இந்திய ஹாக்கி வீராங்கனைகள் பரிதாபம்: * ரயிலில் தரையில் உட்கார்ந்து பயணம் * விசாரணை நடத்துமா மத்திய அரசு

பதிவு செய்த நாள்

30
ஆகஸ்ட் 2016
02:58

புதுடில்லி

ரியோ ஒலிம்பிக் மாரத்தானில் இந்திய அதிகாரிகள் தண்ணீர் கொடுக்காததால் ஜெய்ஷா மயிங்கி விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்திய ஹாக்கி வீராங்கனைகள் ரயிலில் தரையில் உட்கார்ந்து சென்ற கொடூரம் தற்போது வெளியாகி உள்ளது.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் 31வது ஒலிம்பிக் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த முறை இந்தியா சார்பில் இதுவரை இல்லாத  வகையில் 118 நட்சத்திரங்கள் பங்கேற்றனர். கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்கள் வென்றன.  எனவே ரியோ போடடியில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்த்த அபினவ்  பிந்த்ரா, ககன் நரங், தீபா கர்மாக்கர், தீபிகா குமாரி, செய்னா நேவல், சானியா மிர்சா, ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா, யோகேஷ்வர் தத், லியாண்டர் பயஸ், ரோகன் போபண்ணா ஆகியோர் ஏமாற்றினர். ஓருகட்டத்தில் இந்தியா ஒருபதக்கமாவது வெல்லுமா என்ற சந்தேகம் இருந்தது. இந்த நிலையில், பெண்களுக்கான மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சாக்சி மாலிக், வெண்கலம் வென்றார். இதுவே ரியோவில் இந்தியா பெற்ற முதல் பதக்கமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து பெண்களுக்கான பாட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தார். மொத்தம் 2 பதக்கங்களே இந்தியாவுக்கு கிடைத்தது. இதையடுத்து, பதக்கப்பட்டியலில் இந்தியா 67வது இடத்தைப் பிடித்தது. 

ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் இந்திய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்தமுறையும் அதிரடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  ரியோ வீரர், வீராங்கனைகளுக்கு உடைகள் சரியான அளிவில் இல்லை என தொடக்கத்தில் புகார் கூறப்பட்டது. ரியோ ஒலிம்பிக் மாரத்தானில் பங்கேற்ற  இந்திய வீராங்கனை ஜெய்ஷா போட்டியின் போது தனக்கு தண்ணீர் உட்பட உணவு பொருட்களை இந்திய தரப்பில் யாரும் தரவில்லை என புகார்  கூறினார். போட்டியின் முடிவில் எல்லை கோட்டை அடைந்ததும் ஜெய்ஷா மயங்கி சரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட இவருக்கு, 2 மணி நேரம் கழித்து தான் சுயநினைவு திரும்பியது. இதுகுறித்து ஜெய்ஷா கூறுகையில், ‘செத்து விட்டேன் என்று தான் நினைத்தேன். எனது  பயிற்சியாளரும் அப்படித் தான் நினைத்தார். டாக்டர்களுடன் சண்டையிட்டார். ஏனெனில் எனக்கு எதுவும் நேர்ந்தால் அவர்தானே பொறுப்பு. கடைசியில்  குளுகோஸ் ஏற்றித்தான் சரி செய்தனர். பிறகு இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு பதில் தர மறுத்தனர். இந்திய அணியினருடன் ஏகப்பட்ட நபர்கள்  வந்திருந்தனர். இவர்கள் எல்லாம் எங்கு சென்றனர் என்றே தெரியவில்லை’ ஜெய்ஷாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதை இந்திய  தடகள சங்க நிர்வாகிகள் மறுத்த போதும் இதுகுறித்து விசாரிக்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் சார்பில், விளையாட்டுதுறை இணைச் செயலர் ஆன்கர் கெடியா, இயக்குநர் விவேக் நாராயண் ஆகிய 2 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒருவாரத்திற்குள் விசாரணை அறிக்கையை தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இருந்தும் ஜெய்ஷாவுக்கு பன்றிக் காய்ச்சல் என்பதால் விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான செயலவு ரூ.30 கோடி என மத்திய அரசு வெளியிட்டது. இவ்வளவு தொகை செலவு செய்தும் வீராங்கனைக்கு தண்ணீர் கூட கொடுக்கவில்லையே என்ற விமர்சனம் எழுந்தது, ஜெய்ஷா பிரச்னை இன்னும் ஓயாத நிலையில், தற்போது மற்றொரு அதிர்ச்சி சம்பவம் வெளியாகி  உள்ளது. ரியோ ஒலிம்பிக் போட்டியில் 36 வருடங்களுக்குப் பிறகு இந்திய பெண்கள் ஹாக்கி அணி பிரதான சுற்றுக்கு முன்னேறியது. இருந்தும் லீக்  சுற்றில் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாத இந்திய அணி கடைசி இடமான 13வது இடத்தைப் பிடித்தது.

இந்த நிலையில், இந்தியா திரும்பிய இவர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல ‘போகரோ&ஆழப்புழை’ எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறினர். ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு செல்வதற்கான இவர்களின் பயணம் உத்தரகண்டின் ராஞ்சியில் துவங்கியது. இவர்களது பயணச்சீட்டின் இருக்கை எண் உறுதி  செய்யப்படாமல் இருந்தது. ‘டிக்கெட்’ பரிசோதகர் இவர்களுக்கு இருக்கை அளிக்க மறுத்து தரையில் அமர்ந்து பயணம் செய்து வைத்தார். வேறு வழியில்லாமல் இதை ஏற்றுக் கொண்ட வீராங்கனைகள் சுமார் 2 மணி நேரம் பயணித்தனர். ஒலிம்பிக்கில் பங்கேற்ற நட்சத்திரங்களுக்கு கூட அதிகாரிகள் முறையான பயண வசதியை செய்து தராதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, ஒடிசாவின் பான்போஸ் நகரின் துணை கலெக்டர் ஹிமானிக் கூறுகையில், ‘இந்திய ரயில்வே நிர்வாகம் ஹாக்கி வீராங்கனைகளை கவுரவத்துடன் நடத்தி இருக்க வேண்டும். இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு கடிதம் எழுத உள்ளேன்’ என்றார். இந்திய ஹாக்கி  சம்மேளனமும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை. ரூ.30 கோடி செலவு செய்ததாக கூறியுள்ள மத்திய அரசு, குடிக்க தண்ணீர், நட்சத்திரங்களுக்கு அதுவும்  பெண்களுக்கு பயண வசதியை கூட செய்து தரமால் இருந்தது வேதனை அளிக்கிறது. இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு  தரப்பிலிருந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.