பிஎஸ்எப் அதிகாரத்தை கூட்ட வேண்டாம்: பஞ்சாப் சர்வ கட்சி கூட்டம் கோரிக்கை

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 23:08


சண்டிகர், அக்டோபர் 25,

எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பை 15 கிலோமீட்டர் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிகரித்து மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை கைவிடும்படி பஞ்சாப் முதல்வர் தலைமையில் நடந்த சர்வ கட்சி கூட்டத்தில் திங்களன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமரை சந்தித்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்த அவகாசம் கோருவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் முதல்வர் சன்னி கூட்டிய சர்வ கட்சி கூட்டத்தை பாரதிய ஜனதா கட்சி புறக்கணித்து விட்டது. தேச நலன் கருதி தான் எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மாநில பாஜக தலைவர் அறிவித்தார்.

பஞ்சாப் முதல்வர் கூட்டிய சர்வ கட்சி கூட்டத்தில் காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், ஆம் ஆத்மி, சிபிஎம், சிபிஐ, திரிணாமுல் காங்கிரஸ் ,லோக் இன்சாஃப் கட்சி ஆகியவை கலந்துகொண்டு ஏகமனதாக மத்திய அரசு தனது புதிய சுற்றறிக்கை வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றின.

சர்வகட்சி கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் முதல்வர் சன்னி மாநில அரசு 2 திட்டங்களை வைத்துள்ளது என்றார்.

1.பஞ்சாப் மாநில சட்டமன்றத்தை கூட்டுவது

2. உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்வது.

இத்திட்டங்களை அமல் செய்யும் முன்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சர்வகட்சி குழுவினரோடு சந்தித்து மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையைவாபஸ் பெறும்படி கோருவது என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது என முதல்வர் சன்னி கூறினார்.

செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் சித்து, மத்திய அரசு புதிய புதிதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கை கூட்டாட்சி அமைப்பு முறைக்கு விரோதமானது என்று குற்றம்சாட்டினார்.