கலைமாமணி வாமனனின் ‘நிழலல்ல நிஜம்’ – 36

பதிவு செய்த நாள்

08
ஆகஸ்ட் 2016
21:51

மூன்று அவதாரங்கள் எடுத்த ‘தூக்குத் தூக்கி!’

சிவாஜி கணேசன் நடித்து 1954ல் வந்த ‘தூக்குத் தூக்கி’,  பல விதங்களில் முக்கியமான ஒரு படம் (தலைப்பில் உள்ள ‘தூக்கு’ என்பதற்கு, சுவடிகள் அடங்கிய பை என்று பொருள்). ‘தூக்குத் தூக்கி’ திரைப்படம் பெரிய திரைக்காவிய மெல்லாம் இல்லைதான்.  வியாபார ரீதியிலான மசாலா படம்தான். ஆனால், வெற்றிப்படமாக அமைந்த ‘தூக்குத் தூக்கி’யில் சிவாஜிக்கான அனைத்துப் பாடல்களையும் டி.எம். சவுந்தரராஜன் பாடினார். அதனால், தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக அமைந்த டி. எம். எஸ்.,–- சிவாஜி இணைவுக்கு ‘தூக்குத் தூக்கி’ வழிவகுத்தது.

அது மட்டுமல்ல, ஜி.ராமநாதன் இசையில் சவுந்தரராஜனின் குரல் சிறப்பாக பரிமளித்த முதல் படமாக ‘தூக்குத் தூக்கி’ அமைந்தது. ராகங்கள் மணக்கும் ராமநாதனின் இசையில் சவுந்தரராஜனின் குரல் ஐம்பதுகள் எங்கும் ஓங்கி ஒலிக்க வகை செய்த படமாக ‘தூக்குத் தூக்கி’ விளங்கியது. 

சொல்லப்போனால், சற்று தொய்வாகச் சென்று கொண்டிருந்த ஜி. ராமநாதனின் இசைப் படலத்தைத் ‘தூக்குத் தூக்கி’ தூக்கிவிட்டது என்று கூறவேண்டும்! அதனால் ஐம்பதுகளில் சங்கீத சக்ரவர்த்தியாக ஜி. ராமநாதனால் தொடர்ந்து விளங்க முடிந்தது.

படத்திற்குப் பல அம்சங்கள்  துணைபுரிந்தன. திரைக்கதை அமைப்பும், வசனமும் திருத்தமாக அமைந்திருந்தன (ஏ.டி.கிருஷ்ணசாமி, வி.என். சம்பந்தம்). நடிப்பு நம்பகத்தன்மையைக் கூட்டியது (சிவாஜி முதற்கொண்டு சின்ன பாத்திரங்களில் நடித்த பலர் வரை). பாடல் வரிகள் பரிமளித்தன (உடுமலை நாராயண கவி, மருதகாசி, தஞ்சை ராமய்யாதாஸ்). ஜீவனுள்ள பாடல்களுடன் தேர்ந்த இயக்கமும் சேர்ந்து விட்டால் ஜெயம் நிச்சயம் (படத்தை இயக்கியவர், அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான அனுபவ கேமரா கலைஞர், ஆர்.எம். கிருஷ்ணசாமி).  

கொண்டு வந்தால் தந்தை, கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய், சீர் கொண்டு வந்தால் சகோதரி, கொலையும் செய்வாள் பத்தினி, உயிர் காப்பான் தோழன் என்ற ஐந்து வாசகங்கள் உண்மையாவதைக் காட்டுகிறது ‘தூக்குத் தூக்கி’. 

ஆனால் இத்தகைய பொத்தாம்பொதுவான வாசகங்களை எப்படி நிரந்தர சத்தியங்களாக ஏற்க முடியும்?

மகன் பணம் சம்பாதிக்கவில்லை என்றால் எல்லா தந்தைமார்களும் வெறுக்கத்தான் செய்வார்களா? தாய், அன்பின் வடிவம் என்றாலும், மகன் குடிகாரனானால் ஈன்றவள் கூட வெறுப்பாள் என்று திருவள்ளுவரே கூறவில்லையா? தம்பிகளுக்காக எத்தனையோ தியாகங்கள் செய்த தமக்கைகள் இல்லையா?  மனைவியின் நல்ல குணங்களின் காரணமாக மேன்மை பெற்ற ஆண்களின் தொகையை எண்ணி மாளாதே! நண்பனாக வந்து நயவஞ்சகம் செய்யும் நபர்களும் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் இல்லையே? 

இது போன்ற உணர்வுடன்தான் ‘தூக்குத் தூக்கி’யின் கதாநாயகனான சிவாஜி கணேசனும் தொடங்குகிறார். படத்தில் முன்வைக்கப்படும் வாசகங்ளை முதலில் அவர் ஏற்கவில்லை. ஆனால், அனுபவம் ஒவ்வொரு வாசகத்தையும் உண்மையாக்கிக் காட்டுகிறது.

நாட்டின் கஜானாவிற்குப் பொருள் கொண்டு வராத இளவரசன் சுந்தராங்கனை தந்தையான அரசர் சினந்து, ‘பொருள் கொண்டு வரும் வரை நீ நாடு கடத்தப்படுகிறாய்’ என்று கட்டளை இடுகிறார்.

அமைச்சரையும் குலகுருவையும் பார்த்து இளவரசன் கேட்கிறான்– ‘‘ஏன் ஐயா, என் தந்தையின் உள்ளம்தான் இப்படியா? எல்லா தந்தையரின் உள்ளமும் இப்படித்தானா?’’

அதற்கு குலகுரு கூறுகிறார்– - ‘‘சுந்தரா...பெற்ற தந்தைகளின் பேரவா பெரும்பாலும் இதுதான்...மற்ற சிலர் விதிவிலக்கு.’’

இளவரசன்: - ‘‘பொருள் செய்ய முடியாதவனை இகழ்வதோ வெறுப்பதோ பெரும் குற்றம் அல்லவா?’’

அமைச்சர் :- ‘‘குற்றம் என கொள்வதற்கு இல்லை. துள்ளித்திரிகின்ற காலத்தில் பள்ளிக்கு அனுப்பிப் படிக்க வைக்கிறார் தந்தை. கல்வி கற்பான், கை நிறைய பொருள் கொணர்வான், கண்ணியமாக வாழ்வான், கண்குளிரக் காண்போம் என்று.’’ 

இளவரசன்: - ‘‘சம்பாதிக்க முடியாத பிள்ளையை வெறுப்பது சமூகத்திற்கே கேடு. அம்மாதிரி மனப்பான்மை  பரவினால் உலகில் ஒற்றுமையும் அமைதியும் நிலவுமா?’’

குலகுரு: - ‘‘நிலவாது. ஆனால், சம்பாதிப்பது இயற்கையாக உலகோடு பிறந்துவிட்ட ஒரு குணம்.  ஆண் மகன் சித்தத்தோடு அமைந்துவிட்ட ஓர் அற்புத குணம்’’.

இளவரசன்: - ‘‘அற்ப குணம் என்று கூறினால் பொருந்தும்.’’

குலகுரு - புன்னகைத்தவாறு.. ‘‘அப்படியே வைத்துக்கொள். அந்தக் குணம் ஒரு யானை மாதிரி. அதை அறிவென்னும் அங்குசத்தால் அடக்க வேண்டும். அகற்ற முடியாது’’. 

இப்படி மிக நுட்பமான வசனங்கள் அடங்கிய ‘தூக்குத் தூக்கி’, உண்மையில் 1935ல் வந்த ‘தூக்குத் தூக்கி’யின் புதிய பதிப்புத்தான். இதை நினைவூட்ட இரண்டு படங்களுடனும் நேரடி தொடர்புள்ள ஒருவரும் இருந்தார். அவர்தான் உடுமலை நாராயண கவி. 

சிவாஜி நடித்த படத்தில், ‘பெண்களை நம்பாதே’, ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ ஆகிய பிரபல பாடல்கள் அவருடைய கைவண்ணம்தான். இந்தியும் தமிழும் கலந்த மணிப்பிரவாளத்தில் அவர் எழுதிய, ‘பியாரி நிம்மள் மேலே நம்கி மஜா’ என்ற பாடலும் உடுமலையாரின் கைவண்ணம்தான். 

இத்தகைய உடுமலைதான், மதுரையைச் சேர்ந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் 1935ல் எடுத்த ‘தூக்குத் தூக்கி’யின்  கதை, வசனம் பாடல்களை எழுதியவர். சென்னையில் முதன்முதலில் பேசும் பட ஸ்டூடியோ அமைத்து அதை ஒலிநகரம் ஆக்கிய ஏ. நாராயணன் மேற்பார்வையில், ஆர். பிரகாஷின்  திரைக்கதை, கேமரா, இயக்கத்தில் பழைய ‘தூக்குத் தூக்கி’ திரைக்கு வந்தது.

சிவாஜி கணேசன் 1954ல் நடித்த பிரதான வேடத்தில் நடித்தவர் சி.வி.வி.பந்துலு. சிவாஜியின் இரண்டாவது படமான ‘பண’த்தில் சிவாஜியின் பேரோடு சி.வி.வி.பந்துலுவின் பெயரும் நடிகர் பட்டியலில் உள்ளது.  ஆனால் தற்காலம் கிடைக்கும் ‘பணம்’ திரைப்படப்பிரதியில் சி.வி.வி.பந்துலுவைப் பார்ப்பது கடினம். ஐம்பதுகளில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்த பழைய ‘தூக்குத் தூக்கி’ நாயகரான சி.வி.வி. பந்துலு, கடைசியாக ‘நடு இரவு’ படத்தில் நடித்தார். 

1935ல் வந்த ‘தூக்குத் தூக்கி’யில், கதாநாயகியின் கள்ளக்காதலனான சேட்டு வேடத்திலும் இளவரசியைக் காதலிக்கும் சட்டாம்பிள்ளையாகவும் நடித்தவர் ‘கிளவுன்’ சுந்தரம்.  இப்படிப் பார்த்தால் தமிழ் பேசும் படத்தின் முதல் முக்கிய இரட்டை வேட நடிப்பு கிளவுன் சுந்தரத்தினுடையது என்று கூற வேண்டும். 1954ல் பாலையா, சட்டாம்பிள்ளை வெங்கடராமன் என்ற இரண்டு சிறந்த நடிகர்கள் நடித்த வேடங்களை ஒருவராகவே செய்வது சாதாரண விஷயம் அல்ல. 

‘சக்ரவர்த்தி திருமகள்’ படத்தில் என்.எஸ். கிருஷ்ணனின் சிபாரிசின் பேரில், என்.எஸ்.கே.வும் எம்.ஜி.ஆரும் சேர்ந்து  பாடுவதாக அமைந்த, ‘சீர்மேவும் குருபாதம்’ என்ற நீண்ட பாடலை ‘கிளவுன்’ சுந்தரம்தான் எழுதினார்.

1935ல் வந்த  ‘தூக்குத் தூக்கி’யின் நாயகன், மூன்று பெண்களை மணந்து அவர்களுடன் வாழ்க்கை நடத்துகிறான். கடைசியில் அவன் இப்படி பாடும்படி நேர்கிறது -- ‘‘மூவரை தேவியராய் மூவுலகில் கொண்டவர்க்கு மோட்சம் கிடைப்பது மெய்யா மனமே? என்னிடத்தில் வாரும் என்று இவள் பிடித்திழுக்கிறாள், இடையில் ஒருத்தி வந்திங்கு இடித்துக் கைப்பிடிக்கிறாள், தன்னிடத்தில் வந்திருக்க அத்தையல் வந்து அழைக்கிறாள், சர்வேஸ்வரா இதற்கோர் தந்திரம் சொல்லும் இந்நாள்’’...1954ல் சிவாஜி ஏற்ற பாத்திரத்திற்கு இந்த முப்பரிமாணம் கிடையாது, ஒரே ஜோடிதான்! 

பழைய வெற்றிப் படத்தைப் புதுப்பித்து வெற்றி அடையலாம் என்று ‘தூக்குத் தூக்கி’ காட்டிய பாதையை டி. ஆர். ராமண்ணா உற்று நோக்கினார். அவர் ‘கூண்டுக்கிளி’  எடுத்து நொந்துபோயிருந்த சமயம். உடனே, அந்தக் கால ‘குலேபகாவலி’யை நீட்டி நிமர்த்தி அவரும் சந்தோஷமாக பணத்தை அள்ளினார்.

‘தூக்குத் தூக்கி’யில் கடைசியாக, ‘நாடகமே உலகம், நாம் எல்லாம் நடிகர்கள்’ என்ற ஷேக்ஸ்பியரின் வசனத்தைப் பேசுவார் சிவாஜி. ‘நாடகமே உலகம்’ என்பதையே  தலைப்பாக வைத்து, 1979ல் ‘தூக்குத் தூக்கி’யை ஒருவிதமான ‘உல்டா’ பண்ணினார், கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ். சிவாஜி நடித்த வேடத்தில் கே.ஆர். விஜயா நடித்தார்! 

தந்தை மேஜர் சுந்தரராஜன், தன்னை ‘வீட்டை வீட்டுப் போ’ என்கிற போது ‘கொண்டு வந்தால்தான் தந்தை’ என்று உணர்கிறார் கே.ஆர்.விஜயா ! கே.ஆர். விஜயா தனது சகோதரி ஏ. சகுந்தலாவின் வீட்டிற்கு செல்லும் போது, சீர்கொண்டு சென்றால்தான் சகோதரி என்று உணர்கிறார் ! தான் வாழ வைத்த ஏழைப்பெண் (ஜெயமாலினி), கள்ளக் காதலனுடன் திட்டம் தீட்டி கணவனை (சரத்பாபு) கொல்ல சதி செய்யும் போது, கொலையும் செய்வாள் பத்தினி (அதாவது மனைவி) என்று உணர்கிறார். ஒழுக்கக்கேடுகளால் பலருடைய வாழ்க்கை தடம் புரள்வதை காண்கிறார். 

‘‘நான் நாள் நட்சத்திரம் எல்லாம் பாக்கமாட்டேன், எனக்கு அந்த மூடப்பழக்கம் எல்லாம் கிடையாது,’’ என்று  கே.ஆர். விஜயா  பேச வைக்கப்படுகிறார்.

விருந்துக்கு அழைக்கப்படும் மானேஜர் உசிலைமணி (மாயவரம் மணி அய்யர்), ‘அசைவம் இருந்தா நன்னா இருக்கும்’ என்று பேச வைக்கப்படுகிறார். இவை, ஆரூர்தாஸின் வசன முத்திரைகள்.

எண்பதுகள் வரை மூன்று முறை திரைக்கு வந்த ‘தூக்குத் தூக்கி’ கதை, அதன் பிறகு கொஞ்சம் காலமாக நிலுவையில் உள்ளது போலும். மீண்டும் வரலாம். உலகம் என்னதான் மாறினாலும் நடக்கிற கதையெல்லாம் மீண்டும் மீண்டும் நடப்பவைதானே? 

(தொடரும்)