சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 261 – எஸ்.கணேஷ்

பதிவு செய்த நாள்

07
செப்டம்பர் 2016

'நியாயம் காவாலி'  தெலுங்கு படத்தின் உரிமையைப் பெற்று, சுஜாதா சினி ஆர்ட்ஸ் தமிழில் தயாரித்த 'விதி' திரைப்படம் பரபரப்பாக ஓடியதுடன், வசூலையும் வாரிக்குவித்தது. 'பரா­சக்தி' படத்­தின் நீதி­மன்­றக் காட்­சி­க­ளுக்­குப் பிறகு ஒரு திரைப்­ப­டத்­தில் இடம்­பெற்ற நீதி­மன்­றக் காட்­சி­க­ளின் வச­னங்­கள் மிகப்­பெ­ரிய அள­வில் ரசி­கர்­க­ளின் தொடர் கைத்­தட்­டல்­க­ளால் வர­வேற்­கப்­பட்­டன என்­றால், அது ‘விதி’ படத்­தில் இடம்­பெற்ற நீதி­மன்­றக் காட்­சி­க­ளின் வச­னங்­கள்­தான்.

1984ம் ஆண்டு வெளி­வந்த இப்­ப­டத்­தில் மோகன், ஜெய்­சங்­கர், பூர்­ணிமா பாக்­ய­ராஜ், சுஜாதா, சத்­ய­கலா, மனோ­ர­மா…­­உள்­ளிட்ட பலர் நடித்­தி­ருந்­தார்­கள்.இயக்­கு­னர் கே.விஜ­யன் இயக்­கி­யி­ருந்த இப்­ப­டத்­திற்கு ஆரூர்­தாஸ் வச­னம் எழு­தி­யி­ருந்­தார்.சங்­கர் கணேஷ் இசை­ய­மைப்­பில் பாடல்­களை வாலி எழு­தி­யி­ருந்­தார்.

படம் பற்றி பார்ப்­போம்…

பிர­பல வழக்­க­றி­ஞர் ‘டைகர்’ தயா­நி­தி­யின் மகன் ராஜா ஒரு பெண் பித்­தன். அழ­கான இளம் பெண்­க­ளைக் காத­லிப்­பது போல் நடித்து அவர்­க­ளைத் தன் வலை­யில் விழ­வைத்து விடு­வான். ராஜா­வின் அன்பை நிஜ­மென நம்­பும் இளம் பெண்­கள் பல­ரும் அவ­னி­டம் தங்­கள் கற்­பைப் பறி­கொ­டுக்­கின்­ற­னர்.

தொடர்ந்து இப்­படி ‘பிளே­பாய்’ வாழ்க்கை நடத்­தும் ராஜா, மத்­திய தர குடும்­பத்­தைச் சேர்ந்த ராதா என்ற பெண்­ணைச் சந்­திக்­கி­றான். வழக்­கம் போல் ராதா­வின் கவ­னத்­தைக் கவர்ந்து, அவ­ளைத் தன் வலை­யில் விழ வைக்­கி­றான் ராஜா. ஆத்­மார்த்­த­மாக ராஜா­வைக் காத­லிக்­கும் ராதா, அவ­னும் உண்­மை­யில் தன்னை நேசிப்­ப­தா­கவே நினைக்­கி­றாள். ராஜா­வின் வஞ்­சக வலை­யில் விழும் ராதா, கற்­பம் தரிக்­கி­றாள். நிலையை ராஜா­வி­டம் சொல்லி தன்­னைத் திரு­ம­ணம் செய்து கொள்­ளும்­படி கேட்­கி­றாள்.

திரு­ம­ணத்­துக்கு மறுக்­கும் ராஜா, ‘நீ யார் என்றே எனக்­குத் தெரி­யாது’ என்று சொல்­லி­வி­டு­கி­றான்.

ராதா­வின் பெற்­றோர் கற்­பத்தை கலைக்­கச் சொல்­கின்­ற­னர். அதை மறுக்­கும் ராதா, தான் குழந்­தை­யைப் பெற்­றெ­டுக்­கப் போவ­தா­க­வும், தன்னை ஏமாற்­றிய ராஜாவை கோர்ட்­டுக்கு வர­வ­ழைத்து அவ­னுக்கு சரி­யான பாடம் புகட்­டப் போவ­தா­க­வும் சொல்­லி­விட்டு வீட்டை விட்டு வெளி­யே­று­கி­றாள்.

பெண் விடு­த­லைக்­காக உரத்த குரல் கொடுக்­கும் சகுந்­தலா என்ற வழக்­க­றி­ஞரை ராதா சந்­திக்­கி­றாள். ராதா­வின் கதை­யைக் கேட்ட சகுந்­த­லா­வுக்கு, தானும் இது­போல் ஏமாற்­றப்­பட்­டது நினை­வுக்கு வரு­கி­றது. சகுந்­த­லா­வைக் காத­லித்து கற்­ப­மாக்­கி­விட்டு ஏமாற்­றி­ய­வர் வேறு யாரு­மில்லை… ராஜா­வின் தந்தை ‘டைகர்’ தயா­நி­தி­தான் அது. 

தனக்கு நேர்ந்­தது போன்ற கொடுமை ராதா­வுக்­கும் நேரக்­கூ­டாது என்று முடிவு செய்த சகுந்­தலா, ராதா­வுக்­காக நீதி­மன்­றத்­தில் வழக்­கா­டு­கி­றார். ‘டைகர்’ தயா­நிதி தன் மகன் ராஜா­வுக்­காக சகுந்­த­லாவை எதிர்த்து வாதா­டு­கி­றார். கார­சா­ர­மான வாதப் பிர­தி­வா­தங்­க­ளால் தீதி­மன்­றத்­தில் அனல் பறக்­கி­றது. ‘டைகர்’ தயா­நி­தி­யின் சாதுர்­ய­மான வாதத்­தி­ற­மை­யை­யும் மீறி உண்மை வெற்றி பெறு­கி­றது. ராதா­வின் குழந்­தைக்­குத் தந்தை ராஜா­தான் என்று தீர்ப்­ப­ளிக்­கி­றது நீதி­மன்­றம். குற்­ற­வா­ளிக்­கூண்­டில் நிற்­கும் ராஜா, தன் தவ­று­களை உணர்ந்து விட்­ட­தா­க­வும், ராதாவை ஏற்­றுக் கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் கூறு­கி­றான். ஆனால், அவனை நிரா­க­ரிக்­கும் ராதா, ‘உன்­னைத் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தற்­காக நான் வழக்கு தொடுக்­க­வில்லை. என் குழந்­தைக்கு நீதான் அப்பா என்­பதை சட்­டப்­படி நிரூ­பிக்­க­வும், பெண்­களை ஏமாற்­றும் உன்­னைப் போன்ற அயோக்­கி­யர்­க­ளுக்­குப் பாடம் கற்­பிக்க வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும்­தான் வழக்கு தொடர்ந்­தேன்’ என்று சொல்­கி­றாள்.

 சிறிய பட்­ஜெட் படங்­க­ளும் பெரிய வெற்­றி­யைப் பெறும் என்­பதை நிரூ­பித்த சில படங்­க­ளில் இது­வும் ஒன்று. ‘விதி’ திரைப்­ப­டம் ஐநூறு நாட்­கள் ஓடி மகத்­தான வெற்றி பெற்­றது.  தயா­ரிப்­பா­ளர் பாலா­ஜி­யின் ‘தங்கை’ படத்­துக்கு வச­னம் எழு­திய ஆரூர்­தாஸ், அதன் பிறகு பதி­னாறு ஆண்­டு­கள் கழித்து பாலாஜி தயா­ரித்த படத்­துக்கு வச­னம் எழு­தி­யது இந்­தப் படத்­திற்­குத்­தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. வச­னத்­துக்­கா­கவே பெரி­தும் பேசப்­பட்ட இந்­தப் படத்­துக்கு மொத்த வச­னங்­க­ளை­யும் ஆரூர்­தாஸ் ஏழே நாட்­க­ளில் எழுதி முடித்­தி­ருக்­கி­றார்.  சங்­கர் – கணேஷ் இசை­யில் வாலி எழு­திய ‘லவ்­தான்’, ‘வாடி மச்சி’, ‘விதி வரைந்த’ என்று தொடங்­கும் பாடல்­கள் ‘ஹிட்’ ஆகின.

 ‘விதி’ படத்­தின் வச­னங்­கள் அடங்­கிய ஆடியோ கேசட்­டு­க­ளும் வெளி­யி­டப்­பட்டு அவை­யும் விற்­ப­னை­யில் சக்கை போடு போட்­டன.