இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –20

பதிவு செய்த நாள் : 03 அக்டோபர் 2016

இரண்டு பேருக்குமிடையில் பெரிய மவுனமாய் ஒன்று விழுந்து கிடந்தது. தெருவிலும் நிசப்தமாக இருந்தது. எப்போதாவது போகிற யாராவது ஒருவரின் செருப்பு சத்தம், குழந்தை அழுகிற சத்தம், துாரத்து கார் ஹாரனின் சத்தம், சுவர் கோழியின் சத்தம் இப்படி ஒன்றுமே கேட்காத துல்லியமான ஒரு நிசப்தம். வானம் முழுதும் சட்சத்திரங்களாக இறைந்து கிடந்தன. முக்கால் நிலவின் குளிர்ச்சி பூமியை தொட்டது. காற்று மட்டும் இதமாக வீசிக் கொண்டிருந்தது.

துாரத்து இருட்டை வெறித்தபடி பேசாமல் இருந்தான் பரசு. அதன் பின் அவன் ஒன்றும் பேசவில்லை. பேச முடியவில்லை. மனசு அப்படி தளர்ந்து போய் இருந்தது. 'எல்லோரும் எப்படியெல்லாம் மாற வேண்டியதாய் இருக்கு...!' என்று நினைத்துக் கொண்டான். வானத்தை அண்ணாந்து பார்த்தபடி முழங்காலைக் கட்டிக்கொண்டு அமைதியாக உட்கார்ந்திருக்கிற விஸ்வத்தை பார்த்தபோது ஆழமான ஒரு வருத்தம் மனசை இறுகக் கவ்விக் கொண்டது. எப்போதோ பார்த்த சர்க்கஸின் ஒரு காட்சி சட்டென்று ஞாபகத்துக்கு வந்தது. கம்பீரமாய், பிரமிப்பை ஏற்படுத்துகிற மாதிரி தன் பெரிய உடம்போடு யானை ஒன்று வரும். சொடுக்கினால் சத்தத்தை எழுப்புகிற சாட்டையோடு ரிங் மாஸ்டரும் வருவார். அந்தச் சாட்டைக்குப் பயந்து அது அவர் சொல்கிறபடியெல்லாம் கேட்கும். ஒரு காலை துாக்கி 'ஸல்யூட்' அடிக்கும். மண்டியிட்டு நமஸ்கரிக்கும். பெரிய உடம்பைக் குறுக்கி கொண்டு சின்ன முக்காலியின் மீது ஏறி நிற்கும். அதை பார்க்கிற போது சொல்ல முடியாத சோகம் ஒன்று ஏற்படும். இவ்வளவு பெரிய மிருகத்தின் இயல்பான கம்பீரத்தை இப்படியெல்லாம் ஒடுக்கிவிடுகிறார்கள் என்று வருத்தமாய் இருக்கும்.

அப்போது விஸ்வத்தை பார்த்ததும் அதே மாதிரி ஒரு வருத்தம் ஏற்பட்டது பரசுவுக்கு. எப்போதோ ஒரு நாள்தான் இதேபோல் மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. முருங்கை மரத்தின் இலைகளை உருவிக் கீழே போட்டது. கீழே வீட்டுப் பெண் பேப்பரை சுருட்டி எடுத்துக் கொண்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டிற்கு போவதை பார்த்தது, பின்பு, முழங்காலில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுதது... 'பாவம் விஸ்வம்!' என்று சொல்லிக் கொண்டான். அவன் முதுகை அன்பாய் தடவி இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும் போலிருந்தது. 'வேணாம், எதுக்கு? இந்த வார்த்தைகளுக்கெல்லாம் அர்த்தந்தான் என்ன? எதையும் பேசினால் தானா?' என்றும் தோன்றியது.

ஒன்றும் சொல்லாமல் மெதுவாக நகர்ந்து சுவரில் நன்றாக சரிந்து கொண்டான். கண் லேசாக அயர்த்தியது. கொட்டாவி ஒன்றும் வந்தது.

அதை பார்த்த விஸ்வம் 'துாக்கம் வர்றதா?' என்று கேட்டான்.

''உனக்கு வரலியா?''

''இல்லே. நீ வேணும்னா கீழ போய் படுத்துக்கோயேன்...!''

''ஏன் நீ வரலியா?''

''இல்ல நான் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருந்துட்டு வர்றேன்.''

''இப்படி வெட்ட வெளியிலே எத்தனை நாழி உட்கார்ந்துண்டிருப்பே? இந்த ஜில்லிப்பு உடம்புக்கு ஒத்துக்காது.''

விஸ்வம் புன்னகை செய்தான்.

''எனக்கு பழக்கந்தான் ஒண்ணும் பண்ணாது. நீ போய் துாங்கு. காலைல எழுந்து ஆபீசுக்கு வேற போயாகணும்!''

''நீ மட்டும் தனியா எத்தனை நாழிதான் இருப்பே?''

''கொஞ்ச நேரந்தான் துாக்கம் வரபோது இறங்கி வந்துடுவேன்.''

''அப்ப நான் போகட்டுமா?''

''சரி'' என்று தலையாட்டினான் விஸ்வம். பரசு படிகளில் இறங்குவதை வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தான். பின், சுவரை விட்டு இறங்கி, கைகளை மடித்து தலைக்கு கீழே வைத்துக் கொண்டு, வானத்தை பார்த்தபடி மல்லாந்து கிடந்தான்.

மேகங்களின் உருமா ற்றத்தை, நட்சத்திரங்களின் மினுங்கலை, தென்ன ங்கீற்றின் பளபளப்பைக் கண் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது. மனசு எதிலும் லயிக்கவில்லை. எது எதுவோ வந்து போயிற்று. கடைசியாக மீண்டும் பரசுவிடம் வந்து நிலைத்தது. இனிமேல் அவன் பிம்பத்தைத் தான் அணிந்து கொள்ள நேர்கிற நிர்பந்தத்தை நினைத்து பார்த்தான். அகிலாவை வெளியே அனுப்ப, ராம்ஜியை கான்வொகேஷன் டிரஸ்ஸில் பார்க்க, எல்லாவற்றிற்கும் மேலாக அடுப்பில் வெண்கலப் பானை ஏற இவன் ஒரு பரசுவாக மாறியே ஆக வேண்டும். வேறு வழி இல்லை. இனிமேல் இவன் தன் ஆசைகளை எரித்துக் கொள்ள வேண்டும். அந்தக் கணப்பில் மற்றவர்கள் குளிர் காய்வதை சிரித்துக் கொண்டே பார்க்க வேண்டும். 'பரசு, உன்னால் இது எப்படி முடிந்தது? முகம் சுழிக்காமல் எந்த வருத்தத்தையும் காட்டாமல் இருக்க எப்படிக் கற்றுக் கொண்டாய்? அந்த சிரிப்பில் எல்லாவற்றையும் கரைத்துக் கொள்கிற வழியை சொல்லிக் கொடேன்...' இல்லை. அதைப் பரசுவிடமிருந்து கற்றுக் கொள்ள முடியாது. அவன் சிரிக்க மாட்டான். அவனுக்கு சிரிக்க தெரியாது. அது ருக்மிணியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது. எதற்கும் – எப்போதும் உதட்டில் ஒரு சிரிப்பு. மத்தாப்பூ எரிகிற மாதிரி...!

அவள் பரசுவோடு போகப் போவது இல்லை என்பது ஆறுதலாகத்தான் இருந்தது. ஆனாலும் அதன் பின் பத்து நாளோ, பதினைந்து நாளோ, ஒரு மாசமோ, வீடு கிடைத்ததும் அவளும் போய்விடுவாள். பின், அந்த சிரிப்பை பார்க்க முடியாது. அவனுக்கு அன்பாக சாதம் போட யாரும் இருக்க மாட்டார்கள். அவன் சொல்லாமலேயே மோருஞ் சாதம் மூலையில் மூடி வைக்கப்பட்டிருக்கும். காலையில் பக்கெட்டிற்குள் சோப்பில் முக்கின சட்டை ராத்திரி அவன் திரும்பி வருகிறவரை அப்படியே கிடக்கும். அவன் அலமாரியிலிருந்து லா.ச.ராவும், ஜானகிராமனும் காணாமற் போக மாட்டார்கள். கொஞ்சுகிற மாதிரி இழைகிற வீணையில், 'சின்னஞ்சிறு கிளியே வாசியுங்களேன்...!' என்று கேட்க முடியாது. இது என்ன பிரிவு? எதற்காக இந்த பிரிவுகள்? மனசை ஒடித்துப் போடுவதற்கா இதெல்லாம்...?

பக்கத்தில் காலடி சத்தம் கேட்டது. திடுக்கிட்ட மாதிரி திரும்பிப் பார்த்தான். அப்பா நின்று கொண்டிருப்பது தெரிந்தது. நிலவு வெளிச்சம் தென்னங்கீற்றின் வழியாக அவர் முகத்தின் பாதியில் விழுந்தது. காலை மடக்கிச் சட்டென்று எழுந்து உட்கார்ந்து கொண்டான்.

''இன்னும் இங்க என்ன பண்றே?'' என்று கேட்டுக் கொண்டே அவன் பக்கத்தில் உட்கார்ந்தார் அவர். பதிலை எதிர்பார்க்கிற கேள்வியாக அது இல்லாததால் பேசாமல் இருந்தான் அவன்.

''துாக்கம் வரலியா?'' என்று மறுபடியும் கேட்டார்.

''இல்லை'' என்று லேசான குரலில் சொன்னான். பின், அவர் தரையைப் பார்த்துக் கொண்டு மவுனமாக இருந்தார். அப்படியே ஓர் அரை நிமிஷம் போயிற்று. பின், ''பரசு உன்கிட்ட எல்லாம் சொன்னானா?'' என்று கேட்டார்.

அவன் தலையாட்டினான்.

''ஒரு துாண் மாதிரி தனியா நின்று எல்லா பாரத்தையும் தாங்கிண்டிருந்தான். இப்ப அவன் போகப் போறேன்னு சொன்னதும் கஷ்டமா இருக்கு...!''

அதற்கும் அவன் ஒன்றும் சொல்லவில்லை.

''எனக்கு வர்ற பென்ஷன் பணம் எதுக்கு போறமும், சொல்லு? இந்த காலத்துல அதுல என்ன பண்ண முடியும்? வீட்டு வாடகைக்கே சரியாப் போயிடும். அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்றது? இதையெல்லாம் நினைச்சா பயமா இருக்கு...''

விஸ்வம் நிமிர்ந்து அவரை பார்த்தான். பரசு தங்களை விட்டுப் பிரிகிற வருத்தத்தை விட இந்த வருத்தங்கள் எல்லாந்தான் அவருக்கு பெரிதாக இருக்கிறது என்று உணர்ந்த போது ஒரு விநாடி நேரத்துக்கு வெறுப்பாக இருந்தது. உடனே அவரை அவனால் நியாயப்படுத்தியும் பார்க்க முடிந்தது. அவர் நிலைமையில் அப்படி நினைப்பது தப்பு ஒன்றும் இல்லை என்று தோன்றியது. அவரால் அப்படித்தான் நினைக்க முடியும். அவர் தன்னைப் பார்த்த பார்வையில் தெரிந்த கெஞ்சலை அவன் புரிந்து கொண்டான். ஏதாவது சொல்லேன், ஆறுதலாக ஒரு வார்த்தை பேசேன் என்று கேட்கிற மாதிரி. அவன் அவருக்காக பரிதாபப்பட்டான். குழந்தை தனமாக தனக்குள் அவரிடம் ஏற்பட்ட கோபத்தை நினைத்து வெட்கப்பட்டான். இதற்கெல்லாம் இவர்தான் காரணம் மாதிரி இது என்ன கோபம்? யாரிடம் யார் கோபப்பட முடியும்? அப்படி பார்த்தால் அப்பாவுக்கும் தன் மீது கோபப்பட நிறைய காரணங்கள் இருக்கும். பாவம், அப்பா! அவரிடம் மனசுவிட்டு பேச வேண்டும். அன்பாக பேச வேண்டும். இதமாக பேச வேண்டும்.

''அப்பா...!'' என்று நிதானமாக .கூப்பிட்டான்.

''ம்...!''

''நீங்க இந்த மாதிரி தளர்ந்து போயிடக் கூடாது. மனசை திடமா வச்சுக்கணும். பரசு ஒரு துாண் மாதிரி தனியா நின்னு எல்லா பாரத்தையும் தாங்கிண்டது உண்மைதான். எத்தனை நாளைக்குத்தான் அவனே தாங்கிண்டிருக்க முடியும்? கொஞ்ச நாழியாவது இறக்கி வைக்க வேணுமா? அதனாலதான் தானா இப்படி ஒண்ணு நேர்ந்திருக்கு. அவன் அருமையை புரிஞ்சுக்கோங்கன்னு காட்டி இருக்கு. அவன் மாதிரி அவன் ஸ்தானத்துக்கு எனக்கு முழு தகுதி இல்லேன்னாலும் ஓரளவாவது தகுதி இருக்கும்னு நினைக்கிறேன்...!''

அவன் .ேமலே பேச முடியாமல் சற்று நிறுத்தினான். மீண்டும் ஆரம்பித்தபோது குரல் கரகரவென்று வந்தது.

''உங்களுக்கு பரசு மேல இருக்கிற நம்பிக்கை என் மேல கிடையாது. இதை நான் குத்தமா சொல்லலே. அதுல தப்பு ஒண்ணும் இல்லேன்னுதான் சொல்ல வரேன். இனிமேல நம்பிக்கை வர மாதிரி நடந்துக்கணும்னு இப்பத்தான் நான் நினைச்சுண்டு இருந்தேன். அதையேதான் பரசுகிட்டயும் சொன்னேன். அப்பாவை கவலைப்படாம இருக்கச் சொல்லுன்னு சொன்னேன். வரதராஜன் அப்பாய்ன்ட் மென்ட் ஆர்டர் அனுப்பட்டும். உடனே போய் சேர்ந்துடறேன்னு சொன்னேன். அவனை பணம் எதுவும் அனுப்ப வேணாம்னு சொன்னேன். நீயும் சந்தோஷமா இரு. மன்னியையும் சந்தோஷமா வச்சுக்கோ. வேற எதை பத்தியும் கவலைப்படாதே. இனிமேல் மீதியெல்லாம் என் பொறுப்பு!ன்னு சொன்னேன்.

அதையே உங்ககிட்டேயும் சொல்றேன். இதுக்கு மேல என்ன சொல்லி என்னை நிரூபிக்க முடியும்னு தெரியலை. இதற்கு மேல இன்னும் வேற என்ன செய்யணும்னு நீங்களே சொல்லுங்கோ...?''

அவர் வாயடைத்துப் போய் அவனையே பார்த்தார். கண் ஓரத்தில் நீர் கட்டி நிலா வெளிச்சத்தில் பளிச்சிட்டது. 'விஸ்வமா இவன்! நேற்றுவரை வேலைக்கு போக முரண்டு பிடித்த விஸ்வமா! அதே விஸ்வந்தானா இவன்!' மனசு வறண்டு போயிற்று. பரசு தன்னிடம் மேலே படிக்கக் கெஞ்சினது ஞாபகத்துக்கு வந்தது. 'இல்லேப்பா படிக்கறேம்ப்பா!' என்று கண் கலங்கக் கேட்டது. 'பார்க்கலாம், பரசு. முதல்ல டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்ல சேர்ந்திடு,' என்று தான் பதில் சொன்னது எல்லாம் ஒவ்வொன்றாக  நினைவுக்கு வந்தது. 'குப்'பென்று வயிற்றை ஏதோ சங்கடப்படுத்தியது. முதலில் பரசு! இப்போது இவன்..! ஒவ்வொருவரின் கனவுகளையும் நசுக்கி மிதிக்கிற குற்ற உணர்ச்சியில் உடைந்து போனார் அவர். பேச ஆரம்பித்த போது குரல் நடுங்கியது.

''இது போறும், விஸ்வம். வேற ஒண்ணும் செய்ய வேணாம் விஸ்வம். இதுக்கு மேல எது கேட்கவும் எனக்கு தகுதி இல்லை. இதுக்கே தகுதியில்லை. உங்களையெல்லாம் இப்படி சிரமப்படுத்தறது ரொம்ப கஷ்டமா இருக்கு. எனக்கு எதுவும் சொல்ல தெரியலை. பலி ஆடு மாதிரி ஒவ்வொருத்தரா என் பேச்சுக்கு பணிஞ்சு போறதை பார்க்கிறபோது ரொம்ப வேதனையா இருக்கு. நான் என்ன பண்ணுவேன் சொல்லு, விஸ்வம்?''

அவர் துண்டால் வாயை பொத்திக் கொண்டதும், பதறிப்போனான் விஸ்வம். அவர் இந்த மாதிரி உடைந்து அவன் பார்த்ததே இல்லை. அம்மா செத்துப்போன அன்று முதன் முதலாக பார்த்தான். இது இரண்டாவது தரம். அவன் பணிந்துபோனது அவரை இவ்வளவு சங்கடப்படுத்தும் என்று நினைக்கக்கூட இல்லை. அவர் சந்தோஷப்படுவார். நிம்மதியாகக் கீழே இறங்கிப் போவார். 'என்னப்பா! வர்வேசுவரா!' என்று துண்டை உதறிப் போட்டுக் கொண்டு படுத்துக்கொள்வார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒவ்வொருவருக்குள்ளேயும் எத்தனை ஒவ்வொருவர்கள்!

''அப்பா என்ன இது?'' என்று அவர் தோளை தொட்டான். கையை எடுக்காமல் சில விநாடிகள் அப்படியே இருந்தான். அந்த ஸ்பரிசம் அவரை ஆசுவாசப்படுத்தி இருக்க வேண்டும். அவர் எதிர்பார்த்த ஆறுதலை தந்திருக்க வேண்டும். மெதுவாக தம்மைச் சமாளித்துக் கொண்டார். பின் ''ஒண்ணுமில்லே வா, போகலாம். ரொம்ப நாழியாயிடுத்து...!'' என்று துண்டால் முகத்தை துடைத்தபடி சரேலென்று எழுந்து கொண்டார். விஸ்வமும் எழுந்தான்.

படி இறங்கி அறைக்கு வந்த போது பக்கத்து வீட்டில் வாசல் தெளித்து பெருக்குகிற சத்தம் கேட்டது.

(தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்