தமிழகத்தில் அமலாகும் நலத் திட்ட விவரங்களை ஆளுநர் கோரியதாக தகவல்

பதிவு செய்த நாள் : 26 அக்டோபர் 2021 13:16

சென்னை, அக்டோபர் 26,

தமிழகத்தில் அமல்செய்யப்படும் மத்திய மாநில அரசுகளின் நலத் திட்ட விவரங்களை ஆளுநர் கோரியதாக தமிழக அரசு தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆளுநரின் கோரிக்கையைத் தொடர்ந்து தமிழகத்தில் அமல் செய்யப்படும் மத்திய மாநில சமூக நலத் திட்டங்களின் விவரங்களை பவர்பாயின்ட் பிரசெண்டேஷன் ஆகத் தயார் செய்யும்படி மாநில தலைமைச் செயலாளர் இறையன்பு, அரசு இலாகாக்கள் தலைவர்களுக்கு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அமல் செய்யப்படும் நல்ல திட்டங்கள் பற்றிய விபரங்களை பவர்பாயின்ட் பிரசெண்டேஷன் ஆக தயார்செய்து வைத்தவர்கள் எப்பொழுது அவை தேவைப்படும் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாநில அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியதாக தெரிகிறது.

மாநில அரசு நடைமுறைகளை ஆய்வு செய்வதும் மேற்பார்வையிடுவதும் மாநில அரசின் நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு சமமானதாகும் என்று திமுக எதிர்க்கட்சியாக இருந்த பொழுது கருத்து தெரிவித்தது.

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் பல மாவட்டங்களுக்கு நேரில் சென்று அந்தந்த மாவட்டங்களில் அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்தபோது அதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது அத்துடன் ஆளுநருக்கு எதிராக அந்தந்த மாவட்டங்களில் திமுகவினர் கருப்புக் கொடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழகத்தில் திமுக அரசு நடைபெற்று வருகிறது. முந்தைய ஆளுநர் தமிழகத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டார்.

அவருக்குப் பதிலாக ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என். ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றுக்கொண்டார் அதற்குப் பிறகு அக்டோபர் மாதம் 23 24 ஆகிய தேதிகளில் டெல்லிக்குச் சென்று பிரதமரையும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து தமிழகம் திரும்பியுள்ளார்.

தமிழக ஆளுநர் சென்னை திரும்பியதும் தமிழகத்தில் அமல் செய்யப்படும் நல்ல திட்டங்கள் பற்றிய விவரங்களை தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் கூறியிருப்பதாக தெரிகிறது.