சினிமா நட்சத்திரங்களை இழுக்கும் பணியில் நக்மா: காங்கிரஸ் அசைமண்ட்

பதிவு செய்த நாள்

20
அக்டோபர் 2015
02:33


சென்னை, அக்.20–

மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நக்மாவிற்கு, காங்கிரஸ் மேலிடம் ஸ்பெஷல் அசைமண்ட் வழங்கியுள்ளது, இதன் மூலம் தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் ஆதரிக்கும் முயற்சியில் நக்மா இறங்கியுள்ளார்.

அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை நக்மா கடந்த 16–ந்தேதி சென்னை வந்தார். இதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி சத்திய மூர்த்தி பவனில் நிருபர்களை சந்திக்க போவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அவர் சத்தியமூர்த்தி பவன் வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் நாளை மறுநாள் 22-ம் தேதி நக்மாவை சத்தியமூர்த்தி பவனுக்கு அழைத்து வரவேற்க தமிழக மகிளா காங்கிரஸ் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதாரணி கூறியதாவது:– நான் கடந்த 4–ந்தேதி முதல் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். நக்மா வந்த அன்று சென்னையில் இல்லாததால் வரவேற்க செல்ல முடியவில்லை. ஆனால் நிர்வாகிகளை அனுப்பி இருந்தேன். 22–ந்தேதி விஜயதசமி அன்று சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. விழாவுக்கு, நக்மா, குஷ்பு ஆகியோரை அழைத்துள்ளோம். விழாவில் நேருவின் 125–வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவு கடிதம் வெளியீட்டு விழாவும் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 16-ம் தேதி சென்னை வருகை தந்த நக்மா நேற்று முன்தினம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வாக்களித்தார். தற்போது காங்கிரஸ் மேலிடம் நக்மாவிற்கு ஸ்பெஷல் அசைமண்ட் கொடுத்துள்ளது, அதன்படி தமிழ் சினிமா நட்சத்திரங்களை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதிமுக மீது அதிருப்தியில் உள்ள சரத்குமார் திமுக பக்கம் போகமுடியாத நிலை உள்ளதால், காங்கிரஸை சரத்குமார் ஆதாரிக்க வைப்பது.

இதேபோன்று தனது தங்கை ஜோதிகாவின் கணவர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, அப்பா சிவகுமார் ஆகியாரை காங்கிரசை ஆதரிக்க செய்யும் முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளார். இதற்காக கடந்த 2 தினங்களாக திநகர் ஜோதி வீட்டில் நக்மா முகாமிட்டுள்ளார். இதே போன்று நடிகர் சங்க தேர்தலில் தோல்வி அடைந்த சரத்குமாரையும் நேற்று நக்மா சந்தித்து பேசியுள்ளார். அவரின் மூலம் சில நடிகர்களையும் காங்கிரஸை ஆதரிக்க முயற்சியில் நக்மா ஈடுபட்டுள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.