கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 43

பதிவு செய்த நாள்

26
செப்டம்பர் 2016

பொன்னு விளையிற பூமியில் பொற்காலப் பாடல்கள் தந்த மருதகாசி!

‘வாராய் நீ வாராய்’ என்று 66 ஆண்டுகளுக்கு முன், ‘மந்திரிகுமாரி’யில் ஒலித்த பாடல், இன்றும் நம் செவிகளில் வந்தினிக்கிறது. சங்கீத சக்ரவர்த்தி ராமநாதன் இசையமைத்து, உச்சக்கட்ட காட்சிக்கு மிகப் பொருத்தமான இரட்டை அர்த்தத்துடன் இட்டுச்சென்ற இந்த பாடலை எழுதியவர் அ.மருதகாசி. தமிழ் சினிமாவின் முதல் வண்ணப்படம், மாடர்ன் தியேட்டர்ஸின் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. ‘மாசிலா உண்மை காதலே’, ‘அழகான பொண்ணு நான்’ முதலிய வெற்றிப் பாடல்களை இந்தி மெட்டுக்களுக்கு அழகாக எழுதியவர் மருதகாசி. 

சிவாஜி கணேசன் நடித்த ‘உத்தமபுத்திர’னின் வெற்றிப் பாடல், ‘முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே’.

‘நான் மறைந்தாலும் இந்த பாடல் மறையாது’ என்று இசையமைப்பாளர் ராமநாதன் மதிப்பிட்ட இந்த கானடா ராகப் பாடலை எழுதியவரும் மருதகாசிதான். தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தடையின்றி செழித்த விவசாயத்தை நினைவுபடுத்தும் நாட்டுப்புறப் பாணிப் பாடல், ‘பொன்னு விளையிற பூமியடா’. 

கே.வி. மகாதேவனின் இசை பாணிக்கும், டி.எம்.எஸ்ஸின் வெண்கலக் குரலுக்கும், சிவாஜியின் நடிப்புக்கும் எடுத்துக்காட்டாக அமைந்த இந்த பாடலின் அருமையான வரிகளை எழுதியவரும் மருதகாசிதான்.  அவர் ஐம்பதுகளின் பாடல் மன்னன். ‘கோடி கோடி இன்பம் தரவே, தேடி வந்த செல்வம்’ என்று மங்கல வார்த்தைகள் பொங்கி வரும் தங்குதடையில்லாத இசைக்கவிஞர்.

புராணப் படங்கள் என்று எடுத்துக் கொண்டால், முன்னோடிப் படமான ‘சம்பூர்ண ராமாயண’த்தின் வெற்றிப் பாடல்கள் அனைத்தையும், யாரும் என்றும் மறக்க முடியாத, ‘ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே’ என்ற ‘லவகுசா’ பாடலையும் எழுதியவர் அவர்தான். 

இத்தகைய அருமையான, தமிழர்களுக்கு முக்கியமான ஒரு கவிஞரைப் பற்றி, அவருடைய தம்பியே  நூல் எழுதியிருப்பது இன்னொரு பெருமை. 

மருதகாசியின் கடைசி தம்பி பேராசிரியர் அ. முத்தையன், இளம் வயதில் தன்னுடைய அண்ணனுடன் சென்னையில் வசித்தவர். கல்லூரியில் படித்தபடியே, அண்ணனின் திரை உலக வாழ்க்கையைக் கவனித்தவர்.   

தாவரவியல் பேராசிரியராக ஓய்வு பெற்றபின், தனது அண்ணனின் திரை உலகப் பணியைப்  பற்றிய நினைவுகளை பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் முத்தையனுக்கு வந்துவிட்டது. குடும்பத்தைத் தாங்கிய அண்ணனுக்கு  நன்றிக்கடன் ஆற்ற வேண்டும்  என்ற எண்ணத்தின்  எதிரொலியாகவும் அவர் எழுதி வெளியிட்டிருக்கும் ‘மருதகாசியின் திரையுலகச் சாதனைகள்’ என்ற நூல் அமைந்திருக்கிறது.

மனதில் படுகிற கருத்துக்களைக் கூறிவிடுகிற ஒரு தன்மை முத்தையனுக்கு இருப்பதால், புத்தகத்தில் சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கவே செய்கின்றன.

‘மந்திரி குமாரி’யில், எருமை மீது அமர்ந்து மாஸ்டர் சுப்பையா பாடுகிற பாடல், ‘என் எருமைக் கன்னுக்குட்டி’. ‘ஊருக்கு உழைப்பவன்டி, ஒரு குற்றம் அறியான்டி உதைப்பட்டு சாவான்டி, என் எருமை கன்னுக்குட்டி’ என்ற இந்த பாடலில் அரசியல் நெடி தூக்கலாக இருக்கும். 

‘நாட்டுக்குத் தலைவன் என்று நம்பும்படி பேசிவிட்டு,  வேண செல்வம் வாரியே போவாரடி, நாடு செழிக்க எண்ணி  நாளெல்லாம் பாடுபடும், ஏழைக்குக் காலமில்லே, எவன் எவனோ வாழுகிறான்,’  என்று பாடலில் அரசியல் நெடி வீசுகிறது. ‘மந்திரிகுமாரி’யின் பாடல்களை மருதகாசியும் கா.மு. ஷெரீப்பும் எழுதினார்கள் என்றுதான் படத்தின் டைட்டில்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மேற்படி பாடலை எழுதியவர், படத்திற்கு வசனம் எழுதிய மு.கருணாநிதி என்பதுடன்,  “பெருந்தன்மை காரணமாக தன் பெயரைப் போட வேண்டாம், டைட்டிலில் மருதகாசி, ஷெரீப் என்றே போட்டுவிடுங்கள் என்றார்’’ என்று தெரிவிக்கிறார் முத்தையன்.

உடுமலை நாராயண கவிக்கும் மருதகாசிக்குமிடையே   தந்தை-–மகன் போன்ற உறவு இருந்ததாக முத்தையன் கூறுகிறார். ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்திற்குப் பாடல்கள் எழுத மாடர்ன் தியேட்டர்ஸில் உடுமலை நாராயண கவியை அழைத்தார்கள். ஆனால், பெருவாரியான பாடல்கள் இந்தி மெட்டுக்களுக்கு எழுத வேண்டும் என்றவுடன், மருதகாசியை உடன் அழைத்துச் சென்றார் உடுமலை. தோசைக்கல்லைப் போல் வட்டமாகவும் கறுப்பாகவும் உள்ள இசைத்தட்டுக்களை சுழல விட்டு அந்தப் பாடல்களின் மெட்டுக்கு பாடல் எழுதுவதை உடுமலையார் விரும்பவில்லை. தோசைக்கல் பாடல்கள் எழுதுவதில் மன்னரான மருதகாசிக்கு அந்த வேலையை விட்டுவிட்டார். இப்படித்தான் ‘தேகோ ஜி சாந்த் நிக்லா’ (பாருங்கள் நிலாவின் உதயம்) என்ற இந்தி வரிக்கு, ‘அழகான பொண்ணு நான்’ என்று எழுதினார் மருதகாசி. 

‘ஜிந்தகி தும் நஹி தோ ஜிந்தகி நஹி’ (நீ இல்லாத வாழ்க்கையோர் வாழ்க்கை ஆகுமா) என்பதை, ‘மாசிலா உண்மை காதலே, மாறுமோ துன்பம் வந்த போதிலே’ என ஆக்கினார் மருதகாசி.

‘சல்லோ சல்லோ சல்லே ஹம் பபூல் கே தலே’ என்பது ‘சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கற்கண்டே’ என்று மருதகாசியின் பேனாவிலிருந்து வரும் போது எப்படி இனிக்காமல் இருக்கும்? 

மருதகாசியின் எழுத்தில் தோசைக்கல் கூட வட்ட நிலாவாக மிளிர்வதைக்கண்டு உடுமலை சந்தோஷப்பட்டிருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதனும் மருதகாசியும் ஆரம்ப காலத்தில்  மிக நெருக்கமாகப் பழகியதை முத்தையன் குறிக்கிறார். ‘‘ஒரு காலகட்டத்தில் இவரை என் சகோதரன், தம்பி தம்பி என்று அன்போடு பழகியதைக் கண்டு இவரை சுவீகாரம் எடுத்துக் கொள்வாரோ என்று கூட நான் நினைத்ததுண்டு’’  என்கிறார் முத்தையன்.  ‘சுகம் எங்கே’, ‘பாசவலை’, ‘பக்த மார்க்கண்டேயா’, ‘குடும்ப கவுரவம்’, ‘தலைகொடுத்தான் தம்பி’, ‘தங்கப் பதுமை’, ‘பாகப்பிரிவினை’, ‘ராஜா மலையசிம்மன்’ உட்பட பல படங்களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையில் மருதகாசி பாடல்கள் எழுதினார். 

‘அன்பினாலே உண்டாகும் இன்ப நிலை’ (‘பாசவலை’), ‘என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்’ (‘தங்கப்பதுமை’), ‘ஒற்றுமையாய் வாழ்வதாலே’ (‘பாகப்பிரிவினை’), ‘ஆடாத மனமும் உண்டோ’ (‘மன்னாதி மன்னன்’) என்று பல பாடல்கள் வெற்றியும் அடைந்தன. 

ஆனால் திடீரென்று மருதகாசி– விஸ்வநாதன் உறவில் பிளவு வந்தது. ‘‘ஏன் என்பது இன்றுவரை எனக்குப் புரியாத புதிராக இருக்கிறது’’ என்று கூறும் முத்தையனை எதிர்கொள்ளும் அதைவிடப் பெரிய கேள்வி --- ‘எத்தனையோ மேடைகளில் எம்.எஸ்.வி. பங்கெடுத்துக் கொண்டு பேசினாரே, சகோதரனைப் போல் பழகிய மருதகாசியை ஒன்றில் கூட ஏன் நினைவுகூறவில்லை’’ என்பதுதான். ‘‘ஒரு சமயத்தில் என் சகோதரர் இல்லாமல் எம்.எஸ்.வி. இல்லை, எம்.எஸ்.வி. இல்லாமல் என் சகோதரர் இல்லை என்ற நிலை இருந்ததால்தான் நான் இதைக் குறிப்பிடுகிறேன்’’.

ஜி. ராமநாதன் இசையில் வந்த பல படங்கள், ஏ.பி. நாகராஜன் கதை,வசனம் எழுதிய பல படங்கள், மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த படங்கள் என்று ஐம்பதுகளில் மருதகாசி அமோகமாக கோலோச்சிக் கொண்டிருந்தார். 

ஒரு பக்கம் ‘வசந்த முல்லை போலே வந்து’ (‘சாரங்கதரா’) என்று சுகமான சாருகேசி ராகத்தில் நெஞ்சை அள்ளும் பாடல். இன்னொரு பக்கம் ‘சத்தியமே லட்சியமாய் கொள்ளடா’  என்று தேவர் படத்தில் லட்சியப் பிரகடனம். ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’  என்று மதுபோதையில்  வாழ்க்கைத் தத்துவம். ‘காவியமா நெஞ்சின் ஓவியமா’ என்று காதல் சிந்துவின் சிலம்பல்.

இப்படிப் பாட்டு வண்டி வானத்தில் பறந்து கொண்டிருந்தபோது, மருதகாசியை மண்ணுக்கு இழுத்து வந்து குழியில் தள்ள ஓர் ஆபத்து வந்தது! 

அதாவது, மருதகாசி தயாரிப்பாளர் ஆனார்!  அதுவும் நண்பர் ஏ.பி.நாகராஜனின் நிர்ப்பந்தத்தால். மருதகாசி இப்படி பலவந்தமாக தயாரிப்பாளர்  ஆன படத்தின் பெயர், ‘அல்லி பெற்ற பிள்ளை’. இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன், வயலின் மகாதேவன், வி.கே. முத்துராமலிங்கம் ஆகியோர் பாகஸ்தர்கள். ஆனால் படத்தை முடிக்க வருஷக்கணக்காகி, படமும் தோல்வி அடைந்ததால், பசையுள்ள கே.வி.மகாதேவனையும் மருதகாசியையும்  கடன்காரர்கள் மொய்த்தார்கள். மருதகாசியின் பாடு பெரும் பாடாகிவிட்டது. 

மருதகாசியைப் பொறுத்த வரை, பணம், நிம்மதி ஆகியவற்றுடன் திரை வாய்ப்புகள் கூட வறட்சி அடைந்தன. சொந்த கிராமத்திற்குச் செல்லும் முன், ‘ஆனாக்க அந்த மடம், ஆகாட்டி சந்தை மடம், அதுவும் கூட இல்லாகாட்டி, பிளாட்பாரம் சொந்த இடம்’ என்று ‘ஆயிரம்  ரூபாய்’  என்ற படத்திற்கு எழுதிவிட்டுச் சொன்றார்! 

சில ஆண்டுகள் ஓய்வுக்குப் பின், தேவரின் ‘தேர்த்திருவிழா’, ‘விவசாயி’, ‘துணைவன்’ முதலிய படங்களில் வெற்றிகரமாக இரண்டாவது அத்தியாயத்தை ஆரம்பித்தார் மருதகாசி. ‘நினைத்ததை முடிப்பவ’னில், ‘கண்ணை நம்பாதே’ பாடலை எம்.ஜி.ஆருக்காக எழுதினார். தன்னுடைய பாடல்களுக்கு எப்படிப்பட்ட சொற்கள் அமைய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிநுட்பத்தைக் கண்டு வியந்தார். ஆரம்பத்திலிருந்தே மருதகாசிக்கு உடுமலை நாராயண கவி மீது தந்தை போன்ற மரியாதை. மெட்டுக்குப் பாடல் எழுதுவதை விரும்பாத உடுமலை, பல கம்பெனிகளுக்கு மருதகாசியை சிபாரிசு செய்தார். கடைசியாக ‘தசாவதாரம்’  படத்தில் பாட்டெழுதும் பொறுப்பை மருதகாசியிடம் ஒப்படைத்தார்.

எண்பதுகளில், தனது படத்திற்கு பாட்டெழுதும்படி தயாரிப்பாளர் கோவைத்தம்பி மருதகாசியைக் கேட்டுக்கொண்டார். ‘எதற்கும் இளையராஜாவைக் கேட்டுவிடுங்கள். ஒப்புக்கொள்ளமாட்டார்’ என்றார் மருதகாசி. பிறகு, ‘நீங்கள் மனிதர்களை சரியாக எடை போட்டு வைத்திருக்கிறீர்கள்’’ என்று கோவைத்தம்பி சொன்னார். இப்படித் திரை உலகில் மருதகாசி சந்தித்த பல அனுபவங்களை, பொதுவாக ஒளிவுமறைவின்றி முன்வைத்திருக்கிறார், அண்ணனுக்கு ஏற்ற தம்பியான முத்தையன்.

(தொடரும்)