மன்னிப்பு கேட்கவும் தயார்!
1979ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து முதலமைச்சர் எம்.ஜி.ஆர். பேசியது :–
எம்.ஜி.ஆர் : நான் சேலத்தில் பேசிய ஒரு கருத்தைப்பற்றி இங்கே குறிப்பிட்ட உறுப்பினர் பேராசிரியர் அன்பழகனார் அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் செல்லும்பொழுது உளியால் அவர் காரில் தாக்கப்பட்டு, அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய செய்தி வருகிறபொழுது ஏன் அறிக்கை விடவில்லை என்ற குறையை அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சேலத்தில் நான் அதைப்பற்றி வேறு விதமாக குறிப்பிட்டிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை, பத்திரிகை ஏடுகளிலே பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நண்பர்கள் ஒரு சிலவற்றை அதில் மறைத்து விட்டார்கள். அது எனக்குச் செய்யும் நன்மை என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை. இதைப்போன்றவைகளை ஏன் குறிப்பிடுவதில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
க. அன்பழகன் (திமுக) : முதலமைச்சர் சேலத்தில் குறிப்பிட்டதைப்பற்றி ஒரு பத்திரிகையிலே வந்த செய்தி மட்டுமல்ல, அங்கேயுள்ள தோழரை சந்தித்த பொழுதும் அந்த செய்தியை ஏதோ முதலமைச்சர் நம்பாததைப்போல உளிக் கதையெல்லாம் சொல்கிறார்கள் என்ற அந்த கருத்து வந்தது. புதிய கதை என்று சொல்லி விட்டதற்கு பிறகு அந்த அனுதாப உணர்ச்சி அதிலேயிருந்து பிறக்கவில்லை. அந்த அனுதாப உணர்ச்சி பிறக்கவில்லை என்ற இந்த செய்திதான் மக்களிடம் இவ்வளவு நாளும் பரவியிருக்கிறது.
எம்.ஜி.ஆர் : நான் எந்தெந்த வகைகளிலே தாக்கப்பட்டவன், எந்த அளவிற்கு அந்த வேதனையை தெரிந்தவன் என்ற வகையில் என்னால் பேசமுடியும். யாருக்கு என்ன ஆபத்து வந்தாலும் அதைப்பற்றி நான் என்ன நினைப்பேன் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும்.
நான் அமெரிக்காவில் இருக்கும்பொழுதுகூட என் நண்பர் ஒருவரிடத்தில் சொல்லி, அவருடைய நண்பரிடம் இதை சொல்லுங்கள் என்று நான் சொல்லியதை அந்த நண்பர் நிச்சயமாக புரிந்து கொண்டிருப்பார்.
கொள்கை வேறுபாடு இல்லை என்ற நிலைமையிலிருந்தாலும், தொண்டர்களிடையே கட்சி வேறுபாடு என்ற நிலைமைகள் ஏற்பட்டு விட்டது என்பதையும், சிலநேரங்களில் கருத்துகளிலும், நடைமுறையிலும் நாம் வேறுபட்டிருக்கிறோம் என்ற நிலைமைகள் ஏற்பட்டு இருந்தாலும்கூட ஒரு உயிரை அழிப்பதன் மூலம் ஒரு கொள்கையை அழித்துவிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது என்பதை நான் சேலத்தில் குறிப்பிட்டு அண்ணா சொல்லியிருப்பதையும் நான் சொல்லியிருக்கிறேன்.
ஒரு கத்தியை வைத்துக்கொண்டு ஆயிரம் ஆட்களை கொன்றுவிட முடியும், ஆனால் ஆயிரம் கத்திகளை வைத்துக்கொண்டு ஒரு மனிதனுடைய உள்ளத்திலே இருக்கும் கொள்கையை மாற்றி விட முடியாது என்று அமரர் அண்ணா சொல்லியிருக்கிறார்கள் என்பதையும் அதே சேலம் கூட்டத்தில் பேசியிருக்கிறேன். இதுவும் வெளிவரவில்லை, இதைப்பற்றியும் பேராசிரியரின் நண்பர் அவரிடம் என்ன சொல்லியிருக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. இதைக்கூட மாற்றிச் சொல்லியிருக்கிறார்களோ என்னவோ எனக்குத் தெரியவில்லை.
ஒன்றை நான் சொல்கிறேன். அன்பு உணர்ச்சி எல்லோர்க்கும் இருக்க வேண்டுமென்பதில் நான் மாறுபட்டவன் அல்ல என்பதையும், இன்னொருவரை அழித்துவிட்டால்தான் நாம் வாழ முடியும் என்ற கொள்கைக்கு நான் சொந்தக்காரன் அல்ல, என்னுடைய கட்சியும் அந்த கொள்கைக்கு சொந்தம் அல்ல என்ற உத்தரவாதத்தை மட்டும் நான் துணிவோடு சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் ஆங்காங்கே சில பிரச்னைகள் எழும்பொழுது கருத்துக்களை சொல்ல வேண்டிய கட்டத்திற்கு ஒவ்வொருவரும் ஆளாகிவிடுகிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொன்னாலும், அரசியல் சூழ்நிலைக்கு நண்பர்கள் பொறுப்பாக இருந்தாலும் நாமும் அந்த உணர்ச்சிவசப்பட்ட நிலைக்கு ஆளாகிவிடுகிறோம். அந்த வகையில் சில பிரச்னைகளை நாம் சந்திக்கும்பொழுது வார்த்தைகள் வரலாம். ஆனால், கொலை முயற்சி என்பதை நாம் எப்பொழுதும் விரும்புகிறவர்கள் அல்ல, அதிலும் நான் அதை அனுபவித்தவன், பிறருக்கு அந்த துன்பம் வரக்கூடாது என்பதிலே அக்கறை உள்ளவனாக இருப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதோடு இன்னொன்றை நான் குறிப்பிட வேண்டும். இன்றைய தினம் காலையில் கூட உறுப்பினர் – யார் என்று நான் குறிப்பிட வேண்டாம். அவருக்கே தெரியும் கோபாலபுரத்திற்கு போவோம் என்று முதலமைச்சர் சொன்னார். அவர் பேசிய பேச்சு ஒலி நாடாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தேவையென்றால் நான் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கூறினார். நான் பேசிய பேச்சு இதுதான். நான் பேசிய பொதுக் கூட்டங்களில் அங்கங்கே அமளி ஏற்படுத்தப்பட்டது. நான் பொதுமக்களுக்கும் கட்சித் தோழர்களுக்கும் சொன்னேன், தயவுசெய்து நீங்கள் அமைதியாக இருங்கள், கல்லையோ, மண்ணையோ எறிபவர்கள் யார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த நீங்கள் அமைதியாக இருங்கள். லியாகத் அலிகானை சுட்டுக் கொலை செய்தவனை பொதுமக்கள், அவன் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு அடித்துவிட்டார்கள். நீங்கள் அதை செய்து விடுவீர்களென்றால் சாட்சிக்கு ஆள் இருக்காது. இதை செய்வதிலே நமக்கு இலாபம் இராது, அப்படி நடப்பது நம்முடைய கொள்கையும் அல்ல என்று சொன்னேன்.
இந்த பேச்சுக்கு அரை மணி நேரத்திற்கு பிறகு எங்கு போனாலும் மக்களே தூண்டினார்கள் என்றால், இப்படியே நீங்கள் அனைவரும் அவரை சந்திக்க வேண்டுமென்று போவீர்களென்றால், எத்தனை போலீசார் வந்து எத்தனை பேரை சுட்டுக் கொல்ல வேண்டியிருக்கும் என்று சொன்னேன்.
அங்கொன்றும் இங்கொன்றும் பேசிய இரண்டு வார்த்தைகளை எடுத்துக் கொண்டு, எதற்காக பேசினேன் என்பதை பற்றி கொஞ்சங்கூட என்னை நன்றாக தெரிந்திருந்தும் சிந்திக்காமல், இரண்டு வார்த்தைகளை மட்டும் சேர்க்கும்போது லார்ட் அமெரி, மகாத்மா காந்தியைப் பற்றி தெரிவித்த கருத்துக்களை போல், இதுவும் தவறான கருத்துக்களெல்லாம் உருவாவதற்கு காரணமாகி விடுகிறது என்பதை நான் சொல்லிக் கொள்கிறேன்.
சந்தேகம் இருந்தால் பேசித் தீர்த்துக் கொள்வோம். நான் தவறு செய்திருந்தால், பேராசிரியர் சொன்னதை போல் திருந்த தயார், மன்னிப்பு கேட்டுக்கொள்ளவும் தயார். ஆனால், சொல்லாத ஒன்றை – பேசத் தெரிந்தவர்கள் நாலும் படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள் – மற்றவர்கள் சொன்னதை வைத்து பேசுவது சரியாக இருக்காது.
ஒட்டுமொத்தமாக இன்னொரு விஷயத்தையும் நான் சொல்லியாக வேண்டும். மாணவர்கள் தாக்கப்படுகிறார்கள். மாணவர்களை கல்லூரிக்குள் புகுந்து மக்கள் தாக்கினார்கள் என்கிற பெயரில் ஆளுங்கட்சியின் தூண்டுதல் அல்லது ஆளுங்கட்சியினர் சிலர் ரவுடிகளை கையிலே வைத்துக்கொண்டு அங்கே போய் நடத்துகிற தாக்குதல் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் இங்கே பணிவோடு ஒரு நிலைமையை நினைவு படுத்த விரும்புகிறேன். இதை சொல்வதால் முன்பு நடந்தது அதனால் இப்பொழுதும் நடப்பது நியாயம்தான் என்கிற அளவில் அந்த கருத்தை சொல்கிறேன் என்று நினைத்து விடக்கூடாது. மக்கள் பேருந்தில் பயணம் செய்கிறார்கள், அவர்களுக்கும் மாணவர்கள் பிரச்னைக்கும், காவல் துறைக்கும் சம்பந்தம் கிடையாது. தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அது பொதுப்பிரச்னையாக மாறி குழப்பம் ஆகி விட்டது. அது வேறு விஷயம். ஆனால், இதற்காக பொதுமக்களை, பேருந்திலே செல்லும்போது கல்எறிவது, தாக்குவது என்று வந்துவிட்டால், அதை ஏற்க முடியாது, இதற்கு மாணவர்கள் ஆட்படுவதாக இருந்தால்கூட, பெற்றோர்கள், உடன்பிறப்புகள், அண்ணன்மார்கள் இந்த நிலைமைகளையெல்லாம் அவர்களுக்கு சொல்ல வேண்டாமா என்பதுதான் என்னுடைய கேள்வி.
முன்னொருமுறை அனைத்திந்திய அதிமுக ஆட்சியில் இல்லாத நேரத்தில் நான் திமுக உறுப்பினராக இருந்த நேரத்தில், சென்னையில் நடந்ததை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். சென்னையில் ஒரு கல்லூரியில் மாணவர்கள் வெளியே பஸ்களையெல்லாம் தாக்கி குழப்பம் ஏற்பட்டு பிரச்னை விபரீதம் அடைந்தபொழுது, பக்கத்திலே குடிசையிலே மற்ற இடங்களிலே இருந்த பொதுமக்கள் வந்து அவர்களை தாக்கினார்கள். போலீசார் குறுக்கிட வேண்டி வந்தது என்பதையும் இது ஆளுங்கட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்த கூடிய, பொதுவான மரபாகி விடுமோ என்றும் ஐயப்படுகிறேன். அந்த சந்தேகத்தை நாம் மாற்றியாக வேண்டும்.
அந்த நிலைக்கு அன்று நான் எப்படி திமுக.வில் இருந்தபோது பொறுப்பு இல்லையோ அதே போல் இன்றும் சொல்கிறேன். அந்த நிலைமைக்கு நான் பொறுப்பு இல்லை. ஆனால் மாணவர்களுக்கு இடையே சச்சரவுகளை உருவாக்குவதற்கும் ஒரு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இன்னொரு கல்லூரிக்குள் சென்று அவர்களை அடிப்பதும், அவர்களை பழிவாங்குவதும், அதிலே சிலரை பிடித்து வைக்கும் நிலைமை உருவாவதும், 100–க்கு மேற்பட்டவர்களை காவல் துறையினர் குறுக்கிட்டு தடுக்கும் போது விபரீதங்கள்நடைபெறுவதுவும், இவைகள் எல்லாம் நாட்டுக்கு நல்லதல்ல என்பதை உங்களை போலவே நானும் நினைக்கிறேன், என்பதை உங்கள் மனதில் பதிய வைக்க விரும்புகிறேன்.
– தொடரும்