இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –19

பதிவு செய்த நாள்

26
செப்டம்பர் 2016

சாப்பாடு அமைதியாக நடந்து கொண்டிருந்தது. 'வேண்டாம்', 'போறும்' எல்லாவற்றிற்கும் சைகைகள்தான். 'பளிச் பளிச்' சென்று அவள் பாதம் மின்னி மின்னி நகர்ந்தது. தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தான் விஸ்வம். கை கழுவிக் கொண்டிருந்த போது, ''வெளியில் எங்கயாவது போகப் போறியா?'' என்ற பரசுவின் குரல் கேட்டது.

''இல்லை'' என்று தலையாட்டினான்.

''அப்ப கொஞ்ச நேரம் மாடிக்குப் போகலாமா?''

அவன் தன்னிடம் ஏதோ பேச விரும்புகிறான் என்பதை புரிந்து கொண்ட விஸ்வம், ''சரி'' என்றான்.

அவனும் கை கழுவிக்கொண்டு வந்ததும், இரண்டு பேரும் மாடிக்குப் போனார்கள். கைப்பிடிச் சுவரின் மீது உட்கார்ந்து கொண்டார்கள். வானத்தில் நட்சத்திரங்களாகப் பூத்திருந்தது. சிலுசிலுவென்று காற்று வீசியது. தென்னை ஓலைகளின் நுனி பளபளத்தது. இருவரும் பேசாமல் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தார்கள். பின்பு, பரசுதான் மெதுவாக பேச்சை ஆரம்பித்தான்.

''திடீர்னு இப்படி ஒரு ஆர்டர் வரும்னு நான் நினைக்கலை. உங்களையெல்லாம் விட்டுட்டுப் போறதுன்னா கஷ்டமா இருக்கு!''

விஸ்வம் அவன் முகத்தை பார்த்தான். அரை இருட்டில் அவன் கண்கள் பளிச்சிட்டன. குரல் கரகரவென்று வந்தது. தன்னைப் போலவே அவனும் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்டான் 'அமைதியாய் இரு! ' என்று அவன் கையைப் பற்றி அழுத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் மவுனமாக இருந்தான். அவன் ஒன்றும் பேசாமற்போகவே பரசு மறுபடியும் தானே பேச தொடங்கினான்.

''விஷயத்தைக் கேட்டதும் அப்பா ரொம்ப ஆடிப் போயிட்டார். இதை மாத்த முடியாதா, தள்ளிப் போட முடியாதான்னு ஏதேதோ கேட்டார். முடிஞ்சிருந்தா நான் செய்யாம இருந்திருப்பேனா?''

விஸ்வம் லேசாய் புன்னகை செய்தான். ''எங்களை விட அப்பாவுக்கு உன் மேல் நம்பிக்கை அதிகம், பரசு. அம்மாவுக்கு பின்னால் எல்லா பாரத்தையும் உன் மேல போட்டுட்டு ஈஸியா இருந்துண்டிருக்கார். நானோ, ராம்ஜியோ அத்தனை பொறுப்பு இல்லாதவர்கள்னு அவர் அபிப்பிராயம் அதுல தப்பு ஒண்ணும் இல்ல.''

''அப்படி இல்ல விஸ்வம். பொறுப்புன்றது தானே வந்துடறது இல்லே. மாடுகளை ஓட்டி வண்டியில பூட்டினாத்தான் பாரத்தை இழுக்கிறதே தவிர, தானா ஓடிவந்து தாங்கிக்கிறதில்லை. அந்த மாதிரிதான் நாமும்! சுமத்தினாத்தான் தாங்கிக்கிறோம்.''

''அதுலயும் ரெண்டு விதம் இருக்கு, பரசு. சுமத்தினதை சந்தோஷமாகவே ஏத்துக்கறது ஒண்ணு. வெறுத்துண்டே சகிச்சுக்கிறது இன்னொன்ணு. நாங்க ரெண்டாவது விதம்.''

பரசு இருட்டைப் பார்த்துக் கொண்டு ஒரு நிமிஷம் பேசாமல் இருந்தான். பின், கனமான ஒரு பெருமூச்சு வெளிப்பட்டது.

''உண்மைதான், விஸ்வம்! உங்க ரெண்டு பேரின் கழுத்துலயும் இந்த மாதிரி நுகத்தடி எதையும் பூட்டிடக் கூடாதுன்னு நான் ரொம்ப ஜாக்கிரதையாயிருந்தேன். உங்க இஷ்டப்படியெல்லாம் விட்டுடணும் உங்க மனசுல எந்தச் சிணுக்கமும் வராமப் பார்த்துக்கணும் எல்லாத்தையும் நானே தாங்கிண்டுடணும்னு நினைச்சேன்!''

''இடிதாங்கியா இருந்துடணும்னு பார்த்தியா?'' என்று மெதுவாகச் சிரித்தான் விஸ்வம். அந்த சிரிப்பின் அடியில் சொல்ல முடியாத சோகம் ஒன்று தலைகாட்டியது.

''இடிதாங்கியோ, என்னவோ...! எதுவானாலும் நான் தோத்துப் போயிட்டேன்.''

சட்டென்று கை நீட்டி அவன் கையைப் பற்றி அழுத்தினான் விஸ்வம். ''இப்போ என்ன ஆயிடுத்து, பரசு? எதுக்கு இப்படி மனசைப் போட்டு அலட்டிக்கிறே?''

''இல்ல, விஸ்வம். நம்ம எல்லோருக்கும் எத்தனையோ ஆசை இருக்கு. எப்படியெல்லாமோ இருக்கணும்னு நினைக்கறோம். ஆனா எது எதுவோ நடந்து போயிடறது. இதையெல்லாம் பார்க்கறப்போ பலமான ஏதோ ஒண்ணு நம்மை நடத்திண்டு போறதுன்னு தெரியறது. அது வழியில நாம போய்த்தான் ஆகணும்னு புரியறது!''

''.... ......... .........''

''நான் படிக்கணும்னு ஆசைப்பட்டேன். நடக்கலை. நிறையச் சம்பாதிக்கணும்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை, கல்யாணம் பண்ணிப்பேன்னு நினைக்கக்கூட இல்லை. ஆனா அது நடந்து போச்சு!''

''அதுக்காக இப்ப கஷ்டப்படறியா என்ன?''

''இல்லை. ஆனா மத்தவங்களைக் கஷ்டப்படுத்தறேனோன்னு தோணறது.''

''மத்தவங்கன்னு யாரைச் சொல்றே?''

''உனக்கு நிஜமாவே புரியலையா, விஸ்வம்?''

விஸ்வம் பதில் சொல்ல முடியாமல் மவுனமானான்.

''அவளைப் பார்க்கறியே விஸ்வம், அவ எனக்கு ஏத்தவதானா சொல்லேன்?''

''என்ன பேசறே நீ! அதுக்காக வருத்தப்படற மாதிரி ருக்கு மன்னி மூஞ்சி என்னிக்காவது மாறி இருக்கா? அநாவசியமா எது எதையோ இழுத்துப் போட்டுண்டு ஏன் சங்கடப்படறே?''

பரசு வேதனையாக சிரித்தான். ''அவ மூஞ்சி எதுக்கும் மாறாது. அவ எங்கேயோ இருக்க வேயண்டியவ. எப்படியோ இருக்க வேண்டியவ. அந்த அழகும், குணமும்.... இந்த அளவு அதிர்ஷ்டத்துக்கு என்கிட்ட என்ன இருக்கு...?''

விஸ்வத்துக்குத் தொண்டையை அடைத்தது. மனசில் ஏதோ கரைந்து நழுவுகிற மாதிரி இருந்தது. 'உள்ளுக்குள்ளேயே இவ்வளவு மருகுகிறானோ இவன்! இவனைப்பற்றி நினைத்ததெல்லாம் எவ்வளவு தவறு! இவனை விட மனசில் உயர்ந்து ருக்மிணிக்கு வேறு யார் கிடைத்திருக்க முடியும்? பரசு, எப்படிப்பட்ட மனுஷன் நீ!' – அவனை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

''இந்த மனசு இருக்கே தங்கமான மனசு. இதை விட வறே என்ன வேணும்? இது எத்தனை பேர் கிட்ட இருக்கு...!'' என்று மறுபடியும் பரசுவின் கையைப் பற்றி அழுத்தினான். அந்த ஸ்பரிசத்தின் வழியாக எது எதையோ உணர்த்திவிடத் தவித்தான்.

அதைக் கேட்டுச் சங்கடப்பட்ட மாதிரி சிறிது நெளிந்தான் பரசு. ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருந்தான். எங்கோ வேகமாக ஒரு கார் ஹாரன் அடித்துக் கொண்டு போவது கேட்டது. பின்கட்டிலிருந்து பம்ப் அடிக்கிற சத்தம் வந்தது. அது ஓய்ந்ததும் சற்றுப் பொறுத்து மெதுவாகக் கேட்டான் விஸ்வம் :

''இப்படிவே கூட்டிண்டு போகப் போறியா?''

''யாரை?'' என்று திரும்பினான் பரசு.

''மன்னியை''

''இல்லே, முதல்ல நான் மட்டும்தான் போறேன். வீடு பார்த்ததுக்கு அப்புறம் தான் அவளை அழைச்சிண்டு போகணும். அநேகமா எனக்கு லீவு கிடைக்காது. நீங்க யாராவதுதான் அவளைக் கொண்டுவிட வேண்டியிருக்கும்!'' என்று சிறிது தயங்கின மாதிரி இருந்த பரசு, ''அப்பா உன்கிட்ட ஏதேதோ சொல்லச் சொன்னார். உனக்கு அந்தப் புத்திமதியெல்லாம் தேவை இல்லேங்கிறது அப்புவுக்கு தெரியலை. அவர் அப்படித்தான் இருப்பார். ஒருவேளை அவர் வயசுல நாமும் இப்படித்தான் இருப்பமோ என்னவோ...? நீதான் அவரை புரிஞ்சுக்கணும் விஸ்வம். எது சொன்னாலும் விட்டுக் கொடுத்து நடந்துக்கணும்!''

''... ... ...''

''நீ புத்திசாலி. உனக்கு நான் நிறைய சொல்ல வேணாம். உனக்கே எல்லாம் தெரியும். இருந்தாலும் எனக்கு தோணறதைச் சொல்லலாம்னு நினைக்கிறேன்.''

''தாராளமா சொல்லு. பரசு.... தயங்காம சொல்லு...''

''வரதராஜன் நிச்சயமா உனக்கு இந்த வேலை கிடைச்சுடும்னு சொல்லி இருக்காராம். உனக்கு பிடிக்கலைன்னாலும் ஏத்துண்டுதான் ஆகணும். வேற வழி இல்லே, விஸ்வம். என் ஒருத்தனோட சம்பளத்துல ரெண்டு இடத்துலயும் குடும்பம் நடத்த முடியாது. அதனால் எல்லாரையும் அழைச்சுண்டு, அப்பாவை அங்யே வந்துடச் சொல்லிக் கூப்பிட்டேன். முடியாதுன்னு சொல்லிட்டார். அவரை வற்புறுத்த முடியாது. இங்கேயே இருக்கணும்னு நினைக்கிறதுக்கு நிறைய காரணம் இருக்கும். பரோடாவுக்குப் போன பின்னால் எவ்வளவு பணம் என்னால் அனுப்ப முடியும்னு தெரியலை!''

''பரசு!'' என்று குரல் நடுங்கக் கூப்பிட்டான் விஸ்வம். ''ப்ளீஸ், நீ எதுவும் அனுப்ப வேணாம். கொஞ்சநாளாவது நிம்மதியா இரு. மன்னியை சந்தோஷமா வச்சுக்கோ. ரொம்ப நாளா  உன்கிட்ட நான் 

ஒண்ணு சொல்லணும்னு நினைக்கிறேன்.''

''சொல்லு விஸ்வம்!''

''ருக்... பரவாயில்லை. ருக்மிணின்னே சொல்றேன். அதுதான் எனக்கு ஈஸியா வரது. நீ தப்பா எடுது்துக்க மாட்டேன்னு தெரியும். அவளை மாதிரி லட்சத்துல ஒருத்தி கூட கிடைக்கமாட்டா. அவளை சந்தோஷப்படுத்து. நம்ம வீட்டுக்கு வந்து வேலையைத் தவிர அவ ஒண்ணையும் பார்த்ததில்லை. அதற்காக அவ முகம் சிணுங்கினதும் கூடக் கிடையாது. எப்பப் பார்த்தாலும் ஒரு சிரிப்பு, பரசு. ப்ளீஸ்! அவ மனசையும் கொஞ்சம் புரிஞ்சுக்கோ. இப்படித் தகுதி இல்லேன்னு நினைச்சுண்டு நீயா தள்ளி நின்னுடாதே. கொஞ்ச முன்னால நீ தானே சொன்னே, பலமா ஏதோ ஒரு சக்தி நம்மை நடத்திண்டு போறதுன்னு...? அந்த சக்திதான் அவளை உன்கிட்ட ஒப்படைச்சிருக்கு. அதுக்கு தெரியும், யாரை யார் கிட்ட கொடுக்கறதுன்னு.... உன் விஷயத்துல மட்டும் அது தப்பு பண்ணியிருக்கும்னு நினைக்கிறியா...?''

அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் பரசு. ஏதோ பளிச்சென்று புரிந்த மாதிரி இருந்தது. கண் ஓரம் நனைந்தது. வார்த்தை எழும்ப மறுத்தது.

''என்ன அப்படிப் பார்க்கறே?''

''ஒண்ணும் இல்லே, எவ்வளவு அழகா பேசுற நீ!''

''இதுல அழகு ஒண்ணும் இல்ல. உண்மையைத்தான் சொல்றேன். ஒரு வேளை உண்மைக்கு இருக்கிற அழகு என் வார்த்தைக்கு வந்திருக்கும்! நான் பெரிசா ஒண்ணும் சொல்லிடலே. உன்னை சந்தோஷமா இருக்கச் சொல்றேன். அவளையும் சந்தோஷப்படுத்தச் சொல்றேன். நாங்கள்ளாம் இரண்டாம் பட்சந்தான். எங்களைப் பத்தி கவலைப்படாதே!''

''நான் அந்த வேலையை உதறிட மாட்டேன்னு அப்பாகிட்ட சொல்லு. உன் ஸ்தானத்துக்கு எனக்கு முழுத் தகுதி இல்லேன்னாலும் ஓரளவாவது என்னை அதுல பொருத்திருப்பேன். பொருத்திண்டே ஆகணும். நீ சொன்ன மாதிரி வேற வழி இல்லே.'' – அவன் முடித்த போது குரல் கம்மிப் போய் இருந்தது. கண் ஓரம் பளபளத்தது. உதட்டைக் கடித்துக் கொண்டு பேசாமல் இருந்தான்.

மனசுக்குள் அந்த ஆபீஸ். ஒரு தரம் வந்து போயிற்று. ஒரு சின்ன 

மேஜை, பைல்கள், லெட்ஜர்கள், டெலிபோன் கால்கள், எண்கள், எண்கள், எண்கள்!...

உடம்பை ஒரு தரம் உதறிக்கொண்டான். மெதுவாக நிமிர்ந்து வானத்தை பார்த்தான். துாரத்தில் விமானம் ஒன்று சிவப்பு விளக்கு பளிச்சிட வட்டமடித்தது. கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே 

இறங்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் அது மீனம்பாக்கத்தில் தரையில் இறங்கிவிடும். பின், மூச்சு இரைக்கப் பிடிவாதமாகக் கொஞ்ச துாரம் ஓடும். கடைசியில் நின்று போய்விடும்...!

விஸ்வத்தின் அடிவயிற்றிலிருந்து ஒரு பெருமூச்சு எழும்பித் தணிந்தது.

(தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்