எல்லையில் இரும்புக் கம்பி வேலி அமைக்க கூடாது: பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் கண்டனம்

பதிவு செய்த நாள் : 06 ஜனவரி 2022 17:59

ஆப்கானிஸ்தான்

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே உள்ள  2,670 கிலோமீட்டர் டுராண்ட் எல்லையை ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் எல்லையில் சுவரோ, இரும்புக்கம்பி வேலியோ அமைக்கக்கூடாது என்று ஆப்கானிஸ்தான் திட்டவட்டமாக பாகிஸ்தானுக்கு தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள டுராண்ட் எல்லைக் கோடு 1893ல் அமைக்கப்பட்டதாகும்.

இந்த எல்லைக்கோட்டின் நெடுகில் பல இடங்களில் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் பாகிஸ்தான் படைகளுக்கும் பலமுறை மோதல் நிகழ்ந்தது.

டிசம்பர் மாதத்தில் நிம்ரோஸ் மாகாணத்தில் பாகிஸ்தான் படைகளுக்கும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையே கைகலப்பு நடந்தது.

டுராண்டு எல்லையில் முள்கம்பி வேலியை ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் பாகிஸ்தான் கொண்டு வந்துவிட்டது என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் குற்றம்சாட்டியது.

உடனடியாக ஆட்சேபனைக்குரிய பகுதியில் பாகிஸ்தான் அமைத்த முள்கம்பி வேலி ஆப்கானிஸ்தான் ராணுவம் தகர்த்து விட்டது.

அதேபோல கிழக்கு நங்கர்ஹர் மாகாணத்தில் இரண்டு நாடுகளின் படைகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியாகியது.

எல்லையில் கிட்டத்தட்ட 90 சதவீத பகுதிக்கு பாகிஸ்தான் இரும்புக் கம்பி வேலி அமைத்துவிட்டது.

பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தூதரக வழியில் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் தலிபான் கமாண்டர் மாவல்லவி சனாவுல்லா சான்ஜின் ஆப்கானிஸ்தான் டோலோ செய்தி ஏஜென்சிக்கு பேட்டியில் ஜனவரி 5ஆம் தேதி தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இதற்கு முன்னால் அவர்கள் செய்தது என்னவோ அது இருந்துவிட்டுப் போகட்டும் ஆனால் அவர்கள் மேலும் அதே பாதையை பின்பற்றி வேலி அமைப்பதை இனிமேல் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இனிமேலும் வேலி அமைப்பதற்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என்று கூறியதற்கு சான்ஜின் அளித்த பதில் இது என்பது குறிப்பிடத்தகுந்தது.