கட்சித்தாவல் சட்டம்: அமர் சிங், ஜெயப்பிரதா வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் தொடரும் கேள்விகள்

பதிவு செய்த நாள்

04
ஆகஸ்ட் 2016
03:56

புதுடெல்லி,

கட்சித்தாவல் தடைச்சட்டத்துக்கு எதிராக உத்தரபிரதேச அரசியல் தலைவர் அமர்சிங், முன்னாள் நடிகையும் அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒருகட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்பி கட்சி கொறடாவுக்கு கட்டுப்பட்டவரா? என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிக்கவில்லை.

சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அமர்சிங்கும் அவரது ஆதரவாளரான முன்னாள் பாலிவுட் நடிகை ஜெயபிரதாவும் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அந்த சமயத்தில் அமர் சிங் மாநிலங்களவை எம்பியாகவும், ஜெயப்பிரதா மக்களவை எம்பியாகவும் பதவிவகித்தனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், பதவியில் தொடர்ந்தனர். அப்போது, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இவர்கள், மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க முடிவு செய்தனர். இதனால், கட்சி கொறடாவின் கட்டளைக்கு எதிராக செயல்பட்டதற்காக கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களது பதவி பறிக்கப்படலாம் என்ற சூழ்நிலை உருவானது.

அதனால், தங்கள் பதவியை காத்துக் கொள்ளும் நோக்கத்துடன் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவர்களது மனுவில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், கட்சி கொறடாவின் கட்டளைப்படி நடக்க தேவையில்லை என்று வாதிட்டனர். கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் மட்டுமே கட்சிக் கொறடாவின் முடிவுகளுக்கு கட்டுப்பட வேண்டும், நீக்கப்பட்டதால் கட்டுப்படத் தேவையில்லை என்றும் அதனால் கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் வாதிட்டனர்.

நாங்கள் புதிய கட்சி தொடங்கி செயல்படவில்லை என்பதால், 1996ம் ஆண்டின் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்கு பொருந்தாது என்று அமர் சிங்கும், ஜெயப்பிரதாவும் வாதிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், கட்சித்தாவல் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த மனு மீதான விசாரணை முடிந்து, தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் குறித்த 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆராய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஜி. விஸ்வநாதன் வழக்கில், கடந்த 1996ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள், தொடர்ந்து கட்சியின் நடவடிக்கைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்று கூறப்பட்டு இருந்தது.

இதனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும், கட்சி கொறடாவின் கட்டளைகளுக்கு கட்டுப்பட்டவர்களா? என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  

இந்நிலையில் இந்த மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், பி.சி. பாந், அருண் மிஷ்ரா ஆகியோர் அடங்கி அமர்வின் முன் வந்தது. அப்போது, அமர் சிங் மற்றும் ஜெயப்பிரதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக அவர்கள் அறிவித்தனர்.

நீண்ட நாட்களாக இந்த மனு மீதான விசாரணையை நாங்கள் கேட்ட போதிலும், இது குறித்த தீர்ப்பை நாங்கள் வழங்கப்போவதில்லை. மனுதாரர்களான எம்பிகளின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இந்த நேரத்தில் பதில் தேடுவது முறையல்ல என்று நீதிபதிகள் விளக்கம் அளித்தனர்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்யாதவுடன் சமரசம் ஏற்பட்டதன் காரணமாக அமர் சிங்கும், ஜெயப்பிரதாவும் மீண்டும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தனர். அமர் சிங் தற்போது, சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்ளவை எம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா புஷ்பா பிரச்சினை

கட்சித் தாவல் தடை சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அமர்சிங்,ஜெய்பிரதா ஆகியோரின்  மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால், தற்போது தமிழகத்தில்  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சசிகலா புஷ்பா எம்.பி.விவகாரத்தில் இதே கேள்வி எழுந்துள்ளது.கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறலாமா? அவ்வாறு கட்சிக் கொறடாவின் வார்த்தையை மீறினால் பதவியை இழக்க நேரிடுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

அதே சமயம், 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட விஸ்வநாதன் வழக்கின் அடிப்படையில் சசிகலா புஷ்பாவின் எம்.பி. பதவி பறி போக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.