சினிமாவில் எம்.ஜி.ஆர். – 277 – விஜயபாஸ்கர்

04 அக்டோபர் 2016, 11:10 PM

நம்பியார் வீடாக இருந்தால் சவுகரியம்!

“ஸ்ரீதர் படத்­தில் நடிக்­கச் சம்­ம­தம். ஆனால், மேலே இது குறித்து பேச வேண்­டும், நாங்­கள் சந்­திப்­பது ஸ்ரீதர் வீட்­டி­லும் வேண்­டாம். என் வீட்­டி­லும் வேண்­டாம். ஒரு பொது நண்­ப­ரின் வீடாக இருக்­க­லாம். நம்­பி­யார் வீடாக இருந்­தால் சௌக­ரி­யம்…” எம்.ஜி.ஆரின் பதில் இது.

நான் நெகிழ்ந்து உணர்ச்­சி­வ­சப்­பட்­டுப் போனேன். எம்.ஜி.ஆர். என் வீடு தேடி வந்­தால் நன்­றா­யி­ராது. அதே சம­யம் அவர் வீட்­டுக்கு நான் போனால் மற்­ற­வர்­கள் என்­னைக் கேவ­ல­மாக அவர் வீடு தேடி அவர் காலில் விழப்­போ­னேன் என்று பேசு­வார்­கள். அந்த அவ­மா­னம் எனக்கு நேரக்­கூ­டாது என்று அவர் நினைத்­தார். அத­னால் பொது நண்­பர் வீட்­டில் சந்­திக்­க­லாம் என்று தக­வல் அனுப்­பி­யி­ருக்­கி­றார்.

நான் கன்­னை­யா­வி­டம் சொன்­னேன். எம்.ஜி.ஆரை நான் சென்று சந்­திப்­ப­து­தான் முறை. எனக்கு இதில் தயக்­கமோ, சங்­க­டமோ கிடை­யாது. அவர் உள்­ளம் எனக்­குப் புரிந்­து­விட்­டது தோட்­டத்­தில் வந்து சந்­திக்­கி­றேன் என்று கூறி­வி­டுங்­கள் என்­றேன்.

மறு­நாள் காலை தோட்­டத்­தில் சிற்­றுண்­டிக்கு வரும்­படி எம்.ஜி.ஆரி­ட­மி­ருந்து தக­வல் கிடைத்­தது. ராமா­வ­ரத்­தில் தட­பு­ட­லான சிற்­றுண்டி ‘உங்­களை வைத்­துப் பட­மெ­டுக்க வாய்ப்­புக் கிடைத்­த­தில் பெரு­மைப்­ப­டு­கி­றேன்,’ என்று நான் கூற, எம்.ஜி.ஆர். ‘உங்­க­ளு­டன் இணைந்து ஒரு படத்­தில் பணி­யாற்­று­வ­தில் எனக்கு சந்­தோ­ஷம்’ என்­றார்.

மனம் விட்டு சில விஷ­யங்­க­ளைப் பேச வேண்­டும் என்­றேன். “சொல்­லுங்­கள்’ என்­றார் வசீ­க­ரப் புன்­ன­கை­யு­டன்.

சிவா­ஜியை வைத்து நான் ஒரு படம் எடுத்­துக் கொண்­டி­ருப்­ப­தும், அது பாதி­யில் நிற்­ப­தும் உங்­க­ளுக்­குத் தெரி­யும். நான் எவ்­வ­ளவோ முயன்­றும் தவிர்க்க முடி­யாத கார­ணங்­க­ளால் தாம­த­மா­கி­றது. அதை என்­றா­வது முடித்து ஒரு நாள் ரிலீஸ் பண்­ணத்­தான் போகி­றேன். ஆனால், அது ரிலீஸ் ஆகிற வரை காத்­தி­ருக்க சித்­ரா­ல­யா­வின் நிதி நிலைமை அனு­ம­திக்­க­வில்லை. உங்­க­ளு­டைய ஒத்­து­ழைப்­புக் கிடைத்­தால் என் நிலை­மை­யைச் சீர்­ப­டுத்­திக் கொண்டு விட முடி­யும் என்ற நம்­பிக்­கை­யில் வந்­தி­ருக்­கி­றேன். புரி­கி­றது. இன்­னும் ஏதா­வது? மேலும் மனம் திறந்து நான் பேசி­னேன், “அன்று என் உயர்­வைக் கண்டு பொறா­மைப்­பட்­ட­வர்­கள் இன்று என் தாழ்­வைக் கண்டு மகிழ்ந்து கொண்­டி­ருப்­பார்­கள். உங்­க­ளு­டன் இணைந்­தால் நான் மறு­படி மேலே வந்து விடு­வேனே என்ற வீண்­க­வலை அவர்­க­ளுக்கு இருக்­கும். அத­னால் இல்­லா­த­தும், பொல்­லா­த­தும் என்­னைப் பற்­றிக் கூறி நமக்­குள் பிளவு ஏற்­ப­டுத்த அவர்­கள் முயற்­சிப்­பார்­கள். ஆகவே, என் கோரிக்கை இது­தான், என்­னைப் பற்றி யார் உங்­க­ளி­டம் என்ன கூறி­னா­லும் அதை அப்­ப­டியே நம்­பி­வி­டா­தீர்­கள். என்­னி­டமே நேர­டி­யாக விளக்­கம் கேளுங்­கள்’ என்­றேன். “நீங்­கள் அதைப்­பற்றி துளி­யும் கவ­லைப்­பட வேண்­டாம் ஸ்ரீதர். உங்­க­ளுக்கு எத்­தனை நாள் கால்­ஷீட் வேண்­டு­மா­னா­லும் முன்­னு­ரி­மைக் கொடுத்து தேதி ஒதுக்­கித் தரு­கி­றேன். எப்­ப­டி­யும் மூன்று மாதத்­திற்­குள் உங்­கள் படத்தை முடித்­துத் தரு­கி­றேன். கவ­லையை விடுங்க மேலே ஆக வேண்­டி­ய­தைக் கவ­னி­யுங்க” என்­றார் எம்.ஜி.ஆர்.

காலை உணவு முடிந்து எழுந்­தோம். விடை­பெற முற்­பட்ட என்னை ‘ஒரு நிமி­ஷம் உட்­கா­ருங்க’ என்று வர­வேற்பு அறை­யில் உட்­கா­ரச் செய்த எம்.ஜி.ஆர். தமது உத­வி­யா­ளரை அழைத்து மிரு­து­வான குர­லில் ஒரு கடி­தம் தயா­ரிக்­கச் சொல்லி, அதில் தம்­மு­டைய கையெ­ழுத்­தைப் பதித்து என்­னி­டம் தந்­தார். அதைப் படித்­துப் பார்த்த நான் மெய்­சி­லிர்த்­துப் போனேன். அதில் எம்.ஜி.ஆர். என்ன எழு­தி­யி­ருந்­தார் தெரி­யுமா?

“நான் ஸ்ரீத­ருக்கு ஒரு படம் நடித்­துக் கொடுக்க ஒப்­பு­த­ல­ளிக்­கி­றேன். அவர் படத்­துக்கு முன்­னி­ரிமை தந்து மூன்று மாதங்­க­ளுக்­குள் முடித்­துத் தர சம்­ம­திக்­கி­றேன்.” நீங்க சொன்னா போதாதா? எழு­திக் கையெ­ழுத்­திட்­டுத் தர வேண்­டுமா? என்று நான் கம்­மி­யக் குர­லில் உணர்ச்­சி­வ­சப்­பட்­டுக் கேட்­டேன்.

எம்.ஜி.ஆர். தமது வழக்­க­மான வசீ­க­ரப் புன்­ன­கை­யு­டன் விளக்­கி­னார். “ஸ்ரீதர்! இது உனக்­காக இல்லை. பைனான்­ஷி­யர்­க­ளுக்­காக. இது பெரிய பட்­ஜெட் படம். முழுப் பண­மும் உங்­க­ளி­டம் இருக்­குமா என்­பது சந்­தே­கம். பணப் பற்­றாக்­கு­றை­யால் நீங்­கள் சிர­மப்­ப­டக்­கூ­டாது. இந்­தக் கடி­தத்­தைக் காட்­டி­னால் எந்த பைனான்­ஷி­ய­ரும் உங்­க­ளுக்­குப் பணம் உதவ உடனே முன்­வ­ரு­வார்” என்று.