளிப்பதிவு போன்ற ஒவ்வொன்றிலும் அவர் தனிக்கவனம் செலுத்தி ஆலோசனை கூறினார்” என்பது ஏ.பி.நாகராஜன் அவர்களின் வாக்குமூலம்.

நடிகர்களின் ஆருயிர்த் தோழர்

”கலைவாணர் என்.எஸ்.கே. இருந்தபோது நடிகர்களிடையே எழக்கூடிய சில்லறைத் தகராறுகளையும், பூசல்களையும் சுமூகமாகத் தீர்த்து வைக்கும் ஓர் ஐ.நா.ஸ்தாபனமாக இருந்தார், கலைவாணருக்குப் பின் அந்த இடத்தை நிரப்பிக்கொண்டு இருப்பவர் எம்.ஜி.ஆர். அவர் நடிகர்களுக்கு ஆருயிர்த்தோழர் ஆலோசகர்.

எம்.ஜி.ஆர். நடிகர் சங்கத்துக்கு செயலாளராக இருந்த போது தனது சொந்த வீட்டை சங்கத்திற்கு விட்டிருந்தார், போதிய வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கும் பல முதுபெரும் நடிகர்களுக்கும், துணை நடிகர்களுக்கும் இவர் தன் படங்களில் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்.

‘நடிகர் சமுதாயம் என்பது ஓர் இணைப்புக் கூட்டம். இதில் வேறுபாடோ, ஏற்றத்தாழ்வோ காண முயலக் கூடாது…” என்பது எம்.ஜி.ஆரின் எண்ணம்.

ஒரு சமயம் ‘மதுரை வீரன்’ படப்பிடிப்பின் போது தனக்கு மட்டும் மின்சார விசிறி காற்றடிக்க – பல துணை நடிகர்கள் புழுக்கத்தில் வாடி வதங்குவதைப் பார்த்த அவர் தன் அருகில் இருந்த மின்சார விசிறியை அவர்கள் அருகில் கொண்டு போய் வைத்ததை நாமே நேரில் பார்த்தோம்.

மற்றொரு சமயம் இவர் கலந்து கொண்ட சென்னை கல்லூரி விழாவில் ஒரு பெட்டி நிறைய ஆப்பிள் பழங்கள் பரிசாகக் கொடுத்தபோது அதை நேரே ஸ்டுடியோவுக்குக் கொண்டு வந்து அங்குள்ள தொழிலாள நண்பர்களுக்கும் விநியோகித்ததை யாரும் மறக்க முடியாது. சிலருக்கு இவரது செயல் முதலில் கெடுதல் செய்வதாகத்தான் படும். ஆனால், சற்று காலங்கழித்துத் தான் அவர் அதை எதற்காக, எந்த மனோபாவத்தில் செய்திருக்கிறார் என்பது புரியும்” – இது 1960-ம் ஆண்டு ‘பேசும்படம்’ தரும் சான்றிதழ்.

வெற்றியின் பார்முலா

ஒரு படத்திற்கு மொத்தம் எண்பது காட்சிகள் என்றால் படத்தின் நாயகன் பாடல்கள் – சண்டைக் காட்சிகள் உட்பட சுமார் 70க்கும் மேற்பட்ட காட்சிகளில், திரும்பத் திரும்ப எல்லாக் காட்சிகளிலும் அவரே தோன்றுவார். ஆனால், புரட்சி நடிகர் அந்த விஷயத்திலும் ஒரு புரட்சி செய்தவர்.

படத்தின் முக்கிய இருபது காட்சிகளில் மட்டும் அவர் தோன்றி (பாடல்கள் – சண்டைக் காட்சிகள் தவிர) நடிப்பார் எம்.ஜி.ஆர். அவர் இப்போது வரமாட்டாரா, இந்த ஆபத்திலிருந்து ஏழைகளை – பெண்ணைக் காப்பாற்ற மாட்டாரா என்று படம் பார்க்கும் ஜனங்கள் நினைக்கிற சமயத்தில் திரையில் தோன்றி தீயவர்களை அடித்து விரட்டிக் காப்பாற்றுவார், அந்த காட்சி கதையில் இயல்புத் தன்மை மாறாமல் அமைக்கப்பட்டிருக்கும்.

அவர் பொதுக் கூட்டங்களில், விழாக்களில் கலந்து கொண்டாலும் அது போன்ற சமயங்களில் மக்கள் முன்னிலையில் மணிக்கணிக்கில் உட்கார்ந்திருக்க மாட்டார்.