சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர். – 53 – துரை கருணா

பதிவு செய்த நாள்

29
ஜூலை 2016
19:47

மாணவர்களும், அரசியலும்!

1979ம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் தமி­ழக சட்­ட­ச­பை­யில் ஆளு­நர் உரைக்கு நன்றி தெரி­விக்­கும் தீர்­மா­னத்­தின் மீது நடை­பெற்ற விவா­தங்­க­ளுக்கு பதி­ல­ளித்து முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். பேசி­யது :–

எம்.ஜி.ஆர் : மாண­வர்கள் பிரச்னை தீர, ஒரே வழி இருக்­கி­றது. முன்­பொரு முறை, மாண­வர்கள், பெற்­றோர்­கள், பிர­மு­கர்­கள், கல்­லூரி ஆசி­ரி­யர்கள் ஆகி­யோரை வைத்துப் பேசி ஒரு அமைப்பை உரு­வாக்கி அதன் மூலம் அவர்­க­ளுக்கு வேண்­டி­ய­வற்­றை, நிறைவேற்­று­வ­தற்­கு­ரிய சூழ்­நி­லையை உரு­வாக்கித் தந்தேன். கொஞ்ச நாளைக்கு அந்த அமைப்பு இருந்­தது. மீண்டும் குழப்பம் கிளம்­பி­யி­ருக்­கி­றது.

நான் அண்­மையில் சொன்­னது போல் இதற்கு முன்னால் நான் திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கத்தில் உறுப்­பி­ன­ராக இருந்­த­போது என்ன சொன்­னேனோ அதையே இப்போதும் சொல்­கிறேன். மாண­வர்கள் அர­சியல் கட்­சி­களின் பிடியில் இருந்து விடு­பட வேண்டும். அனைத்­திந்­திய அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கம், அந்த கட்­சியின் பொறுப்பில் இருக்­கிற தமி­ழக அரசின் சார்பில் நான் சொல்லிக் கொள்­கிறேன். எங்­கள் கட்சி அந்த பணியை செய்­யக்­கூ­டாது என்று தடுக்­க, அந்த பணியில் இருந்து விடு­பட தயா­ராக இருக்­கி­றது அனைத்­துக்­கட்சி நண்­பர்­க­ளும், பெரி­ய­வர்­களும் அப்­படி ஒப்­புக்­கொள்ள முன்­வந்­தார்கள் என்றால் அர­சியல் கட்சி அங்கே நுழை­யாமல் மாண­வர்­கள்  தங்கள் வேலையை பார்த்­துக்­கொண்­டு, படித்துக் கொண்­டு இருப்­பார்கள். அவர்­க­ளுக்கு பிரச்னை ஏதேனும் வரு­கி­ற­போது அதற்கு அர­சி­யல் தலை­வர்­களின் துணையைக் கொண்டு அந்த நிலை­மை­களை எப்­படி சமா­ளிக்­கலாம் என்­கிற வகையில் அவர்கள் செயல்­ப­ட முன் வந்தால் இப்­ப­டிப்­பட்ட பிரச்­னைகள் வராது. 

இதற்கு அர­சியல் தலை­வர்கள் ஏதா­வது கார­ண­மாக தடை­யாக இருக்­கி­றார்­களோ என்ற ஐயம் எனக்கு ஏற்­ப­டு­கி­றது. ஆக­வே, நான் கேட்­டுக்­கொள்­கி­றேன், நமக்­குள்ளே இருக்கும் காழ்ப்­பு­ணர்ச்சி, கட்சி வேறுபாடு  இவை­களை மறந்து மாண­வர்­களின் நலன் கருதி நாம் எல்­லோரும் உட்­கார்ந்து பேசி,­ இதற்கு என்ன வழி என்­பதை கண்­டு­பி­டித்து நிறை­வேற்­றுவோம். மாண­வர்கள் கல்வி கற்­க வேண்­டிய நேரத்தில் அவர்கள் நன்­றாக படித்­து தேற­வேண்­டிய நேரத்தில் அதற்­கா­ன நல்ல நிலை­மையை உரு­வாக்கித் தரு­வ­தற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உட்­கார்ந்து பேசு­வோம், முடிவு எடுப்­போம், அதை எல்­லோரும் பின்­பற்­று­வோம், அதற்கு உங்கள், எல்­லோ­ரு­டைய ஒத்­து­ழைப்­பை­யும் நான் வேண்­டு­கி­றேன்.

நாடா­ளு­மன்ற உறுப்­பினர் முரு­கையன் கொலையை பற்றி இங்கே ஒரு கருத்தை வெளி­யிட்டு இருக்­கி­றார்கள். அதிலும் குறிப்­பாக பேரா­சி­ரியர் அவர்கள் ஒரு கேள்­வியை கேட்­­டார்கள். அவரை கொலை செய்­தது ஒரு­வ­ரா, பலரா என்­பதை சொல்ல வேண்டும். அதை முதலில் நான் தெரி­வித்­­தாக வேண்டும் என்று சொன்­னார்கள். நான் அவர்­க­ளுக்கு பணி­வோடு தெரி­வித்­துக்­கொள்­கிறேன். முத­ல­மைச்சர் என்ற பொறுப்பில் நான் இங்கே உட்­கார்ந்து கொண்டு ஒருவர்தான் அல்­லது பலர்தான் என்­பதை விசா­ர­ணைக்கு முன், சாட்­சிகள் கொடுப்­ப­தற்கு முன், ஆதா­ரங்கள்  வரு­வ­தற்கு முன், எப்­படி சொல்ல முடியும் என்­பதை அவர்கள் தயவு செய்து சிந்­தித்து பார்க்க வேண்­டும், நான் எப்­படிச் சொல்ல முடியும்? உண்­­மை­யி­லேயே யாரா­வது ஒருவர் அல்­லாமல் பல பேர் செய்து இருந்­­து, அதை மாற்ற முயற்­சித்­து, அந்த உண்மை வழக்கு மன்­றத்தில் நிரூ­பிக்­கப்­படும் என்­­றால், சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­களால் நிச்­ச­ய­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கு­வ­தற்கு தமி­ழக அரசு தயங்­காது என்­பதை நான் உறு­தி­யாக கூறிக்­கொள்­கிறேன்.

க. அன்பழகன் (திமுக) : முரு­கையன் கொலைக்குக் கார­ண­மாக இருந்­த­வர்கள் ஒரு­வ­ரா, பலரா என்­பதை முத­ல­மைச்சர் என்ற முறையில் நான் எப்­படி சொல்ல முடி­யும், சொல்­லி­வி­ட­லா­மா, அது எத்­தனை பேர் என்­பது நீதி­மன்­றத்தில் நிரூ­பிக்­கப்­ப­டு­மா­னால்தான் தெரியும் என்று சொன்­னார்கள். முத­ல­மைச்சர் அவர்கள் எங்­க­ளுக்கு சொல்ல வேண்டாம். வெளிப்­ப­டை­யா­கவும் சொல்­ல­வேண்டாம். ஆனால் நான் சொல்ல விரும்­­பு­வ­து, ஒரு­வர்தான் என்ற அடிப்­ப­டையில் வழக்கு பதிவு செய்­யப்­பட்­டு,  அத­னால் அந்த வழக்­கு நிரூ­பிக்கப்­ப­டாமல் போவ­தற்குரிய நிலைமை உண்­டா­னால், அதன் மீது நீதி­மன்றம் தீர்ப்பு கொடுத்த பிற­கு, பலபேர் என்று பின்னர் நீதி மன்­றத்தில் எப்­படிச் சொல்ல முடியும். ‘காக்­னிசென்ஸ் ஆப் தி அபென்ஸ் பை செவரல் அதர் பீபிள்’ என்று சொல்லி இப்­போதே சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை அதி­கா­ரிகள் கண்­டு­பி­டித்து சேர்ப்­பார்­க­ளானால் அது சரி­யா­ன­தாக இருக்கும். அந்த வகையில் தான் ஆட்­சிப்­பொ­றுப்பில் உள்ள முத­ல­மைச்சர் என்ற வகையில் உங்­களைக் கேட்டுக் கொள்­கி­றோம், அருள் கூர்ந்து உங்­க­ளு­டைய இலாகா அதி­கா­ரி­களை பயன்­ப­டுத்தி நிலைமை தவ­றாகப் போய்­வி­டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நிலை­மைகள் உண்­மைக்கு மாறாக போய்­விடக்­கூ­டாது. இதுதான் இந்த அவையில் உள்ள மாற்­றுக்­கட்சி உறுப்­பி­னர்­களின் எண்­ண­மா­கும் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கிறேன்.

மு. அம்­பி­கா­பதி (கம்யூ) : அன்­ப­ழகன் பேசி­யதைத் தொடர்ந்து ஒரு கருத்தை குறிப்­பிட விரும்­பு­கிறேன். முத­ல­மைச்சர் கொலை செய்­தவர் ஒரு­வரா, பலரா என்­பதை இப்­போது கூறு முடி­யாது என்று சொன்­னார்கள். சரி. ஆனால், அந்த ஊரை சேர்ந்­த­வர்கள் அளித்த சாட்­சி­யத்தை ஏற்க போலீசார் மறுத்­தி­ருக்­கி­றார்கள். அவ­ரு­டைய மனை­வியின் சாட்­சி­யத்தை பதிவு செய்­ய­வில்­லை; அவரை விசா­ரணை செய்­ய­வில்லை. அதற்­க­டுத்­து, 5ம் தேதி நிலத்­த­க­ராறு சம்­பந்­த­மாக என்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி­யி­ருக்­கிறார் என முரு­கையன் புகார் கொடுத்­தி­ருக்­கி­றார், 12-ம் தேதி தீர்ப்பு வந்­தி­ருக்­கி­ற­து, இதை­யெல்லாம் நான் முத­ல­மைச்­சரின் கவ­னத்­திற்கு கொண்டு வரு­கி­றேன்.

துரை முருகன் (திமு­க) : அதை­யொட்டி நானும் ஒரு கருத்தை சொல்­கிறேன். முத­ல­மைச்சர் அவர்கள் ஒரு விளக்­கத்தை சொன்­னார்கள். ஒரு­வ­ரா, இரு­வரா என்று எப்­படிச் சொல்ல முடியும் என்று கூறி­னார்கள். அதை நான் ஒப்­புக்­கொள்­கிறேன். ஆனால் ஒரு அதி­காரி அவர் ஒரு­வர்தான் ஓங்­கி, ஓங்கி குத்­தி­யி­ருக்­கலாம் என்று சொல்­லி­யி­ருக்­கி­றாரே அவர் மீது என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கி­­றீர்கள். உங்­க­ளு­டைய பதில் நியா­ய­மா­னது. ஆனால் ஒரு அதி­காரி இப்­படிச் சொல்­லி­யி­ருக்­கி­றா­ரே?

உமா­நாத் (மா.­கம்­யூ) : முத­ல­மைச்சர் சொன்­னதை நான் ஏற்­றுக்­கொள்­கிறேன். 

இன்­வெஸ்­டி­கேஷன் முடி­யாமல் இருக்­கும்­போது இந்த பொறுப்­பான பத­வியில் இருக்கும் நான் கொலை செய்­தவர் ஒரு­வ­ரா, பலரா என்று எப்­படி சொல்ல முடியும் என்­­றார்கள். சொல்ல முடி­யாது. சொல்­லக்­கூ­டாது. அதே பேசிஸ் அதி­கா­ரிக்கும் அப்ளை ஆகும் அல்­லவா? அப்­படி இருக்க அந்த டிஐஜி. இன்­வெஸ்­டி­கேஷன் கம்ப்ளீட் ஆகாமல் இருக்­கும்­போது ஒரு­வர்தான் செய்தார் என்று ஸ்டேட்மெண்ட் விட்­டி­ருக்­கி­றா­ரே, அது சரியா?

அடுத்­தது கோர்ட் முடிவு செய்தால் என்று முத­ல­மைச்சர் சொன்னார். கோர்ட்டின் தீர்ப்பு பிர­தான அசிஸ்­ட­ன்­சான இன்­வெஸ்­டி­கேஷன் ஏஜென்­சியைப் பொறுத்­துத்தான் இருக்­கி­றது. இன்­வெஸ்­டி­கேஷன் ஏஜென்சி கொலை செய்­தவர் ஒரு­வர்தான் என்ற முடி­வுக்கு வரு­மா­னால், அப்­படி ஒரு ‘ப்ரி ஜட்­ஜிடு வியூ’ எடுத்து­விட்டால், கோர்ட் தீர்ப்பும் அப்­ப­டித்தான் இருக்­கும்.

எம்.ஜி.ஆர் : நண்பர் முரு­கையன் அவர்கள் சவ அடக்­கத்­தன்று நான் அங்கே சென்­றி­ருந்­த­போது என்ன நடந்­தது என்­பதை எல்லாப் பத்­தி­ரி­கை­க­ளிலும் சரி­யாக வெளி­யிட்­டார்­களா என்­பது எனக்கு தெரி­யாது. ஆனால், உறு­ப்­பினர் அம்­பி­கா­பதி அங்கே இருந்­தார்கள். அங்கே நான் வருத்தம் தெரி­வித்தது மட்­டு­மல்­ல;  இதனால் ஒரு கொள்­கையை அழித்து விட முடி­யாது என்று அங்கே தெரி­வித்­த­தோ­டு, இந்த வழக்கை சரி­யாக விசா­ரிக்­காமல் யாரா­வது தவறு செய்­தால், அவர் எவ்­வ­ளவு பெரிய அதி­கா­ரி­யாக இருந்­தாலும் தமி­ழக அரசு அவர் மீது தகுந்த நட­வ­டிக்கை எடுக்கும் என்று நான் சொன்­னதை கேட்­டு­விட்­டு, அங்கே கூடி­யி­ருந்த சிலர் கைதட்­டி­ய­தை­யும், இங்கே அப்­ப­டி­யாரும் கை தட்­டக்­கூ­டாது என்று நான் கேட்டுக் கொண்­ட­தையும் அவர்கள் அறி­வார்­கள்.இருந்­தாலும் சிலர் நான் வருத்தம் தெரி­விக்­க­வில்லை என்று சொல்லிக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அலட்­சி­ய­மாக இருக்­கிறேன் என்று சொல்­கி­றார்கள். அதி­கா­ரிகள் தவறு செய்­தி­ருந்தால் நிச்­ச­ய­மாக அவர்கள் மீது தக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். பத்­தி­ரி­கை­களில் இப்­படி செய்­திகள் வரும்­போது ஒவ்­வொருவருக்­கும் சில சங்­க­டங்கள் வரும். அதை­யெல்லாம் உணர்ந்து அரசு தகுந்த முறையில் விசா­ரணை செய்­து, உரியநட­வ­டிக்கை எடுக்­கும். இப்­ப­டிப்­பட்ட நேரத்தில் என்ன நடக்­கி­றது என்று பார்த்து அவ­ச­ரப்­ப­டாமல் உண்­மை­யி­லேயே ஒருவர் தவறு செய்­தி­ருக்­கிறார் என்று தெரிந்தால் மேற்­கொண்டு அர­சையோ அல்­லது அதி­கா­ரி­க­ளையோ கலந்து என்ன நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று அர­சுக்கு யோசனை சொல்­லி, நட­வ­டிக்கை எடுக்க உறுப்­பி­னர்கள் உத­வி­யாக இருந்தால் எந்த சந்­தே­கமும் வராமல் பார்த்து கொள்ள முடியும் என்று நான் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன்.

எதிர்­கா­லத்தில் இப்­ப­டிப்­பட்ட நல்ல சூழ்­நி­லை­களை உரு­வாக்­கிக்­கொள்­வது நல்­லது என்று நான் கரு­து­கிறேன். உறுப்­பினர் உமாநாத் வீட்­டிலே சோடா பாட்டில் எறிந்­தது பற்றி குறிப்­பிட்­டார்கள். இந்த சம­யத்­திலே நான் ஒன்றை குறிப்­பிட விரும்­பு­கிறேன். நான் உசி­லம்­பட்­டி­யிலே பேசிக்­கொண்­டி­ருந்த போது என்­மீது கற்கள் வீசி எறி­யப்­பட்­டது. அப்­போது என்னை காப்­பாற்ற வந்த நண்­பர்கள் அந்த அடி­யினை வாங்­கி­யதை நான் நினைத்துப் பார்க்­கும்­போது இந்த நிலை­மையை என்னால் உணர்ந்­து­கொள்ள முடி­­கி­றது. அப்­ப­டிப்­பட்ட வன்­மு­றை­யிலே இறங்­கு­ப­வர்கள் இந்த சமு­தா­யத்­தி­னு­டைய பெயரை கெடுப்­ப­வர்கள். அவர்கள் அமை­தியை கெடுக்­கின்ற கொடு­மைக்­கா­ரர்கள் என்­கின்ற வகையில் அவர்கள் மீது நாம் நட­வ­டிக்கை எடுப்­பது நமது கடமை என்­ப­தையும் அந்த நட­வ­டிக்கை கட்­டா­ய­மாக எடுக்­கப்­படும் என்­ப­தையும் மீண்டும் இங்கே நான் கூறிக்­கொள்ள விரும்­பு­கிறேன். 

துரை முருகன் (திமு­க) : தவ­றான தக­வலைத் தந்த அதி­கா­ரிகள் மீது அதா­வது கொலைக்கு ஒருவர் தான் காரணம் என்று சொன்ன அதி­கா­ரிகள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று முத­ல­மைச்சர் உறுதி அளித்­த­தற்கு என்­னு­டைய நன்­­றியை நான் தெரி­வித்­துக்­கொள்ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கிறேன்.

எம்.ஜி.ஆர் : உறுப்­பினர் துரை­மு­ருகன் பி.ஏ.பி.எல். படித்­த­வ­ராக இருக்­கலாம். ஆனால் நான் அவரை விட வயதில் மூத்­தவன். இங்கே நான் சொல்­லா­ததை சொன்­ன­தாக சொல்லி அதனை எப்­ப­டி­யா­வது குறிப்­­பேட்­டிலே ஏற்­றி­விட வேண்டும் என்று முயல்­வது நிச்­ச­ய­மாக நடை­­பெ­றாது என்றும் அவர்கள் அப்­படி பேச வேண்டாம் என்றும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.

- தொடரும்