சையத் முஸ்டாக் அலி கோப்பையை வென்ற தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 23 நவம்பர் 2021 11:47

சென்னை

“சையத் முஸ்டாக் அலி கோப்பை” டி20 கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தி விவரம்:

“சையத் முஸ்டாக் அலி கோப்பை” கிரிக்கெட் போட்டியில்  தொடர்ந்து 2-ஆவது முறையாக வாகை சூடியிருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு என்னுடைய வாழ்த்துகள்!

ஷாருக் கான், சாய் கிஷோர் உள்ளிட்ட இளம் திறமையாளர்கள் சிறப்பான- துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். எல்லோரும் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!

இவ்வாறு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் கோப்பை

டெல்லியில் நேற்றைய தினம் (22-11-2021) சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் நமது தமிழ்நாடு அணியும், கர்நாடகா அணியும் மோதின. முதலில் களமிறங்கிய கர்நாடகா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களை எடுத்திருந்தது.

இதனால் 152 ரன்கள் எடுத்தால் இரண்டாவது முறை கோப்பை தமிழ்நாட்டிற்கு என்று பேட்டிங் செய்ய நம் தமிழக வீரர்கள் களம் இறங்கினர்.

குறிப்பாக கடைசி நேரத்தில் ஷாருக்கான் அடித்த சிக்ஸர் மூலம் இரண்டாவது முறையாக தமிழ்நாடு அணி சையது முஷ்டாக் அலி கோப்பையை வென்றது.

சையது முஷ்டாக் அலி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்ற தமிழ்நாடு அணிக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.