கொரானோ பரவுவதைத் தடுக்க உள்ளூர் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்துங்கள்: மோடி அறிவுரை

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2022 23:07


புதுடெல்லி ஜனவரி 13,

கொரானோ பரவுவதைத் தடுக்க கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்துங்கள்; ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் காரணமாக சாதாரண மக்களின் பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது. அதனால் உள்ளூர் கட்டுப்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் கட்டுப்பாட்டுக்கான திட்டங்களை வகுக்கும் பொழுது மக்களின் பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும்  என்று  இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

டெல்டா மற்றும் ஓமைக்ரான் உருமாறிய வைரஸ்கள் காரணமாக கடந்த 236 நாட்களில் இல்லாத அளவுக்கு கூடுதல் தொற்றுக்கள் கண்டறியப்பட்ட ஜனவரி 13ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாந்தவியா கலந்து கொண்டனர்.

துவக்கத்தில் மாநில முதல்வர்கள் தங்கள் மாநிலத்தில் வைரஸ் தொற்று எந்த அளவு உள்ளது,அதனை கட்டுப்படுத்துவதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை விளக்கினார்கள்.

அதைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பேசினார்.

இந்தியா முழுக்க அனைத்து பகுதிகளிலும் புதிதாக கட்டுப்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. மிகவும் கூடுதலான வேகத்தில் மக்கள் மத்தியில் பரவும் ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் காரணமாக இந்தியாவில் தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன.

தொற்றுக்களை கட்டுப்படுத்துவதற்கு உள்ள முக்கியமான ஆயுதம் தடுப்பு ஊசி போடுவதுதான்.

10 நாட்களில் மூன்று கோடிப் பேருக்கு தடுப்பூசி நம்மால் போட முடியும் என்பதை நிரூபித்து இருக்கிறோம்.

வைரஸ் தொற்று என்ற சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.

இந்தியத் தடுப்பூசி மருந்துகள் உலகமெங்கும் தன்னுடைய முதல் நிலையை உறுதி செய்துள்ளன.

இந்தியாவில் 92 சதவீதம் பேருக்கு நாம் முதல் தடுப்பூசி போட்டு இருக்கிறோம். 70 சதவீதம் பேருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டு இருக்கிறோம்.

எந்த நிலையிலும் நாம் முன்னெச்சரிக்கையாக தொற்று பரவுவதைத் தடுக்க கூட்டாக அணுகுமுறைகளை வகுத்து செயல்பட வேண்டும்.

எவ்வளவு வேகமாக நாம் சுகாதாரத் துறை பணியாளர்களுக்கும் முன்களப்  பணியாளர்களுக்கும் 60 வயதுக்கு அதிகமான பெரியவர்களுக்கும் நாம் தடுப்பூசி கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு நம்முடைய சுகாதார அமைப்பு வலுவுடையதாக மாறும். நமது சுகாதார ஊழியர்கள் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். கட்டுப்பாடுகள் காரணமாக சாதாரண மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும்.

மக்களின் வாழ்வாதார பணிகளுக்கு மிக மிக குறைந்த அளவு பாதிப்பை மட்டுமே நாம் அனுமதிக்கலாம்.. அதே நேரத்தில் நம்முடைய பொருளாதாரத்தின் வளர்ச்சி வேகம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொரானோ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை திட்டமிடும் பொழுது  இந்த முன்னெச்சரிக்கைகளையும் நாம் கட்டாயமாக கவனத்திற்கொண்டு திட்டங்களை வகுக்க வேண்டும்.

எனவே கொரானோ வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு உள்ளூர் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதில் நாம் கவனம் செலுத்துவது சிறந்ததாகும்.

இந்தியாவில் 130 கோடி மக்களும் இணைந்து கொரானோ வைரஸை வெற்றி காண்பார்கள் என்பது சந்தேகமில்லை.

உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு இப்பொழுது விடைகள் கிடைத்து வருகின்றன.

நாம் உஷாராக இருக்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டும். அச்சம் பீதி இல்லாமல் செயல்பட வேண்டும். இந்திய பண்டிகைக்கால கொண்டாட்டங்களின் பொழுது நமது கட்டுப்பாடுகள் தளர்த்தப் படக்கூடாது. அதே நேரத்தில் தடுப்பூசி போடும் பணியிலும் தொய்வு ஏற்பட கூடாது என்று பிரதமர் எச்சரித்தார்.

இரண்டு வார காலத்தில் இந்திய பிரதமர் கலந்து கொள்ளும் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் இது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட அளவிலான சுகாதார உள் கட்டமைப்பை வலுப்படுத்தும்படி மாநில சுகாதாரத்துறைகளை அவர் வலியுறுத்தினார். அதே நேரத்தில் தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விடும்படியும் இந்தியப்பிரதமர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.