இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ – தொடர்கதை –17

பதிவு செய்த நாள்

12
செப்டம்பர் 2016

உச்சி வெயில். வானொலி நிலையக் கட்டடத்தை விட்டு வெளியில் வந்தான் விஸ்வம். ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாய் ஏர்கண்டிஷன் அறையில் இருந்துவிட்டு வந்ததில் வெளி வெயில் அதிகமாய்த் தெரிந்தது. முகத்தில் வியர்வையாய் வழிந்தது. கர்ச்சீப்பை எடுத்துத் துடைத்துக் கொண்டு பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றான். துாரத்துக் கானலில் தார் ரோடு பளபளத்தது. நீலத் தகடாக அலைகளே இல்லாதது போல் கடல் சலனமற்றுத் தெரிந்தது. புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த லைட் ஹவுஸ் கட்டடத்தில் நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கலவை இயந்திரம் ஒன்றும் சத்தப்படுத்திக் கொண்டிருந்தது. மிகவும் புழுக்கமாய் உணர்ந்தான் அவன். முகத்தில் குளிர்ச்சியாய் வந்து மோதி, தலைமயிரைக் கலைத்துப் போகும் காற்று இன்று இல்லை. மரங்கள் எல்லாம் எதற்கோ கோபமாய் முகத்தைத் திருப்பிக் கொண்ருக்கிற மாதிரி அசைவில்லாமல் நின்றன.

தம்பூரா, மிருதங்கம் இவற்றோடு வித்வான் ஒருவர் டாக்ஸியில் நிலையக் கட்டடத்தினுள் நுழைந்தது தெரிந்தது. விஸ்வத்திற்குப் பரிதாபமாக இருந்தது. பின்னால் திரும்பி அந்த வெளிறிப்போன சாம்பலில் நின்று கொண்டிருக்கும் உயரமான காம்பவுண்டைப் பார்த்தான். வித்தியாசமான எதையும் உள்ளே விடமாட்டோம் என்று சொல்லிக்கொண்டு அது நிற்கிற மாதிரி அவனுக்கு தோன்றியது. தனக்கு பிடித்தமான சில கவிதைகளை எடுத்துக் கொண்டு இன்று காலையில்தான் போன உற்சாகத்தையும், இப்போது வெளியில் வந்து வெறுப்போடு நின்று கொண்டிருப்பதையும் நினைத்துப் பார்த்தான்.

அங்கே இருந்தவர்கள் புதுக் கவிதைகளை ஒப்புக் கொள்ளவில்லை. இவனுடைய கவிதைகளைப் படித்துப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார்கள்.

''என்ன சார் இது? எதுகை, மோனை எதுவும் இல்லையே...?'' என்று கேட்டார்கள்.

விஸ்வம் பதில் சொல்லாமல் சிரித்தான். 

''இப்படி ஸிம்பாலிக்காகவும், இமேஜ்களாகவும் சொல்லிக் கொண்டு போனால், எப்படி, சார்? கேட்கிறவர்களுக்குப் புரிய வேண்டாமா?''

''புரியாது என்று எப்படி நீங்களே முடிவு செய்து விட்டீர்கள்? அப்படியானால் உங்க புரோகிராம் கேட்கிற யாரும் புத்திசாலிகள் இல்லை என்பது உங்கள் அபிப்ராயமா?'' என்று திருப்பிக் கேட்டான்.

அது அவர்களை எரிச்சல்படுத்தி இருக்க வேண்டும். அவன் தன் கவிதைகள் எல்லாவற்றையும் எளிதாய்ப் புரியும்படி மறுமுறை எழுதிப் பின்பு படிக்க வேண்டும் என்றார்கள். ஒவ்வொரு கவிதைக்கும் உரைநடை விளக்கமும் தர வேண்டும். சிலேடையாய்ப் பேச வேண்டும். கேட்பவர்களுக்கு போர் அடிக்காமல் இருக்க வேண்டும்.

எல்லாவற்றையும் மறுத்தான் இவன். கவிதை என்பது வெறும் இலக்கணம் மட்டும் இல்லை என்று சொன்னான். வளர்ச்சியடைகிற எல்லா மொழிகளிலும் கவிதை எப்படி மாறி வந்திருக்கிறது என்று விளக்கினான்.

''சேரன் செங்குட்டுவனின் வாளை எடுத்துக்கொண்டு இப்போது நம்மால் யுத்தத்துக்குப் போக முடியுமா, சார்? பாட்டன் டாங்கிகளும் போர் விமானங்களுந்தானே தேவையாக இருக்கிறது?'' என்று கேட்டான்.

அவர்கள் பேசாமல் இருந்தார்கள். தாங்கள் சொன்னதில் பிடிவாதமாய் நிற்பது தெரிந்தது.

விஸ்வத்துக்கு கோபம் வந்தது.

''கவிதை எனக்கு ஒரு ஸீரியஸான ஆர்ட்! பொழுதுபோக்கோ, உத்தியோகமோ இல்லை. ஏற்கனவே கவிதையாகி விட்ட ஒன்றை மறுபடியும் கலைத்து எழுத முடியாது,'' என்று 'ஸாரி' சொல்லிவிட்டு வெளியில் வந்து விட்டான். காலையில் வந்தபோது இந்த நிகழ்ச்சியை பற்றி நிறைய நினைத்துக் கொண்டு வந்திருந்தான். வழக்கப்படி இல்லாமல் புது மாதிரியாகச் செய்ய வேண்டும்... அதையெல்லாம் இந்தக் கோபம் உடைத்து நொறுக்கிவிட்டது.

பஸ் வருகிறதா என்று கவனிப்பதை நிறுத்திவிட்டுத் திரும்பினான். கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த சிற்றாட்கள் சாரத்தில் ஏறுவதைச் சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். இதே லாகவந்தான் வாழ்க்கைக்கும் தேவைப்படுகிறது என்று நினைத்துக் கொண்டான். பின்பு, எதிரில் தெரிந்த கடலின் பக்கம் பார்வை திரும்பியபோது இறங்கிப் போய் அலைகளில் காலை நனைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. நிதானமாக சாலையைக் கடந்து மணலில் இறங்கினான். கால்கள் புதைந்த போது மணலின் சூடு உறைத்தது. சின்னச் சின்னச் சூலங்களாகக் காகங்களின் பாதங்கள் இறைந்து கிடந்தன. சிறிது துாரத்தில் ஒரு செம்படவச் சிறுவனை இன்னொருவன் துரத்திக் கொண்டு வந்து கீழே தள்ளி மணலில் புரட்டினான்.

இந்த கோபந்தான் எப்படி இயற்கையாய்ப் பீறிட்டுக் கொண்டு வருகிறது! தனக்கு எவ்வளவு அதிகமாய்க் கோபம் வந்தாலும் யாரையும் இப்படிக் கீழே தள்ளிப் புரட்ட முடியாது என்று நினைத்துக் கொண்டான். இரண்டடிகள் போனதும் நேற்று உட்கார்ந்திருந்த இடம் என்பது நினைவுக்கு வந்தது. உடனே ஜமுனாவும் நினைவில் வந்தாள். அவள் பேசின பேச்சுகள், கல்யாணத்திற்காகக் கெஞ்சியது, ஆபீஸுக்கு லீவு போட்டு இருப்பது, வீட்டில் தான் மட்டும் தனியாக இருக்கப் போவதாய்ச் சொன்னது..... இப்போது போய் அவளைப் பார்த்தால் என்ன...? தன்னைப் பார்த்ததும்  அவளுக்கு ஆச்சரியமாக இருக்கும்! கண்கள் சந்தோஷத்தில் விரியும். உதட்டில் அழகாக ஒரு சிரிப்பு எட்டிப் பார்க்கும். அவன் கடலுக்குப் போகாமல் திரும்பி நடந்தான். பஸ் ஸடாப்பை அடைந்து தன் பஸ்களையெல்லாம் தவற விட்டுவிட்டு, பெரம்பூர் பஸ்ஸுக்காக காத்திருந்தான்.

தலை நிமிர்ந்து பார்த்தது ஓணான். மஞ்சளும் கறுப்புமாக ஒரு பட்டாம்பூச்சி அவன் கண்ணெதிரில் சுற்றிச் சுற்றி வந்தது. எங்கோ உட்கார்ந்து அணிப்பிள்ளை தொணதொணத்தது. 'யார் நீ' என்று கேட்கிற மாதிரி ஆவலாய்க் குருத்திலிருந்து எட்டிப் பார்த்தது ஒரு வாழைப்பூ. 'இந்த வீடுதான் வா! வா!' என்று கொம்பில் தொற்றிக் கொண்டிருந்த புடலைக் கொடி தலை அசைத்தது. சதுரத் தொட்டியில் இருந்த தண்ணீர், சூரியன் ஒளிப்பந்தை இழை இழையாகப் பிரித்து ஒரு வலை பின்னிச் சுவரில் விரித்திருந்தது. ஒரு வீட்டின் பின்புறம் மாதிரி அந்த வீடு துவங்கி இருந்தது. அது விஸ்வத்தை மிகவும் கவர்ந்தது. நிதானமாய் நடந்து கதவை நெருங்கினவன் ஒரு நிமிஷம் தயங்கிவிட்டுப் பின் மெதுவாய்த் தட்டினான். இரண்டாம் முறை தட்டக் கையைத் துாக்கின போது ஜன்னல் கதவு திறந்து கொண்டது. கம்பிகளின் பின்னாலிருந்து எட்டிப் பார்த்தாள் ஜமுனா. அவனை பார்த்த அதிர்ச்சி கண்களில் விரிந்து புருவம் சுருங்கியது.

''நீங்களா...?''

அவன் சிரித்துக் கொண்டே ஜன்னல் பக்கம் நகர்ந்தான்.

''நான்தான் ஜமுனா, என்னை நீ எதிர்பார்க்கவில்லை இல்லையா?''

''இல்லை'' என்று தலையாட்டினாள் அவள். புருவங்களின் சுருக்கம் நீங்காமல் தங்கியது. அதைப் பார்த்ததும் அவனுடைய உற்சாகமும் கொஞ்சம் தணிந்தது. தன்னைப் பார்த்ததும் சூரியகாந்தியாக மலருகிற ஜமுனாவா இவள்!

''என்ன இப்படி ஒரு அதிர்ச்சி, ஜமுனா? நான் வரக் கூடாதா?''

''இதுக்கு முன்னால எப்பவும் வந்தது இல்லையே....!''

''அதனாலதான் இன்னிக்கு வந்திருக்கேன்.'' – அவன் சிரிப்பு மாறாமல் பதில் சொன்னான்.

''எதுக்கு?'' – சட்டென்று கேட்டாள் அவள்.

அந்தக் கேள்வியில் அதிர்ந்து போனான் அவன். சிரிப்பு மெல்ல மறைந்தது. இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம்? இதற்கு என்ன பதில்? இப்படிக் கதவை திறக்காமல் வெளியில் நிற்க வைத்துப் பேசுவதன் காரணம்...? அவனுக்குப் புரிந்துப் போயிற்று. மனதில் பலமாய் ஓர் அடி விழுந்தது. ஆனாலும் நிதானமாய் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

''ஸாரி, ஜமுனா!'' என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் திரும்பினான். காலில் இடறிய சின்னக் கல்லை உதைத்துத் தள்ளினான். கேட்டை வேகமாய் இழுத்து மூடினான். நிசப்தமான அந்த தெருவில் தனியாய் நடந்த போது தகிப்பாய் அவனுக்குள் ஏதோ இறங்கியது. நாக்கு வறண்டு தாகம் எடுத்தது. அவள் வீட்டில் தண்ணீர் குடித்திருக்கலாம் என்று தோன்றியது. 'அவள் வீட்டிலா?' என்று நினைத்துக் கொண்டான். 'எதுக்கு?' என்று அவள் கேட்ட அந்தக் கேள்வி, சந்தேகமாகப் பார்த்த அந்தப் பார்வை.... 'நீ இவ்வளவ। தானா ஜமுனா? உன்னை, என் கம்பீரத்தைப் புரிந்து கொண்டது இவ்வளவ।தானா? இந்த அளவிற்குத் தாழ்ந்து போக எப்படி முடிந்தது உன்னால்? என்ன பெண் நீ! என்னை, என் உயரத்தை இப்படிக் குறுக்கிப் பார்க்க வேண்டும் என்று ஏன் தோன்றியது?'

''மணி என்ன, சார்?''

எதிரில் வந்த ஒருவர் நிறுத்திக் கேட்டார். இவன் கைக்கடிகாரத்தைப் பார்த்து சொன்னான். ''மூணு மணிக்கு இன்னும் வெயில் குறையலை பாருங்களேன்...'' என்று இவன் ஆமோதிப்பை எதிர்பார்த்தார். இவன் லேசாய்ச் சிரித்துவிட்டு நகர்ந்தான். இடது பக்கம் திரும்பினதும் மெயின் ரோடு வந்தது. சந்தடியாக இருந்தது. லாரியும், பஸ்கரும், சைக்கிள்களும் விரைந்தன. நிறையக் கடைகள் இருந்தன. இப்போது நாக்கு இன்னும் வறண்டு தாகம் அதிகமாய்த் தெரியவே ஒரு பெட்டிக் கடையில் நின்று ஐஸ்பெட்டியில் வைத்து பானம் ஒன்றைக் குடித்தான். அதன் குளிர்ச்சியில் மனசில் ஏதோ அடங்கின மாதிரி இருந்தது. பஸ்ஸில் உட்கார்ந்ததும் காற்று லேசாய் உடம்பை வருடியது. கொஞ்சங் கொஞ்சமாய்த் தன்னை லேசாக்கிக் கொள்ள முயன்றான். நிதானமாய் யோசித்தபோது ஜமுனாவால் அப்படித்தான் நடந்து கொள்ள முடியும் என்று பட்டது. மாறுபட்டு நடந்திருந்தால்தான் அவனுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும். 

இருந்தாலும் அடி மனசில் அவள் ஏற்படுத்திவிட்ட கசப்பு குறையவில்லை. எதிரில் தெரிந்த எல்லாப் பெண்களின் மீதும் அது பரவியது. பார்க்கிற ஒவ்வொரு பெண்ணும் ஜமுனாவாகத் தெரிந்தாள்.

ஜன்னல் பக்கத்தில் மஞ்சள் புடவையில் உட்கார்ந்திருக்கிற ஜமுனா – கூலிங் கிளாஸால் கண்ணை மறைத்துக் கொண்டு வருகிற ஜமுனா – 'பெல்பாட்ட'த்தில் உரத்துச் சிரிக்கிற ஜமுனா – அழகாய் ஆங்கிலம் பேசிக் கொண்டு 'பை' சொல்லிப் பிரிகிற ஜமுனா எல்லாம் வெறும் அழகுகள்! அலங்காரங்கள்! உடனே ருக்மிணியின் ஞாபகம் வந்தது. 'ருக்மிணி! நீ கூட ஜமுனாதானா? இல்லை. நிச்சயமாய் இல்லை! – அவளால் எப்போதும ்ஜமுனாவாக முடியாது. அவள் வித்தியாசமானவள். எதிலும் தெளிவாய் இருப்பவள். எதையும்  சுலபமாய்ப் புரிந்து கொள்ளத் தெரிந்தவள். அன்பாய் – ஆறுதலாய் – இருக்கிற இடத்தை நிறைவாக்குகிற சாமர்த்தியம் – இதெல்லாம் எத்தனை பேருக்கு வரும்? அந்த மாதிரி உலகத்தில் எத்தனை பிறவிகள் இருக்கும்? அந்த மாதிரி உலகத்தில் எத்தனை பிறவிகள் இருக்கும்? பத்து நுாறு – ஆயிரம்...? இல்லை. ஒன்றுதான். ஒன்றே ஒன்றுதான்! அது ருக்மிணி மட்டுந்தான். அவனுக்குத் தெரிந்தது அவள் ஒருத்திதான்...!'

''சார், டிக்கெட்...!''

சட்டென்று எண்ணம் கலைந்து சில்லறைக்காகப் பாக்கெட்டினுள் கைவிட்டு, ''மைலாப்பூர் ஒண்ணு!'' என்றான்.

  (தொடரும்)

நன்றி: ராஜராஜன் பதிப்பகம்