வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் திங்களன்று கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

28
ஆகஸ்ட் 2016
22:52

வேளாங்கண்ணி:

உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்கவுள்ளது.

இத் திருவிழாவில் சுமார் பத்து லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சை, சென்னை பல்வேறு மாவட்டத்திலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக இக்கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

பாதயாத்திரையாக வரும் பலர் காவி வேட்டி அணிந்து, கொடி மற்றும் சிலுவையை ஏந்தி, தேர், சப்பரம், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியவாறு வருகின்றனர்.  காலையில் வெயில் தாக்கம் அதிகரிக்கும் வரையும், மாலையில் வெயில் குறைந்தபின்பு துவங்கும் இந்த நடைபயணம் நள்ளிரவு வரையும் தொடரும். ஆங்காங்கே சற்று இளைப்பாறிய பின்பு மீண்டு யாத்திரை தொடங்கும்.

கேரளா, கர்நாடக, ஆந்திரா, கோவா போன்ற பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தேவாலயத்திற்கு, வழிபாட்டிற்காக வேளாங்கண்ணி வருவார்கள்.

திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் கூட்ட நெரிசலை சமாளிக்க,  தமிழகத்தின் பல இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன., சென்னை, நெல்லை மற்றும் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து, சிறப்பு கட்டண சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை – மயிலாடுதுறை – திருவாரூர் - காரைக்கால் ரயில் மார்க்கத்திலும், திருச்சி – திருவாரூர் – காரைக்கால் ரயில் மார்க்கத்திலும், கர்நாடக மாநிலம் பெங்களூர் – காரைக்கால் மார்க்கத்திலும், ரயில்கள் இயக்கப்படுகிறது. நாகப்பட்டிணத்திலிருந்து வேளங்கண்ணிக்கு ரயில் இயக்கப்படுகிறது.

வேளாங்கண்ணியிலிருந்து கோவாவிற்கு வாரத்திற்கு ஒருமுறை ரயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் யாத்திரிகர்களுக்கும், மக்களுக்கும் உடனடியாக உதவும் வண்ணம் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வேளாங்கண்ணி மாதா தேவாலயத்தில் 2016 ஆக.29ல் கொடியேற்றத்துடன் தொடங்கும் இத்திருவிழா  2016 செப். 9 இல் கொடியிறக்கத்துடன் நிறைவடையும்.