இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –18

பதிவு செய்த நாள்

19
செப்டம்பர் 2016

பஸ்ஸை விட்டு இறங்கி நேராக ராமகிருஷ்ணன் வீட்டுக்குப் போனான் விஸ்வம். ஏதோ படித்துக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் இவனை பார்த்ததும் புத்தகத்தை மூடி மேஜை மீது வைத்தான். அறையின் மூலையில் இருந்த மண் ஜாடியிலிருந்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் குடித்தான் விஸ்வம். பின், ''ஸ்... அப்பாடா!'' என்று சொல்லிக் கொண்டே வந்து கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்தான். கால் செருப்பிலிருந்து கழன்றது. கை, பித்தானைக் கழற்றிச் சட்டையின் காலரை பின்னுக்கு தள்ளியது. ராமகிருஷ்ணன் எழுந்து போய் பேனைச் சுழலவிட்டு வந்து, அவன் பக்கத்தில் கட்டிலில் உட்கார்ந்து கொண்டான்.

''ரிகார்டிங் முடிய இத்தனை நேரமா ஆச்சு?'' என்று கேட்டான்.

''ரிகார்ட் பண்ணவே இல்லை!''

''பண்ணலையா? ஏன்?''

எல்லாவற்றையும் சொன்னான் விஸ்வம். கேட்டுக் கொண்டு வந்த ராமகிருஷ்ணனின் முகத்தில் கோபம் துறுதுறுத்தது.

''இன்னும் நிலவையும் பெண்களின் முகத்தையும் பண்டிகைகளையும் வைத்து நர்ஸரி ரைம் மாதிரி எழுதற கவிதைகள் தான் தேவையாக இருக்கும் போல் இருக்கு! நீ இப்படி ஸ்கிரிப்டை வாங்கிண்டு பேசாமல் வந்திருக்கக் கூடாது, விஸ்வம்.''

''என்ன பண்ணச் சொல்றே? சண்டை போடச் சொல்றியா?'' என்று கசந்து போய் கேட்டான் விஸ்வம்.

''என்ன இப்படி அலுத்துப் போய் பேசறே?''

''காலைலேர்ந்து எல்லாம் ஒரே அலுப்பாகத்தான் இருக்கு!'' என்று சொல்லிவிட்டுத் தலையைக் குனிந்து கொண்டான் விஸ்வம்.

''எதுக்கு?'' என்ற ஜமுனாவின் கேள்வி மறுபடியும் மனசை அறைகிற மாதிரி இருந்தது. கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தான். ராமகிருஷ்ணனும் மேலே எதுவும் கேட்கவில்லை. மவுனமாய் காலின் கட்டை விரல் நகத்தை கிள்ளிக் கொண்டிருந்தான். சில விநாடிகளுக்கு ''விர் விர்'' என்ற பேன் சுற்றுகிற சத்தம் மட்டும் கேட்டது. கடைசியில் விஸ்வம்தான் பேசினான்.

''இன்னிக்கு என்ன தபால் வந்தது?'' என்று கேட்டான்.

ராமகிருஷ்ணன் எழுந்து போய் மேஜை மீதிருந்து நாலைந்து கதைகளை எடுத்துக் கொடுத்தான். கவிதை எதுவும் வராததை தெரிவித்தான். திருநெல்வேலியிலிருந்து நண்பன் ஒருவன் எழுதியிருந்த கடிதத்தை படித்துக் காட்டினான். பத்திரிகைக்கு உபயோகமான சில விஷயங்களை சொல்லியிருந்தான் அந்த நண்பன். பின் காலையில் தான் அச்சாபீசுக்கு போய்வந்த விபரத்தை தெரிவித்தான்.

''ப்ரூப் எல்லாம் சரி பார்த்தாச்சு, விஸ்வம். இன்னும் நாலு நாள்லே பத்திரிகையை கொடுத்துடறேன்னான். ரேப்பர் ரோம்ப நன்னா வந்திருக்கு. முதல்ல ஐந்நுாறு காப்பி போடச் சொல்லியிருக்கேன். அது போகட்டும். பின்னால பார்த்துக்கலாம்.''

''சரி, பத்திரிகையை எப்போ, எப்படி வெளியிடறதுன்னு இன்னும் தீர்மானம் பண்ணலையே?''

''எல்லாரையும் மாதிரி நாமும் வெளியீட்டு விழா நடத்தணுமா என்ன?''

''நான் அதை 'மீன்' பண்ணிச் சொல்லலே. நம்ம பத்திரிகை வர்ற விஷயம் எல்லாருக்கும் தெரிய வேணாமா?''

''தெரியணுந்தான்...!'' என்று இழுத்து விட்டுப் பேசாமல் இருந்தான் ராமகிருஷ்ணன்.

''ஒண்ணு செய்யலாம்னு எனக்கு தோணறது.''

''என்ன?''

''இன்னும் நாலு நாள்லே பத்திரிகை வர்றதானா, வர ஞாயிற்றுக்கிழமை நடக்கப் போற இலக்கியக் கூட்டத்துலே எல்லாருக்கும் டிஸ்டிரிப்யூட் பண்ணினால் என்ன?''

ஒரு நிமிஷம் யோசித்துப் பின், ''தட்ஸ் எ குட் ஐடியா!'' என்றான் ராமகிருஷ்ணன். ''நாளைக்கு மத்தவங்களையெல்லாம் வரவழைச்சு இதைப்பத்தி டிஸ்கஸ் பண்ணிடலாம்!''

''சரி, ராஜாராம்கிட்டேய।ம், மூர்த்திக்கும் போன் பண்ணிச் சொல்லிடு. பத்ரியைப் பார்த்து நான் சொல்லிடறேன். அப்புறம் வேற என்ன இருக்கு?''

''வேற ஒண்ணுமில்ல. இந்த கதைகளை நீ இன்னிக்கு படிக்கக் கொண்டு போ. ஒண்ணாவது அடுத்த இஷ்யூவுக்கு தேறுமா பாரு.''

அவற்றை வாங்கி கொண்டு எழுந்து நின்றான் விஸ்வம். செருப்பில் கால் நுழைந்து கொண்டது.

''அப்ப நான் கிளம்பட்டுமா?'' என்று கேட்டான்.

''ஓ.கே.! நாளை சாயந்தரம் இங்கே வந்துடு. நான் கிளாஸை முடிச்சுண்டு நேரே வரேன்.''

''சரி.''

படி இறங்கின போது ராமகிருஷ்ணன் மாதிரி ஒரு நல்ல நண்பன் இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான். இந்த பத்திரிகைக்கான முக்கால் வாசி பணமும் அவனுடையதுதான். ஒரு 'லிட்டில் மாகஸீன்' ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது இவன்தான். உடனே அதை செயல்படுத்த துணிந்தான் ராமகிருஷ்ணன். இதற்காக தன் கை செலவை, அநாவசிய தேவைகளை குறைத்துக் கொண்டு, வீட்டிலும் திட்டு கேட்டுக் கொண்டு, ஒரு தரம் இவன் போன போது அவனுடைய அம்மா நேரிலேயே சொல்லிவிட்டாள்.

''இப்ப எதுக்கு கதைய।ம் பத்திரிகையும்? முதல்ல அவன் படிச்சு பாஸாகட்டும்! சொந்தமா சம்பாதிக்க ஆரம்பிச்சு நன்னா காலை ஊனி நிற்க தெரிஞ்சுண்டப்ப।றம் என்ன வேணும்னா செய்யுங்களேன். அப்ப யாரு கேட்க போறா?''

ராமகிருஷ்ணன் கேட்கவில்லை. வீட்டில் உள்ள அத்தனை பேர் விருப்பத்தைய।ம் மீறி இதில் பிரவேசித்திருக்கிறான்.

''நீ என்ன வேணும்னாலும் செய். ஆனா படிப்பை மறந்துடாதே! அதுதான் முக்கியம். பாஸாகத் தவறிடக் கூடாது!'' என்றாராம் அவனது அப்பா. பாஸ் ஆகி காட்டுவதாக வாக்கு கொடுத்திருக்கிறான். அவன் பாஸாகி விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே நடந்தான் விஸ்வம்.

டி.யூ.ஸி. எஸ்ஸையும், மாவு மெஷினின் இரைச்சலையும் கடந்து திரும்பின உடனே சட்டென்று ஒரு மாறுதல் தெரிந்தது. இருபது வருஷமாய் பார்க்கிற தெருதான் ஆனாலும் ஒவ்வொரு நாளும் புதுசாய்த் தெரிந்தது. பூவசரசும் முரங்கையும் சலசலத்தன. பாண்டி கட்டம் கீறிச் சின்னப் பெண்களாக நாலைந்து குதித்துக் கொண்டிருந்தன. பாவாடை தடுக்க கண்ணை மூடிக்கொண்டு ஒன்று தலையில் ஓட்டுச் சில்லுடன் கட்டத்தை கடந்து, ''ரைட்டா?'' என்று கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் பையன்கள் கில்லி விளையாடுகிற சத்தம் காதைப் பிளந்தது. அதையும் மீறிக் 'கிணிங் கிணிங்' என்று தெருக்கோடி பிள்ளையார் கோவிலின் மணி சத்தம் கேட்டது.

படியேறினதும் தாழ்வாரத்தில் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருந்த சைக்கிளை பார்த்தான் விஸ்வம். 'பரசு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டானா!' என்று நினைத்துக் கொண்டான். நடையில் செருப்பைக் கழற்றிவிட்டு உள்ளே நுழைந்த போது வீடு அமைதியாக இருந்தது. அந்த அமைதியில் ஓர் அசாதாரணத் தன்மை இருப்பதாகப் பட்டது. கூடத்தில் அப்பா ஈஸிசேரில் சாய்ந்து கொண்டிருந்தார். பரசு எதிரில் தரையில் உட்கார்ந்திருந்தான். அகிலாவும் ருக்மிணியும் சமையலறை வாசலில் சுவரில் உடம்பை சரித்து நின்று கொண்டிருந்தார்கள். அவன் போனபோது யாரும் எதுவும் பேசவில்லை. தீவிரமாக எதையோ யோசிக்கிற நிலையில் இருந்தார்கள். கனமான ஒன்று அவர்களை அழுத்திக் கொண்டிருப்பதாக உணர்ந்தான் விஸ்வம். ஆனாலும், எதுவும் கேட்கவில்லை. முற்றத்தில் கால் அலம்பிக் கொண்டு அறைக்குப் போக திரும்பின போது அப்பா அவனை கூப்பிட்டார்.

''இப்படித்தான் வந்து உட்காரேன்.''

''இதோ, இதை உள்ளே வச்சுட்டு வந்துடறேன்.''

''என்ன அதெல்லாம்?''

கொஞ்சம் தயங்கிவிட்டு ''கதைகள்!'' என்றான்.

அப்பாவின் நெற்றி சுருங்குவதை கவனித்துக் கொண்டே உள்ளே போனான். கதைகளை மேஜை மேல் வைத்துவிட்டு உடைமாற்றிக் கொண்டான். அகிலா காபி கொண்டு வந்தாள். அவளிடம் என்ன விஷயம் என்பதை கேட்கலாமா என்று நினைத்தான். ஆனால் கேட்கவில்லை. அவளும் ஒன்றும் சொல்லாமல் காலி டம்ளரையும், டபராவையும் எடுத்துக் கொண்டு போனாள். தலையை வாரிக் கொண்டு, அவள் பின்னாலேயே கூடத்துக்கு வந்தான்.

அப்பா உட்காரச் சொல்லி சைகை காட்டினார். பரசுவுக்கு பக்கத்திலேயே சுவரில் சாய்ந்து வசதியாக உட்கார்ந்து கொண்டான். அப்போதும் யாரும் எதுவும் பேசவில்லை. முற்றத்தின் வழியாக அறைக்குள் இன்னும் வெளிச்சம் விழுந்து கொண்டிருந்தது. ஸ்வாமி அலமாரியில் ஏற்றி வைத்த தீபத்தின் சுடர் அசைவதைப் பார்த்துக் கொண்டு விஸ்வமும் பேசாமல் இருந்தான் சில நிமிஷங்களுக்கு பின், தேடிக்கொண்டிருந்த 'ஆரம்பம்' கிடைத்த மாதிரி அப்பாதான் பேச்சை துவக்கினார்.

''இனிமேலயும் இந்த மாதிரி நீ கதை கவிதைன்னு அலைஞ்சுண்டு இருக்க முடியாது, விஸ்வம். பொறுப்பை ஏத்துக்க பயந்துண்டு ஒதுங்கிப் போயிண்டிருக்க முடியாது!''

''அப்பா...!'' என்று குறுக்கிட்டான் அவன். என்ன என்கிறாற் போல் பார்த்தார் அவர்.

''எனக்கு எந்த பயமும் இல்லை'' என்றான் உறுதியான குரலில்.

''பயந்தான்!'' என்று மறுத்தார் அவர். ''வேலை செய்ய பயம். வாழ்க்கையை அதன் போக்குல அநுசரிக்க பயம். குடும்ப பாரத்தை ஏத்துக்க பயம். அதனால் தான் இப்படியெல்லாம் பேசிண்டு, சுத்திண்டிருக்கே. இதையெல்லாம் ஒரு பந்தயம் மாதிரி எடுத்துக்க உன்னால முடியல. எல்லாத்தையும் விட்டுத் தள்ளி நிற்க பார்க்கிறே. அது வசதியானதுதான், விஸ்வம்! ஆனா எத்தனை நாளைக்குத்தான் இப்படி தப்பிச்சுக்க முடியும்?''

''இல்லை. நான் எதிலிருந்தும் தப்பிச்சுக்கப் பார்க்கலை. இதெல்லாம் எஸ்கேப்பிஸம்னு நீங்க நினைச்சா, அது சரி இல்லை!''

''சரி, உன் பாஷைல இது ஹிப்பியிஸம். அப்படியே வச்சுக்கோ. அது எதனால வந்தது? எதைய।ம் எதிர் நோக்கற சக்தி இல்லாம எல்லாத்தையும் விட்டுட்டு தப்பிச்சுக்க பார்க்கிறதனாலே தானே வந்தது?''

''அதற்கு அப்படி அர்த்தம் இல்லை, அப்பா! நீங்க சொல்றது தப்பு!''

''சரி. தப்புன்னே இருக்கட்டும். இப்ப இதை பத்தியெல்லாம் ஆர்க்யூ பண்ற சக்தி என்கிட்ட இல்லை. நான் சொல்ல வந்த விஷயமே வேற. அதை விட்டுட்டு இதெல்லாம் என்னத்துக்கு?''

விஸ்வத்தின் குரலும் இறங்கி வந்தது. ''சொல்லுங்கள்,'' என்றான் நிதானமாக.

''பரசுவுக்கு டிரான்ஸ்பர் ஆர்டர் வந்திருக்கு!''

விஸ்வம் சட்டென்று திரும்பிப் பரசுவை பார்த்தான். உண்மையா என்று கேட்கிற மாதிரி கண் அகன்றது. பரசு 'ஆமாம்' என்று தலையாட்டினபோது, விஸ்வத்தின் முகம் வேதனையில் நனைந்தது. ஒரு நிமிஷம் பசே முடியாமல் போயிற்று. 'இந்த நாளுக்கு என்ன வந்துவிட்டது? அது ஏன் இப்படி கஷ்டப்படுத்துகிறது? படிப்படியாய்ச் சரிந்து விழுகிற மாதிரி ஒன்றன்மேல் ஒன்றாக என்ன இது? இதையேல்லாம் எப்படி தாங்குவது? பரசு, எங்கே போகப் போகிறாய் நீ?'

சிறிது நேரம் கழித்து ''எங்கே?'' என்று கேட்டான்.

''பரோடா!''

''எப்போ போகணும்?''

''இன்னும் பத்து நாளைக்குள்ள 'ஜாயின்' பண்ணியாகணும்.''

''பத்து நாளைக்குள்ளேயா?''

பரசுவின் தலை ஆடியது.

அதன் பின் மவுனமாகி விட்டான் விஸ்வம். மனசை பாரமாக ஏதோ அழுத்திக் கொண்டிருந்தது. சொல்லத் தெரியாமல் ஒரு வேதனை. பரசுவிடம் அதிகம் பேசாமல் போனாலும் மவுனமாகவே மனசை நெருங்கிவிட்டான் அவன். கதவை தட்டி உள்ளே நுழைகிற மாதிரி நுழைந்து கொண்டு விட்டான். ரிஸல்ட் வந்த அன்று, மேலே படிக்கிறாயா என்று அவன் வந்து கேட்டதிலிருந்து இரண்டு பேருக்கும் இடையே ஒரு பாலம் ஏற்பட்டிருந்தது. அதன் வழியாக விஸ்வம் அடிக்கடி அவனிடம் நடந்து போக ஆரம்பித்திருந்தான். அவனைப் பற்றி நிறைய நினைத்துப் பார்த்திருக்கிறான். குடும்பம் என்ற இயந்திரத்திற்கு ஏன் இப்படி தீனியாய் அரைபட்டுச் சாகிறான் என்று பரிதாபப் பட்டிருக்கிறான். அந்தப் பரிதாபத்திற்கிடையில் அவனிடம் ஒரு மரியாதையும் உருவாகி இருந்தது. இப்போது பத்து நாளில் அவன் பிரிந்து போகப் போவதாய் சொன்னதும் ஏதோ ஒன்று சுழன்று விழுகிற மாதிரி இருந்தது.

முற்றத்து வழியாக வானத்தில் தெரிந்த நட்சத்திரங்களை வெறித்துக் கொண்டிருந்தான். எந்தச் சத்தமும் காதில் விழாத மாதிரி இருந்தது. திடீரென்று ருக்மிணியின் ஞாபகம் வந்தது. அவளும் போய்விடுவாள் என்ற உண்மை தாக்கின போது, இன்னும் அதிர்ந்து போனான்.

''ருக்மிணி, நீயுமா போகப் போகிறாய்?''

அதன் பின் அந்த வீடு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தான். சரேலென்று விளக்கை அணைத்த மாதிரி இருண்டு போகும். உதட்டில் சிரிப்போடு அவளே ஒரு சின்ன விளக்காகத்தான் நடமாடிக் கொண்டிருந்தாள். பரசு அந்த விளக்கையும் எடுத்துக் கொண்டு போய்விடுவான். அவள் வீணை வாசிப்பது. அதிராமல் நடப்பது, நிதானமாய் சாதம் போடுவது, கதைகளை படித்து விமர்சிப்பது, காரை பெயர்த்த சுவரை, வாசலில் போகிற வண்டிகளை ரசிப்பது...

'பரசு, ப்ளீஸ்! போகாதேயேன்...!' என்று கெஞ்ச வேண்டும் போலிருந்தது. ஆனால், வாய் இறுக மூடிக் கொண்டுவிட்டது.

(தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்