தமிழகத்தில் இன்று 11வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 மையங்களில் நடைபெறுகிறது - அமைச்சர் நேரில் ஆய்வு

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 11:09

சென்னை

தமிழகத்தில் 11வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது.

சென்னையில் 2 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 7 மணி வரை சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும்.

சென்னையில் நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி முதல் இதுவரை 6.20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தினசரி 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது.

மெகா தடுப்பூசி முகாமில் வழக்கத்தை விட கூடுதலான எண்ணிக்கை தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் வாரத்தில் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை என 2 மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த வியாழக்கிழமை 10-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

11-வது மெகா தடுப்பூசி முகாம் 

இன்று 11-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில்  (நவம்பர் 25ந் தேதி) நடைபெற்று வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

சென்னை - ராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மின்ட்  பேருந்துநிலையம், RSRM மருத்துவமனை அருகில், இந்திராநகர், வாட்டர் டேங்க் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, சுகாதாரத்துறை செயலாளர் ஜெ, ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்

பெரம்பூரில் ஆய்வு

பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சர்மா நகர், விவேகானந்தர் சாலை கொடுங்கையூர், முத்தமிழ் நகர், சேலவாயல் ஆகிய பகுதிகளில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்