ஒரு பேனாவின் பயணம் – 67 – சுதாங்கன்

பதிவு செய்த நாள்

01
ஆகஸ்ட் 2016
21:52

சந்திரபாபு நியூடோன் ஸ்டூடியோ விற்குள் எப்போது நுழைந்தார்?

அவர் நுழைந்த வருடம், 1951.

அப்போது அங்கே என்.எஸ். கிருஷ்ணன் ‘மணமகள்’ படத்தை இயக்கிக்கொண்டி ருந்தார்.

அன்றைய படப்பிடிப்பின் இடைவேளையின் போது எம்.ஜி.ஆர்., என்.எஸ்.கிருஷ்ணனுடன் பேசிக்கொண்டி ருந்தார்.

சந்திரபாபு, அங்கே சென்றார்.

இவரைப் பார்த்தவுடன்  எம்.ஜி.ஆர்., ` நீ எப்படி உள்ளே வந்தே?’

`ஒரு பொய் சொல்லிட்டுத்தான் உள்ளே வந்தேன்!’

`என்ன பொய்?’

`இன்னிக்கு இங்கே ‘மணமகள்’ படப்பிடிப்பில நான் இருப்பேன். என்னை வந்து பாருன்னு எம்.ஜி.ஆர். சொன்னாருன்னு அப்படீன்னேன்.’’

`அப்படியா? நல்ல காரியத்துக்கு பொய் சொல்றது தப்பில்லே’ என்றார் என்.எஸ். கிருஷ்ணன்.

அன்றிலிருந்து எம்.ஜி.ஆரும், சந்திரபாபுவும் நெருங்க ஆரம்பித்தார்கள்.

அவர்களின் நெருக்கம் `குலேபகாவலி’ படம் மூலமாக இன்னும் அதிகமாயிற்று.

இப்படி சினிமாவில் அறிமுகமான சந்திரபாபு, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என்று எல்லோர் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தார்.

சந்திரபாபு 1974ம் ஆண்டு காலமானார்!

தன் மாடி பெட்ரூமிற்கே கார் போகிற மாதிரி வீடு கட்டி வாழ்ந்தவர்.

இறுதி காலத்தில் அவரது சடலத்தை எடுக்கக் கூட ஆளில்லாமல் நான்கைந்து பேர் மட்டும்  உடனிருக்க இறுதி பயணத்தை மேற்கொண்டனர்.

அவர் இறந்த போது மனோரமா சொன்னார் ` எனக்கும் சந்திரபாபுவிற்கும் ஏதோவோர் ஒற்றுமை இருந்தது. நான் நாடகங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தபோது சந்திரபாபு நகைச்சுவை நடிகராக நடித்துக்கொண்டிருந்தார். கதாநாயகியாக இருந்த நான் நகைச்சுவை நடிகையான பிறகு ஒரு படத்திலாவது சந்திரபாபுவிற்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அவர் `குமாரராஜா,’ `கவலையில்லாத மனிதன்’ படங்களில் கதாநாயகனாக நடித்த பிறகு, `இனிமேல் நான் காமெடியனாக நடிக்க மாட்டேன். ஹீரோவாகத்தான் நடிப்பேன்’என்று திடீரென்று அறிக்கை விட்டார்.

அதைக் கேட்டதுமே, `இனி என் ஆசை நிறைவேறாது’ என்று மிகவும் வருத்தப்பட்டேன்.

பிறகு `போலீஸ்காரன் மகள்,’ `யாருக்குச் சொந்தம்,’ `நீதி’ போன்ற படங்களில் அவருக்கு ஜோடியாக நடித்ததில் என் ஆசை நிறைவேறியது. `போலீஸ்காரன் மகள்’ படத்தில் நான் பேசிய சென்னை பாஷையை அவர் பலமுறை பாராட்டியிருக்கிறார்.

சந்திரபாபுவை கோவையில் நடந்த ஒரு விழாவில் நடிகை எல்.விஜயலட்சுமிதான் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

அவர் மறைவதற்கு இரண்டு நாட்கள் முன்பு நான் சேலத்தில் இருந்தேன். அப்போது என் மகனிடம் அவரைப் பற்றி இரவு ஒரு மணி வரையில் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பாடின பாட்டுக்களையெல்லாம் பாடிக் காண்பித்தேன். இது ஏதோ தற்செயலாகத்தான் நடந்தது. சேலத்திலிருந்து சென்னை வந்ததும், ` சந்திரபாபு மறைந்துவிட்டார்’ என்ற செய்தி என்னை திகைக்க வைத்தது’ என்றார் மனோரமா.

சந்திரபாபு மறைந்த அதே ஆண்டில் நடிகர் சசிகுமார் மறைந்தார்.

இவர் யார்?

ஏவி.எம். தயாரித்த மறக்க முடியாத படங்களில் ஒன்று ` காசேதான் கடவுளடா’. 

இதில் பிரபலமான பாடல் `இன்று வந்த இந்த மயக்கம்.’ இந்த பாடலின் நாயகர் இவர்தான்.

பட்டப்படிப்பை முடித்துவிட்டு, ராணுவத்தில் சேர்ந்த இவர், எல்லைப் பகுதிகளில் தீரச் செயல்கள் புரிந்தவர். நாடகத்திலும், திரையிலும் ஜொலித்துக்கொண்டிருந்த போது இவரும், இவரது மனைவியும் வீட்டில் நடந்த தீ விபத்தில் சிக்கி, மரணத்துடன் போராடி, உயிர் நீத்தார்கள்.

நடை பழகும் குழந்தையையும் தனது நட்டுவாங்கத்தினால் நாட்டியமாட வைத்த `கே.என். தண்டாயுதபாணி பிள்ளை’, தனது பள்ளியில் பயின்ற மாணவிகளை தரணி எங்கும் புகழடையச் செய்தவர்.

அவரும் இதே வருடம்தான் மறைந்தார்.

அதே போல் கர்நாடக இசை உலகில் 70 ஆண்டுகாலமாக ஒலித்துக்கொண்டிருந்த ஒரு வெங்கல நாதம் அந்த வருடம் தன் ஓசையை அடக்கிக்கொண்டது.

அவர்தான் செம்பை வைத்தியநாத பாகவதர்!

நாடகத்தை சினிமாவைப் போல் காட்டியவர் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை!

அவருடைய ‘தசாவதாரம்’, ‘பக்த பிரகலாதன்’, ‘கிருஷ்ண லீலா’, ‘ராமாயணம்’ போன்ற நாடகங்களைப் பார்த்தவர்கள் இது நாடகமா, திரைப்படமா என்று வியந்தார்கள்.

அப்படிப்பட்ட நாடக மேதை அதே ஆண்டில் மறைந்தார்.

அந்த ஆண்டில்தான் சோ ஒரு `டைம் காப்ஸ்யூலை’ பொங்கல் அன்று சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களை சிரிக்க வைத்து, சில மணி நேரங்கள் கவலைகளை மறக்கச் செய்து ` துக்ளக்’ இதழின் நான்காம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடினார்.

அந்த விழாவில் துருப்பிடித்த ஒரு தகர டப்பாவை `டைம் காப்ஸ்யூல்’ என்று சொல்லி மேடைக்கு அருகிலேயே மண்ணில் புதைத்தார்.

அதில் என்ன எழுதி புதைக்கப்பட்டது?

இதை விழா இறுதியில் சோ படித்தார்.

 எல்லோரும் வாய் விட்டு சிரித்தார்கள்.

`ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர் சிப்பாய்க் கலகம்.

அப்போது சிப்பாயாக இருந்த சோ அவர்கள், அந்தக் கலகத்தில் முன்னணியில் நின்றார். பிறகு, பல சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தி, கடைசியாக 1947 ஆகஸ்ட் 15ம்தேதி மவுண்ட்பேட்டனிடமும் அட்லியிடமும் பேசி, சோ , தானே போர் விமானங்களில் அமர்ந்து, டாங்குகளை ஓட்டி, கடல்மார்க்கமாக சென்று அதிதீவிர சாகசச் செயல்களைப் புரிந்தார்.

சோ தாஜ்மகாலைக் கட்டினார்.

தஞ்சை பெரிய கோயிலை கட்டினார்.

கூவம் ஆறு வெட்டினார்.

தனது முற்பிறவிகளில் சோ, காளிதாசனாகவும், கம்பனாகவும், பெர்னாட்ஷாவாகவும் அவதரித்தார்.

இப்படி சோ படித்துவிட்டு, ` இதில் எத்தனை உண்மை இருக்கிறதோ, அத்தனை உண்மை இந்திரா காந்தி டில்லியில் புதைத்த கலப் பெட்டகத்திலும் இருக்கிறது’ என்றார்.

அப்போது தமிழகத்தில் கருணாநிதிதான் முதல்வர்.

வேளாண் துறை 63 நாட்களுக்குள் பயிராகின்ற பாசிப்பயறு ஒன்றுக்கு கருணாநிதி `அஞ்சுகம்’ என்று

பெயர் வைத்தார்.

அது அவரது தாயாரின் பெயர்!

அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி., மாணவன்!

இன்னும் நான்கு மாதத்தில் பொதுத்தேர்வு!

அரையிறுதி தேர்வில் ஏதோ தேறுகிற மாதிரி மார்க் வாங்கினேன்.

ஆனால் அதற்கு முன்புதான் என் கவனத்தை சிதறடிக்கிற மாதிரி இத்தனை சம்பவங்கள்.

அரையிறுதி பரீட்சைக்கு முன் செப்டம்பர் மாதம் ஓடியன் திரையரங்கில் ஜெய்சங்கர், லட்சுமி,  ரவிச்சந்திரன், ஜெயசித்ரா நடித்த `அக்கரை பச்சை’ திரைப்படம் வெளியானது.

இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ். விஸ்வநாதன்.

இதில் அவரே ஒரு பாடலை பாடியிருப்பார்.

அந்தப் பாடல் அப்போதிலிருந்து இன்றுவரை காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது!

அந்தப் பாடலின் கருத்தும், இசையும் அத்தனை ஆழமானவை!

`இல்லாத பொருள் மீது – எல்லோருக்கும்

ஆசை வரும்

இக்கரைக்கு அக்கரை பச்சை

என்றும்

இக்கரைக்கு அக்கரை பச்சை

கல்தரையில் கை போட்டு

நீந்துகின்ற மனிதா!

காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?’

இந்த பாட்டை பாடிக்கொண்டே யிருப்பேன்!

அந்த ஆண்டு தீபாவளியின் போதுதான் கே. பாலசந்தரின் ` அவள் ஒரு தொடர்கதை’ படம் வெளியானது.

அப்போது தாத்தா வீடு தி. நகர் மதுரை வீரன் கோயில் தெருவிற்கு மாறியிருந்தது.

அருகேதான் கிருஷ்ணவேணி தியேட்டர்.

அங்கேதான் `அவள் ஒரு தொடர்கதை’ படம் வெளியானது.

இந்த படமும், பாடல்களும் அதன் வரிகளும் உலுக்கி எடுத்து மனப்பாடமாகின.

பாடப்புத்தகங்கள் காணாமல் போயின!

`தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு!’

`ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்’

`கடவுள் அமைத்து வைத்த மேடை

இணைக்கும் கல்யாணம் மாலை’

தமிழ் பாடங்களின் செய்யுள்களை விட

இந்த படப்பாடல்கள்தான் என்னை ஆட்டிப்படைக்கும் செய் பொருளானது!

அந்த வருடம் மாணவர்களை ஈர்த்த கதாநாயகராக இருந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த்.

கன்னடத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ஒரு படத்தை தமிழில் எடுத்தார்கள்.

அந்த படம் தான் ‘ராஜநாகம்’!

நடிகர் ஸ்ரீகாந்த்தும், சுபா என்கிற நடிகையும் நடித்திருந்தார்கள்.

இந்த சுபாதான் பாலசந்தரின் ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் மூன்று சகோதரிகளில் ஒருத்தியாக நடித்திருந்தார்.

அந்த படத்தில் இவரும் `பல்லவி ஒன்று மன்னவன் கேட்க பாடுவேனடி! என்று பாடுவேனடி’ என்ற பாட்டை படத்தில் பாடுவார்.

`ராஜநாகம்’ படம் சென்னை சித்ரா தியேட்டரில் வெளியானது.

 இந்த படத்திற்கு வி. குமார்தான் இசை!

`தேவன் வேதமும் கண்ணன் கீதையும் ஒரு பாடலில் இங்கு சங்கமம்’

அந்த படத்தில் மிக ஹிட்டான பாடல்!

இத்தனை படங்களும், பாடல்களும் மண்டையில் தாக்க, பள்ளியிறுதி படிப்பு எப்படி மண்டையில் ஏறும்?

ஆனாலும், அரையிறுதி பரீட்சையில் நான் வாங்கிய மதிப்பெண்களால் நான் தேறிவிடுவேன் என்கிற நம்பிக்கை என் பெற்றோருக்கு இருந்தது.

ஆனால், இந்த தேசத்தின் மீதான நம்பிக்கை கொஞ்சம் குறைய ஆரம்பித்த வருடம் அடுத்த ஆண்டின் துவக்கம், அதாவது 1975!

அப்போது சர்வ பலம் பொருந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தார்.

தன்னை வளர்த்த காங்கிரஸ் கட்சியை இரண்டாக பிளந்த இந்திரா காந்திக்கு 1975ம் வருடம் ஜூன் மாதம் 12ம் தேதி ஒரு சோதனையாக அமைந்தது.

உத்தரபிரதேச ரேபரெலி தொகுதியில் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்போது இந்திரா காந்திக்கு இருந்த செல்வாக்கு அலாதியானது!

1971 இந்தியா – பாகிஸ்தான் போரில் இந்தியா வென்று, கிழக்கு பாகிஸ்தானைப் பிரித்து வங்காள தேசம் என்கிற ஒரு தனி நாடு இந்தியாவால் உருவானது.

இந்த போர் முடிந்த பிறகுதான் அப்போது ஜனசங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், இந்திராவை ‘துர்கை’ என்று வர்ணித்தார்.

அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. இன்றைய பாரதீய ஜனதாதான் அன்றைய ஜனசங். அவர்களுக்கு எப்போதுமே பாகிஸ்தானைப் பிடிக்காது.

இந்த வங்காள தேச யுத்தம் இந்திராவின் புகழை உலக அளவில் எங்கோ கொண்டு சென்றது.

எதிர் கட்சிகள் பலவீனமாக கிடந்தன!

எதிர் கட்சிகள் சிதறிக் கிடந்தன!

நாடாளுமன்றத்தில் எல்லோர் கவனத்தையும் கவர பிலு மோடி போன்றவர்கள் தங்கள் சட்டையில் `நான் ஒரு சிஐஏ ஏஜன்ட்’ என்று பாட்ஜ் அணிந்து கொண்டு வந்து எல்லோர் கவனத்தையும் கவர்ந்ததோடு சரி!

ஜெயபிரகாஷ் நாராயணன் மட்டுமே தேசத்தை கவர்ந்த தலைவராக இருந்தார்.

அவர் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை. பெரும்பாலும் பாட்னாவிலேயே தங்கியிருந்தார்.

ஆனால், அவர் எப்போதெல்லாம் பேசினாரோ, தேசம் அவரை கூர்ந்து கவனித்தது!

காரணம், அவருடைய காந்திய பின்னணி!

நேருவே அவருக்கு பதவி அளித்த போதும், அதை ஏற்க மறுத்தவர்!

அதனால் அவரது சொல்லுக்கு ஒரு மரியாதை இருந்தது.

ஒரு புறம் காங்கிரஸ் அரசின் ஊழலை எதிர்த்தார்.

அதே சமயம் உறங்கி கொண்டிருக்கும் மக்களையும் விமர்சித்தார்.

1975 வருடத் துவக்கத்தில் இதுதான் மக்களை தட்டியெழுப்ப சரியான தருணம் என்று அவர் நினைக்க ஆரம்பித்தார்.

இவர் தட்டியெழுப்பிய உணர்ச்சியினால் அவரது குரலுக்கு `ஜேபி இயக்கம்’ என்றே பெயர்  வர ஆரம்பித்தது!

லேசான காற்றாக துவங்கிய அவரது காங்கிரஸ் எதிர்ப்பு பிரசாரம் நாளடைவில் ஒரு பெரும் சூறாவளியாக நாடெங்கும் கிளம்பியது.

இந்திரா காந்தி ஊழலின் ஒரு மொத்த வடிவம் என்று இந்திய மக்கள் நினைக்க ஆரம்பித்த சமயம் அது!

அவருடைய ஊழல் பணத்தினால் மட்டுமல்ல, அதிகார துஷ்பிரயோகமும் சேர்ந்தது என்று மக்கள் நம்ப ஆரம்பித்திருந்தார்கள்.

தன் வழியில் நிற்பவர்கள் யாராகயிருந்தாலும் அவர்களை தூக்கியெறிய இந்திரா காந்தி அந்த காலகட்டத்தில் தயங்கவேயில்லை!

ஜெயபிரகாஷ் நாராயணுக்கும், இந்திரா காந்திக்குமிடையே மோதல் வந்த போது ஜெ.பி.க்கு வயது 70.

இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியினால் குரல் ஒடுக்கப்பட்டிருந்த மக்களை தட்டி எழுப்ப ஜெ.பி. 1973ம் ஆண்டில், பாட்னாவில் ஒரு கூட்டத்தை கூட்டினார்.

அந்த கூட்டத்திற்கு அன்றைக்கு தலைமை தாங்கியவர், பாட்னா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்.

அன்று கூடிய கூட்டத்தைப் பார்த்துத்தான் ஜெ.பி.க்கு புதுத் தெம்பே வந்தது.

அதுதான் இந்திரா காந்திக்கு எதிராக முதல் தேச எழுச்சி போராட்டமாக உருவெடுத்தது.

அந்த கூட்டத்தின் முடிவில்தான் ஜெ.பி தன் எதிர்கால திட்டங்களை அறிவித்தார்.

`தேசத்திற்கு ஒரு மாற்றம் தேவை’ என்று அறிவித்தார் ஜெ.பி.

அப்போதுதான் இந்திரா காந்தியின் ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு ஒரு புதிய ஆட்சியை கொண்டு வருவோம்.

அந்த மாற்றத்தை கொண்டு வரும் புதிய கட்சிக்கு பெயர் `ஜனதா’ என்று அறிவித்தார் ஜெ.பி.

ஆனால், அவர் போராட்டத்தை அறிவித்த போது உடனடி தேர்தல் வேண்டுமென்று கேட்கவில்லை.

`மாற்றம்’ இப்போது தேவை என்றே தன் போராட்டத்தை துவக்கினார்.

அதே வேகத்தில் அவர் குஜராத்தில் நடந்த மாணவர் போராட்டமான நவ நிர்மானுக்கு தலைமை தாங்கப் போனார்.

1975ம் ஆண்டு இந்தியாவின் கொந்தளிப்பான ஆண்டு!

(தொடரும்)