ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிக்குப் பதிலாக பேனாவை மாற்றுவதில் வெற்றி: அமித்ஷா பேச்சு

பதிவு செய்த நாள் : 25 அக்டோபர் 2021 22:08


ஸ்ரீநகர், அக்டோபர் 25,

ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் தால் ஏரிக்கரையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்பொழுது, ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிக்குப் பதிலாக பேனாவை மாற்றுவதில் வெற்றி பெற்றுள்ளோம் என்று குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீரில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா மூன்றாவது நாளான இன்று ஸ்ரீ நகரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசினார்.

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக வந்துள்ள அமித்ஷா தனது 3 நாள் சுற்றுப் பயணத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்முவில் ஞாயிற்றுக்கிழமை யன்று பொதுக்கூட்டத்தில் பேசினார் .

மூன்றாவது நாளான திங்கட்கிழமை அன்று ஸ்ரீ நகரில்  கூட்டத்தில் பேசினார்.

இரண்டு கூட்டங்களிலும் பயங்கரவாதம் முக்கியமான கருத்தாக இடம்பெற்றது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்கும் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.

 அதனால் மக்களின் வாழ்க்கை நிலைமை மேம்பாடு அடைந்துள்ளது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டார்.

சொற்பொழிவின் போது தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை அவர் கடுமையாகச் சாடினார். பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

 நான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டேன். நான் யாருடனாவது பேச்சுவார்த்தை நடத்துவது என்றால் அது ஜம்மு காஷ்மீர் மக்களுடனும் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுடன் தான் பேசுவேன் என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் ஊரடங்கு ஏன் அமல் செய்யப்பட்டது, இன்டர்நெட் தொடர்புகள் துண்டிக்கப்பட்டது ஏன் என்று பலர் சரமாரியாக வினாக்களை எழுப்பி உள்ளனர். அவர்களுக்கு இன்று நான் பதில் கூறுகிறேன். நம்முடைய இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகவே இங்கு ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

சுயய நலசக்திகள் ஜம்மு-காஷ்மீர் சூழ்நிலையைப் பயன்படுத்தி இளைஞர்களை தெருவில் இறக்கி விட்டு, துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்க அனுமதிக்க கூடாது என்ற காரணத்தினால் தான் தடைகள் அறிவிக்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் வரும் 2024 ஆம் ஆண்டு அதன் மக்களுக்கு என்ன தேவையோ அதை அடையும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்.

தேசிய மாநாட்டுக் கட்சியும் மக்கள் ஜனநாயக கட்சியும் ஜம்மு காஷ்மீரை மாற்றி மாற்றி ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள்.

 அவர்களில் ஒருவர்கூட வன்முறையை கண்டிக்கவில்லை.

சூழ்நிலையை பயங்கரவாதிகள் பயன்படுத்த அனுமதிக்கும் காலம் மலையேறிவிட்டது. இனிமேல் சாதாரண பொது மக்களைக் கொல்ல யாரையும் அனுமதிக்க மாட்டோம். ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலைபெறும் என்று உங்களுக்கு நான் உறுதியளிக்க விரும்புகிறேன்.

ஜம்மு காஷ்மீரை அதன் மக்கள் ஆளுகின்ற காலம் வந்துவிட்டது.

இங்கு ஒரு முதலமைச்சர் இருந்தார். அவர் 6 மாதங்கள் லண்டனில் இருப்பார்.

ஜம்மு காஷ்மீர் மக்கள் இப்பொழுது பஞ்சாயத்து, கிராம நிர்வாகிகளாக பொறுப்பேற்று இருக்கிறார்கள் . அவர்கள் முதல்வர்களாகவும் ஆட்சி செய்வார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு மருத்துவக் கல்லூரிகளை வழங்கியிருக்கிறார் .உங்களுக்கு என்ன தேவையோ அந்த அமைப்புகள் எல்லாம் இங்கேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன.

நடந்த பஞ்சாயத்து தேர்தலுக்குப் பிறகு முப்பதாயிரம் பேர் பஞ்சாயத்து அமைப்புக்களை நிர்வாகம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

சமையல் எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது.

குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

எல்லா ஏழை குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு தரப்பட்டுள்ளது.

இலவச மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

அப்துல்லாவும் முப்தியும் முதல்வர்களாக 70 ஆண்டுகாலம் ஆட்சி செய்தார்கள். அவர்கள் இந்த வசதிகளை மக்களுக்கு வழங்கவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் இப்பொழுது பயங்கரவாதம் குறைந்து வருகிறது. துப்பாக்கிகளுக்கு பதிலாக பேனாக்களை இளைஞர்கள் கையில் தருவற்கான முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

இவர்கள் பாகிஸ்தானுடன் பேசு ஹுரியத் அமைப்புடன் பேசு என்று கூறுகிறார்கள். எப்பொழுதும் தங்கள் ஆட்சி வேண்டும் என்பதற்காக காஷ்மீர் பொருளாதாரத்தின் கழுத்தை இவர்கள்

நெரித்தார்கள் .

இப்பொழுது துப்பாக்கிக்கு பதிலாக பேனாவைத் தருவதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். பயங்கரவாதத்தின் மையமாக விளங்கிய புல்வாமாவில் இப்பொழுது அமைதி திரும்புகிறது.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.